Published:Updated:

நித்தமும் நீளும் நித்தியின் சேட்டைகள்!

நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்யானந்தா

சில தினங்களுக்கு முன்பு குஜராத் காவல்துறையினர் இங்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

நித்தமும் நீளும் நித்தியின் சேட்டைகள்!

சில தினங்களுக்கு முன்பு குஜராத் காவல்துறையினர் இங்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

Published:Updated:
நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்யானந்தா

நித்யானந்தா பெரும்பதற்றத்திலும் பயத்திலும் இருப்பது, அவருடைய லேட்டஸ்ட் வீடியோ மூலம் தெரியவந்திருக் கிறது. அந்த வீடியோவில்தான், ஜூனியர் விகடனுக்கு ‘சூனியர் விகடன்’ என்று நாமம் சூட்டி மகிழ்ந்திருக்கிறார் நித்தி. ஆசிரமம் ஆரம்பித்தது முதல் கைலாசா நாடு அமைத்தது வரையிலான தனது வளர்ச்சியே, தன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களால் வந்ததுதான் என்று பக்தர்களை மூளைச்சலவை செய்திருக்கிறார்.

வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதோடு, தன் தனிச்செயலாள ராக இருந்த ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களையும் தான் வசிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் நித்யானந்தா. சர்மாவின் இரண்டு மகள்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று அகமதாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஆஜராக வாயப்பில்லை என்றே தெரிகிறது.

இதற்கிடையில், நித்யானந்தா விவகாரத்தில் மத்திய அரசு வீரியமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகே, ‘நித்யானந்தாவுக்கு எந்த அடைக்கலமும் தரவில்லை. எங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தத் தீவையும் அவர் வாங்கவில்லை’ என்று மறுத்திருக் கிறது ஈக்வடார் அரசு. ஈக்வடார் நாட்டிலிருந்து ஹெய்ட்டி என்ற நாட்டுக்கு நித்யானந்தா சென்ற பிறகே ஈக்வடார் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என்ற சந்தேகமும் வெளியுறவுத் துறைக்கு ஏற்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நித்தி மீது நிறைய வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவருடைய பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துத் தர மத்திய அரசு மறுத்துவிட்டது. பாஸ்போர்ட் இல்லாமலேயே சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள நித்யானந்தா, ‘மதுரை மீனாட்சியின் அருளால் தனக்கு கைலாசா என்ற நாடே அமைந்துவிட்டது’ என்று அள்ளிவிட்டிருக்கிறார். கைலாசாவில் புலம்பெயர்ந்த தமிழர்களைக்கொண்டு தமிழ்ச்சங்கம் ஒன்றை விரைவில் தொடங்க இருப்பதாவும், சைவ தமிழ் இலக்கியங்களுக்கு அந்தத் தமிழ்ச்சங்கத்தின்மூலம் புத்துயிர் கொடுக்கப்போவதாகவும் கதையளந்துள்ளார்.

நித்யானந்தா
நித்யானந்தா

நித்தியின் வீடியோ பதிவுகளைவைத்து விசாரித்துவரும் குஜராத் காவல்துறையினர், அவரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ள இன்டர்போல் உதவியையும் கேட்டிருக்கிறார்கள். ஆனால், நித்தியின் இருப்பிடம்குறித்த சரியான தகவல்கள் இதுவரை குஜராத் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை என்பதால், மத்திய அரசிடமும் உதவி கோரப்பட்டுள்ளது. நித்தியின் வீடியோக்களை ஆய்வுசெய்தபோது, அமெரிக்கத் தொடர்பு எண் வழியாக இந்த வீடியோக்கள் பதிவேற்றப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நித்தியின் குழுவில் தலைசிறந்த கணினிப் பொறியாளர்கள் இருக்கின்றனர். ஒரு வீடியோவை அப்லோடு செய்தால், அந்த இடத்தை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு தொழில்நுட்பத்திறன் உள்ளவர்கள் அவர்கள். அத்துடன் நித்தியின் சிஷ்யர்கள் பலரும் பல்வேறு போலிக்கணக்குகளை சமூக வலைதளங்களில் வைத்துள்ளனர். அவர்கள் மூலம் இந்த வீடியோக்களைப் பதிவேற்றம் செய்தால், எங்கிருந்து பதிவேற்றம் நடந்தது, யார் மூலம் பதிவேற்றம் நடந்தது என எதையும் கண்டறிய முடியாது. இந்த உத்தியை பிடதியில் இருக்கும்போதே நித்தி பலமுறை சோதனை முயற்சியாகச் செய்துபார்த்துள்ளா ராம்.

பிடதி ஆசிரமத்தை இப்போது மா அச்சலா என்பவரே மேற்பார்வை செய்துவருகிறார். சில தினங்களுக்கு முன்பு குஜராத் காவல்துறையினர் இங்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மா அச்சலாவின் தொடர்பு எண்ணுக்கு நாம் தொடர்புகொண்டபோது, நம்மிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார். நித்தியின் நம்பிக்கைக்குரிய நபராக விளங்கிய ரஞ்சிதாவும் இப்போது நித்தியின் இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்.

மற்றொருபுறம் மத்திய அரசை சரிக்கட்டுவதற்கு சென்னையைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவரிடம் நித்தி சார்பில் இருவர் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது. ‘மத்திய அரசு இந்த விவகாரத்தில் கொஞ்சம் அடக்கிவாசிக்கவேண்டும்’ என்று அவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். நித்திக்கு எதிராக, இதுவரை அமைதியாக இருந்தவர்கள் பலரும் பேச ஆரம்பித்திருப்பதால், அவர்களை தனித்தனியாகச் சந்தித்துச் சரிகட்டும் வேலையையும் செய்ய ஆரம்பித்துள்ளதாம் ஒரு டீம்.

- லியானா

படம்: www.nithyananda.org

அன்னாசிப்பழ கர்ப்பம் முதல் ஆனந்த நடனம் வரை!

நித்தமும் நீளும் நித்தியின் சேட்டைகள்!

நித்யானந்தா பேசியுள்ள வீடியோவில் ‘2003-ல சூனியர் விகடன்ல அன்னாசிப்பழ கர்ப்பம்னு முதல் முதலா ஆர்ட்டிகிள் போட்டாங்க’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிடும் 17.8.2003 தேதியிட்ட ஜூ.வி இதழ், ‘ஆனந்த நடனம்... அன்னாசிப் பழ கர்ப்பம்? பிரபல சுவாமிஜிக்கு எதிராகப் பீறிடும் வலம்புரிஜான்!’ என்ற அட்டைப்படத்துடன் வெளியாகியிருந்தது. அதில் ‘ஹீலிங் டச்’ என்ற தொடு சிகிச்சை, அன்னாசிப்பழ கர்ப்பம், ஆனந்த நடனம், வசூல்வேட்டை என நித்யானந்தாவின் நிஜ முகம் தோலுரித்துக் காட்டப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா குறித்து மறைந்த எழுத்தாளர் வலம்புரிஜான் நமக்கு அளித்த பேட்டியும் வெளியாகியிருந்தது. “அவர் ஞானகுருதான்; அதை மறுக்கவில்லை. ஆனால், எனக்கு இருந்த சிறுநீரக நோய்க்கு அவரால் குணமளிக்க முடியவில்லை. வலது நாசியால் தொடர்ந்து சுவாசித்தால் உடல் சூடேறும். அந்தச் சூட்டோடு ஒருவரைத் தொட்டால், சூட்டை அவர் உணர முடியுமே தவிர அதனால் நோய் குணமாகாது. இந்த வித்தையை (ஹீலிங் டச்) சுவாமிகள் கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்துவதை உணர்ந்தேன்” என்று குற்றம்சாட்டியிருந்தார். அந்தக் கட்டுரையைத்தான் நித்யானந்தா இப்போது குறிப்பிடுகிறார்.