Published:Updated:

நித்தியானந்தா சொன்ன `கரன்ஸி' கதை... கைலாசா கனவுக்கு கரீபியனில் திட்டம்!

``நித்தியானந்தா இப்போது எங்கிருக்கிறார் என்பதைக்கூட அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், கொரோனாவுக்குப் பிறகு நாடுவிட்டு நாடு செல்ல முடியாமல் ஒரே இடத்தில் இருக்கிறார்.’’

`விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா, கைலாசா பணம் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும். வாடிகன் பேங்க்கை மையமாகவைத்து இந்த ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா செயல்படும்’ என்று நித்தியானந்தா தரப்பிலிருந்து செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

` 'கைலாசா' என்கிற நாட்டை உருவாக்கி, அதன் அதிபராக நித்தியானந்தா இருக்கப்போகிறார். அதற்கான பணிகள் வேகமெடுத்துவருகிறது’ என்று சில மாதங்களுக்கு முன்பாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தாக்கத்தால் நித்தியானந்தாவின் கைலாசா விவகாரம் சற்று ஓய்ந்திருந்தது. இந்தநிலையில் `ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா' என்ற அறிவிப்பை வெளியிட்டு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் நித்தியானந்தா.

"எவ்வளவு நாளைக்குத்தான் அடிப்பாங்கனு பார்ப்போம்!" - நள்ளிரவில் கலகலத்த நித்தியானந்தா

கைலாசா விவகாரம் குறித்தும், நித்தியானந்தாவின் நாணயம் குறித்தும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, ``கைலாசா என்று பல மாதங்களாக நித்தியானந்தா தரப்பில் சொல்லப்பட்டுவருகிறது. அந்த நாடு இதுவரை எங்கிருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?இந்திய அரசின் தேடப்படும் குற்றவாளியாக நித்தியானந்தா இருக்கிறார். ஒரு நாட்டை அவர் நிர்மாணித்தால், அது இந்திய அரசுக்குத் தெரியாமல் இருக்குமா? உண்மையில் கைலாசா என்கிற நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். ஆனால், அதற்குத் தேவையான இடம் மற்றும் அதிகாரபூர்வ ஒப்புதல் போன்றவற்றில் சிக்கல் இருக்கிறது.

நித்தியானந்தா
நித்தியானந்தா

இந்தியாவில் சர்ச்சைக்குரிய சாமியாராக விளங்கிய சந்திராசாமி பாணியில், தனது பல ஆயிரம் கோடி கரன்ஸிகளை மடைமாற்றும் வேலையில் இப்போது ஈடுபட்டுவருகிறார்.

சரி, நித்தியானந்தா இப்போது எங்கிருக்கிறார் என்பதைக்கூட அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், கொரோனாவுக்குப் பிறகு நாடுவிட்டு நாடு செல்ல முடியாமல் ஒரே இடத்தில் இருக்கிறார். கரிபீயன் கடலிலுள்ள `பர்படாஸ்’ என்கிற குட்டித் தீவில்தான் இப்போது இருக்கிறார். சுற்றுலாத்துறையே அந்தத் தீவின் பிரதான வருமானம். மிகக்குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட அந்தத் தீவின் அரசுப் பிரதிநிதிபோல நித்தி அங்கு இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நித்யானந்தா, கைலாசா... புது கரன்சி!? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ஆனால், அவரது திட்டம், `விரைவில் அந்தத் தீவிலிருந்து இடம்பெயர வேண்டும். புதிய நாட்டை கட்டமைக்க வேண்டும்’ என்பது. அதற்கான பணிகள் ஒருபுறம் நடந்துவரும் நிலையில்தான், தனது நாட்டின் கரன்ஸி விவகாரத்தை அறிவித்துள்ளார். அதற்குக் காரணம், இந்தியாவைவிட்டு அவர் வெளியேறிய பிறகு உலகம் முழுவதுமுள்ள அவருடைய பக்தர்கள் மூலம் பெரும் பணத்தை வசூல் செய்துள்ளார் நித்தியானந்தா. அந்தப் பணத்துக்குக் கணக்குக் காட்டவும், தன்னிடம் பணம் அளித்தவர்களின் வாயை அடைக்கவுமே ரிசர்வ் வங்கி என்கிற அஸ்திரத்தை இப்போது அறிவித்துள்ளார். ஒரு நாட்டின் பணம் என்பது காகிதம் அல்ல; அந்த நாட்டின் தங்கத்தை மதிப்பீடாகக் கொண்டது. நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்திலிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, அவருடைய சிஷ்யர்கள் அங்கிருந்து கடத்திச் சென்றதையும், நித்தியானந்தா அறிவித்துள்ள ரிசர்வ் வங்கிக் கதையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

நித்தியானந்தா ஆசிரமம்
நித்தியானந்தா ஆசிரமம்

உண்மையில், இந்தியாவில் மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் நித்தியானந்தாவுக்கு வங்கிக் கணக்குகள் உள்ளன. அவற்றிலுள்ள பண முதலீடுகள் மலைக்கவைக்கும்விதத்தில் உள்ளன. நித்தியானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கி ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறார் என்றால், அதற்குப் பின்னாலுள்ள சக்திகளையும், கரன்ஸிகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும். ஆனால், இந்த நித்தியின் அறிவிப்புக்குப் பின்னால் சில தந்திரங்களும் உள்ளன. அது விரைவில் வெடிக்கும்போது, மத்திய அரசே அவரை வலைவீசித் தேடும் நிலை உருவாகப்போகிறது” என்று சொல்லி அதிரவைக்கிறார்கள்.

`கடல் கடந்து நித்தி நடத்தும் நாடகம் முடிவுக்கு வருவது எப்போது...’ என்கிற எதிர்பார்ப்பு அவரால் பாதிக்கப்பட்டவர்களிடம் எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு