Published:Updated:

சென்னை சென்று விளக்கம்.. பாய்ந்த அரசியல் கட்சிகள்..பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வாணியம்பாடி கமிஷனர்

தள்ளுவண்டியைச் சாய்த்த நகராட்சி கமிஷனர்
தள்ளுவண்டியைச் சாய்த்த நகராட்சி கமிஷனர்

பழங்களோடு இருந்த தள்ளுவண்டியை குப்புறக் கவிழ்த்த விவகாரத்தில், வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளிலிருந்து பழக்கூடைகளையும் காய்கறிகளையும் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சிசில் தாமஸ், வீதியில் தூக்கி வீசினார். பழங்களோடு இருந்த தள்ளுவண்டியையும் குப்புறக் கவிழ்த்து, வியாபாரிகளைக் கடுமையாக எச்சரித்தார். கமிஷனரின் இந்த இரக்கமற்ற செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

கனிமொழி
கனிமொழி

‘‘ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா... உணவுப் பொருள்களைக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? நகராட்சி கமிஷனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தி.மு.க -வின் மக்களவைக் குழு துணைத் தலைவரான கனிமொழி எம்.பி வலியுறுத்தியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக, ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து நகராட்சி கமிஷனர் மீது வழக்குப் பதிந்தது.

வியாபாரிகளிடம் இரக்கமற்ற முறையில் நடந்துகொண்டது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, நகராட்சி நிர்வாக ஆணையருக்கும் நகராட்சி கமிஷனருக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் (பொறுப்பு) தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்துக்கு இன்று அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார் கமிஷனர் சிசில் தாமஸ்.

மன்னிப்பு கேட்டு நிவாரணம் வழங்கிய நகராட்சி கமிஷனர்
மன்னிப்பு கேட்டு நிவாரணம் வழங்கிய நகராட்சி கமிஷனர்

அங்கு, சம்பவம் குறித்து உயரதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் கொடுத்தார். ஆனாலும், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் கமிஷனர் பொறுப்பிலிருந்து சிசில் தாமஸ் விலக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் சிசில் தாமஸ் அதிர்ச்சியில் உள்ளார். வாணியம்பாடி நகராட்சி கமிஷனராக மேல்விஷாரம் நகராட்சியின் இன்ஜினீயர் பாபு, தற்காலிக பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு