Published:Updated:

பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிக்கயிறு... விளைவுகள் எத்தகையது?

விகடன் டீம்

பட்டியலின மாணவர்களுடன் அவர்கள் கலந்துவிடக் கூடாது, ஒன்றாகச் சாப்பிட்டுவிடக்கூடாது, விளையாடக்கூடாது என்ற நோக்கத்தில்தான்

caste issues
caste issues

'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாடப்புத்தகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் கைகளில் சாதிக்கயிறு என்றால் அது எவ்வளவு பெரிய அவமானம்! https://bit.ly/2MwKrAu

பள்ளி முழுதும் ஒரே சீருடை. ஆனால் பள்ளி மாணவர்களின் கைகளில் வெவ்வேறு வண்ணங்களில் சாதிக்கயிறுகள் என்றால் அது சமத்துவத்துக்கு விழுந்த சம்மட்டி அடி அல்லவா? குறிப்பாகத் தென்மாவட்டங்களில்தான் இந்த நிலைமை வலுவாக இருக்கிறது. சாதி என்னும் நஞ்சைப் பள்ளி மாணவர்கள் மனதில் விதைத்து, அதை உரம் போட்டு வளர்க்கின்றன சாதிச்சங்கங்கள்.

'தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதிப்பிரிவுகளைக் குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளைக் கட்டி வரும் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்குத் தலைமை ஆசிரியர்கள் அறிவுரை கூற வேண்டும். பாகுபாடுகள் காட்டுவோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் குறிப்பிட்ட வண்ணக் கயிறுகள், வளையங்களை அணிந்து வரக் கூடாது. அதுபோல் சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் நெற்றியில் திலகமிட்டு வர அனுமதிக்கக் கூடாது' என்று, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பினார். அதுவும் இத்தகைய சாதிக்கயிறுகள் மாணவர்களிடம் சாதி மோதல்களை ஏற்படுத்துவதாகப் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையை முன்வைத்தே, பள்ளிக்கல்வித்துறை இந்தச் சுற்றறிக்கையைப் பள்ளிகளுக்கு அனுப்பியது.

இந்த அடையாளத்தைப் பார்த்துதான் சக மாணவர்களுடன் அமர்வார்கள். அவர்களுடன்தான் பழகுவார்கள். மாணவர்கள் மட்டுமல்ல, சாதிப்பாகுபாடு பார்க்கும் ஆசிரியர்களும் உண்டு

சமூகநலனில் அக்கறையுள்ள அத்தனை பேரும் இதைப் பாராட்டினார்கள். ஆனால் வழக்கம்போல், சர்ச்சையைக் கிளப்பினார் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இந்துமுன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் போன்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே பா.ஜ.க ஆட்டும் கயிற்றுக்கு ஏற்ப ஆடும் தமிழக அரசும் கயிற்று விஷயத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றி விமர்சனங்களுக்கு ஆளானது.

இப்போதும் தென்மாவட்டங்களில் சாதிச்சங்க விழாக்களுக்குப் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று வெறி ஏற்றி விடுவதும், வாகனங்களில் செல்லும்போது பிற சாதியினருக்கு எதிராக கோஷமிட வைப்பதும், சாதி அமைப்புகளின் பிளெக்ஸ்களில் மாணவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவதும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. தருமபுரி, விழுப்புரம், கடலூர், கரூர், நாகை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் சாதிரீதியாக சண்டையிட்டுக் கொண்ட சம்பவங்களும் சமீபத்தில் நடந்துள்ளன. சாதி ரீதியாக மாணவர்கள் மோதிக்கொண்டதாக இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திராவிடர் விடுதலைக் கழக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன், "தென் மாவட்டங்களில் பள்ளிப்பருவத்திலேயே தங்களை சாதியாக அடையாளம் காட்டிக்கொள்ளும் பழக்கம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஆதிக்க சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பு, மஞ்சள், வண்ணங்களில் கயிறு கட்டி வருவார்கள். மற்ற சாதி மாணவர்களுடன், அதிலும் பட்டியலின மாணவர்களுடன் அவர்கள் கலந்துவிடக் கூடாது, ஒன்றாகச் சாப்பிட்டுவிடக்கூடாது, விளையாடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் பெற்றோர்களே இப்படிக் கயிறுகளைக் கட்டி விடுகிறார்கள். இப்போது பட்டியலின மாணவர்களும் நீலம், பச்சை, சிவப்பு வண்ணக் கயிறுகளை அணிகிறார்கள். பள்ளிகளில் இந்த அடையாளத்தைப் பார்த்துதான் சக மாணவர்களுடன் அமர்வார்கள். அவர்களுடன்தான் பழகுவார்கள். மாணவர்கள் மட்டுமல்ல, சாதிப்பாகுபாடு பார்க்கும் ஆசிரியர்களும் உண்டு. இவர்கள் மற்ற சாதி மாணவர்களிடம் பேதம் காட்டவும் இந்த சாதிக்கயிறு உதவுகிறது.

மணி அமுதன், செல்வகோமதி
மணி அமுதன், செல்வகோமதி

பத்து வயதுப் பையனுக்கு எதற்காக நம் கையில் கயிறு காட்டுகிறார்கள் என்பது தெரியாது. ஆனால், அவன் பத்தாம் வகுப்புக்கு வரும்போது சாதிவெறி அவன் மூளையில் ஏற்றப்பட்டு சாதிப்பெருமை பேசும் மாணவனாக முழுமையாக மாறிவிடுகிறான். தனியார்ப் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசுப்பள்ளிகளில்தான் இந்த அவலம் அதிகம். ஊர்த் திருவிழாக்களில் சாதிக்கயிறு கட்டியவர்கள் குழுவாகச் சேர்ந்து சுற்றும்போது கலவரம் ஏற்படுகிறது. பேருந்துகளில் மாணவர்கள் செல்லும்போது சாதி ரீதியாக வாசகங்களை எழுதி அதனால் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அதனால் சாதிக் குறியீடாகக் கட்டப்படும் கயிறுகளைப் பள்ளியில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் தடைசெய்ய வேண்டும்" என்கிறார்.

- சாதிக்கயிறு விவகாரத்தின் பின்னணி, சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் தரப்புப் பார்வை ஆகியவற்றை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > சாதாரணமானவை அல்ல சாதிக்கயிறுகள்! https://www.vikatan.com/news/education/discuss-about-caste-based-threads-in-schools

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/