Published:Updated:

பொறியியலுக்கு எதற்கு பகவத் கீதை?

அண்ணா பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா பல்கலைக்கழகம்

தொடர் சர்ச்சையில் அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியலுக்கு எதற்கு பகவத் கீதை?

தொடர் சர்ச்சையில் அண்ணா பல்கலைக்கழகம்

Published:Updated:
அண்ணா பல்கலைக்கழகம்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணா பல்கலைக்கழகம்

சர்ச்சைகள் என்றால், சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுகிற மாதிரியாகிவிட்டது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு! ஏற்கெனவே தேர்வுத்தாள் முறைகேடுகள், ஊழல் என, பல்வேறு சர்ச்சைகளைச் சம்பாதித்துவந்த அந்தப் பல்கலைக்கழகம், இப்போது பகவத் கீதை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் அறிவுறுத்தலின்பேரில், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., ஏ.சி.டி., எஸ்.ஏ.பி., சி.இ.ஜி உள்ளிட்ட அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்வி அமைப்புகளில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தத்துவவியல் படிப்பும், பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மூன்றாவது செமஸ்டரில் இந்தப் படிப்பு சேர்க்கப்படும் என்றும் அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

பொறியியலுக்கு எதற்கு பகவத் கீதை?

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, ‘`மேலைநாடுகளில் சாக்ரடீஸ், பிளாட்டோ உள்ளிட்ட தத்துவமேதைகளின் தத்துவங்கள், பொறியியலில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்தான் பகவத் கீதையை வைத்துள்ளோம். தவிர, அது விருப்பப் பாடம் மட்டுமே. விரும்புபவர்கள் படிக்கலாம்’’ என்று பத்திரிகையாளர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா. ஆனால், இது சப்பைக்கட்டு என்று கொந்தளிக்கிறார்கள் கல்வியாளர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியிடம் பேசினோம். “பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் நன்னெறி தொடர்பான பாடத்திட்டத்தைக் கொண்டுவருவதில் தவறில்லை. நான் துணைவேந்தராக இருந்த காலத்தில்கூட அப்படி கொண்டுவந்திருக்கிறேன். ஆனால், அதில் மத அடையாளங்களைத் திணிக்கவில்லை. தற்போது பகவத் கீதையைச் சேர்த்திருப்பது தேவையற்ற செயல். பொறியியல் பாடத்திட்டத்தில் மதம்சார்ந்த நூல்களின் தேவை எங்கிருந்து வந்தது? பகவத் கீதை, நன்னெறி நூலே கிடையாது; இந்து மதம் சார்ந்த ஆவணம். பகவத் கீதையை அறிமுகப்படுத்த முடிவு எடுத்தால், குர்ஆனையும் பைபிளையும் சேர்த்து அறிமுகப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, பகவத் கீதையை மட்டும் படிக்கலாம் எனச் சொல்வது தவறு. தனது வரலாற்றில் மிகப்பெரிய தவற்றைச் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்” என்றார் கொதிப்புடன்.

பொறியியலுக்கு எதற்கு பகவத் கீதை?

பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழகத் தலைவரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான ராஜலட்சுமியிடம் பேசினோம்.

“நான் கிறிஸ்துவ கான்வென்ட்டில்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அங்கே மதபோதனையும் இருந்தது. அதற்காக நான் மதம் மாறிவிட்டேனா? தற்போது தத்துவவியலில் ஒரு பகுதியாக, விருப்பப் பாடமாகத்தான் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. சிறுபான்மைக் கல்விக்கூடங்கள் உட்பட பெரும்பான்மையான கல்வி நிலையங்களில் தற்போது மதம்சார்ந்த போதனைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அத்தனை போதனைகளுமே மனிதன் நல்லவனாக வாழ வேண்டும் என்கிற ஒரே கொள்கையை மட்டும்தான் வலியுறுத்துகின்றன. அதனால் பல்கலைக்கழகத்தின் முடிவு தவறு இல்லை. இதை அரசியலாக்குவதும் அதற்கு பா.ஜ.க-வை காரணம் காட்டுவதும் தவறு” என்றார்.

பேராசிரியர் கருணானந்தம், “பகவத் கீதையை, தத்துவமாக்க முயற்சி செய்கிறார்கள். கீதை தத்துவமெனில், சைவ சித்தாந்தமும் தத்துவம்தான். ஆக, இவர்களுடைய நோக்கம் மதத்தையும் பண்பாட்டையும் கலந்து நம்மிடம் திணிப்பதுதான். ‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்...’. அதாவது, ‘அந்தந்தத் தொழில்களைச் செய்ய வேண்டிய நான்கு வர்ணங்களை, நான் (கடவுள்) படைத்தேன்’ எனக் கூறுகிறது பகவத் கீதை. இதுதான் தத்துவமா? சாக்ரடீஸை பகவத் கீதையுடன் ஒப்பிடுவதும் பொருந்தாது. மதம் என்றாலே, விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்று பொருள். ஆனால் கல்விக்கூடம் என்பது, விவாதம் நிகழ்த்தபட வேண்டிய இடம். அங்கே மதத்தைப் பாடமாகக் கொண்டுவருவது அப்பட்டமான ஜனநாயக அத்துமீறல். தொழில்நுட்பக் கல்விக்கும் மதபோதனைக்கும் என்ன தொடர்பு என்கிற சிந்தனையாவது கவுன்சிலைச் சேர்ந்தவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் அறிவிக்கப்பட்டதை அமல்படுத்துவதற்கு முன்பே இவர்கள் ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். துணைவேந்தராக இருக்கும் சூரப்பா, ஆளுநரின் பரிந்துரையில் நியமிக்கப்பட்டவர். அவர் அப்படித்தான் செயல்படுவார்” என்றார்.

பள்ளிக்கல்வித் துறை 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்தது, அண்மையில் பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது விருப்பப்பாடப் பிரிவில் கீதையை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். பள்ளிகளில் பொதுத்தேர்வும், பல்கலைக் கழகங்களில் விருப்பப்பட முறையும் புதிய கல்விக்கொள்கை வரைவில் குறிப்பிடப் பட்டிருந்தது கவனிக்கத்தக்கது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism