Published:Updated:

தி.மலை: `முட்டி போடு... மன்னிப்புக் கேளு!’ அரசுப் பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்

அரசுப் பள்ளி மாணவர்மீது தாக்குதல்
அரசுப் பள்ளி மாணவர்மீது தாக்குதல்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரை, முட்டிபோடவைத்து, கொடூரமாகத் தாக்கியதுடன் அந்த வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் வெளியிட்ட மாணவர்களை பதிலுக்கு எதிர்த் தரப்பினர் தாக்கிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே தங்களுக்குள் யார் `கெத்து’ என்பது தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதலும் நடைபெற்றுவந்திருக்கிறது. அதில் சீனியர் மாணவர்கள் தங்கள் கெத்தைக் காட்ட முயன்ற இடத்தில்`தர்ம அடி’ வாங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிரணியைச் சேர்ந்த மாணவர்கள் அதைப் பார்த்து சிரித்திருக்கின்றனர்.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

அதனால், ஆத்திரமடைந்த அடிவாங்கிய ஒல்லியான மாணவர் ஒருவர், எதிரணியைச் சேர்ந்த ஜூனியர் மாணவர் ஒருவரை பள்ளி மைதானத்திலுள்ள குட்டிச்சுவர் அருகில் வைத்து சரமாரியாகத் தாக்குகிறார். அந்த ஒல்லியான மாணவர் குத்துச்சண்டை வீரர்போல தொடர்ந்து தாக்க, அடி வாங்கும் மாணவர் `எனக்கு தெரியாதுண்ணா’ என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் வலி பொறுக்க முடியாமல் ஓடும் அந்த மாணவரை மீண்டும் பிடித்து `யாருன்னு சொல்லுடா’ என்று கேட்டு கொடூரமாகத் தாக்கியதுடன், முட்டிபோடச் சொல்லி மிரட்டுகிறார்.

அப்போது டீ-ஷர்ட் அணிந்து அங்கு வந்த மற்றொரு மாணவர் ஒருவர் அவர்களைச் சமாதானப்படுத்துவதுபோல மீண்டும் குட்டிச்சுவர் அருகே அழைத்துச் செல்கிறார். அங்கு புதிதாக வந்த மாணவரும் ஜூனியர் மாணவரை முட்டிபோடவைத்து `யாரு அப்படிச் செய்தது?’ என்று கேட்டு கடுமையாகத் தாக்குகிறார். அத்துடன் தலைக்கு மேல் கும்பிட்டு மன்னிப்பும் கேட்கச் சொல்கிறார். அப்போது மீண்டும் களத்தில் இறங்கிய அந்த ஒல்லி மாணவர், `இப்போகூட உன்னை அடிக்கணும்னு அடிக்கலை. அவன் கிடைக்கலை... அதான் உன்னை அடிக்கிறேன். எங்கிருந்தாலும் அவன் வந்தே ஆகணும்’ என்று சொல்லி மீண்டும் தாக்கிவிட்டு `ஓடு...’ என்கிறார்.

Vikatan

இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக அடி வாங்கிய மாணவர் தன் சக மாணவர்களிடம் இந்தச் சம்பவத்தை கூற, பதிலுக்கு அவர்கள் மேற்கண்ட இரண்டு மாணவர்களையும் வழிமறித்துத் தாக்கி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இந்த வீடியோ காட்சிகள் பெற்றோர்களைப் பதறவைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு