Published:Updated:

`மழைநீரே தேங்காத இடத்தில் மழைநீர் வடிகாலா?' - சென்னை மாநகராட்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஈஞ்சம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால்
ஈஞ்சம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் ( வி.சதீஷ்குமார் )

ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 1,243 கோடி ரூபாய் மதிப்பில் கோவளம் வடிநிலப்பகுதியில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம்தான் தற்போது பலத்த எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது.

`மழைக்காலங்களில் இனி கவலை இல்லை மக்களே...’ என மன மகிழ்வோடு தமிழக அரசு அறிவித்த மழைநீர் வடிகால் திட்டம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது.

சென்னையின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பதற்கு 2012-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அடையாறு வடிநிலப் பகுதி, கூவம் வடிநிலப் பகுதி, கோவளம் வடிநிலப்பகுதி, கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி எனப் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்தத் திட்டம், 4,034 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என 2014-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கூவம் மற்றும் அடையாறு வடிநிலப் பகுதியில் உலக வங்கியின் நிதியுதவியுடன் 1,101.43 கோடி ரூபாய் மதிப்பில் 326 கி.மீ தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டன.

திட்டத்தை கைவிடக் கோரி மாநகராட்சிக்கு அனுப்பிய மனுவுடன் சின்னான்டி குப்பத்தினர்...
திட்டத்தை கைவிடக் கோரி மாநகராட்சிக்கு அனுப்பிய மனுவுடன் சின்னான்டி குப்பத்தினர்...
வி.சதீஷ்குமார்

அதைத்தொடர்ந்து, ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 1,243 கோடி ரூபாய் மதிப்பில் கோவளம் வடிநிலப்பகுதியில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம்தான் தற்போது பலத்த எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது. `இந்தத் திட்டத்துக்கு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை; மழைநீர் தேங்காத பகுதியில் மழைநீர் வடிகால் அவசியமே இல்லை. எனவே, இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்’ என அக்கரை பாலவாக்கம், கொட்டிவாக்கம், உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் சார்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தற்போது திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பி.யு.சி.எல் சுரேஷிடம் பேசினோம். ``சாலையோரம் கான்கிரீட் வடிகால்கள் அமைத்து அதன் வழியாக மழைநீரை கொண்டுசென்று கடற்கரையோரத்தில் ஓர் இடத்தில் சேமித்து, அங்கிருந்து அந்த நீரை கடலுக்குள் அனுப்புவதுதான் திட்டம். இதற்காக 27 இடங்களில் நீர் வெளியேற்றப் பகுதிகள் அமைக்கவிருக்கின்றனர். இந்தத் திட்டத்தில் அமைக்கப்படும் வடிகால்கள், நீர் வெளியேற்றப் பகுதி இரண்டுமே கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குட்பட்ட பகுதியில்தான் வருகிறது. அந்தப் பகுதியில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை தயார்செய்து, சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் அனுமதிபெற வேண்டும். ஆனால், இவர்கள் அப்படி எந்த அனுமதியும் பெறவில்லை. அவ்வளவு ஏன்... அனுமதிக்காக விண்ணப்பிக்கக்கூட இல்லை என்பது ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்தது.

சுரேஷ்
சுரேஷ்
வி.சதீஷ்குமார்

இதுமட்டுமல்ல, ஆலிவ் ரிட்லி (Olive ridley) என்ற வகை ஆமைகள் வெஸ்ட் இண்டீஸில் இருந்து சுமார் 4,000 கி.மீ தூரம் பயணித்து இந்த இடத்தில்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக முட்டையிட்டுச் செல்கின்றன. இதனால், கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலான பகுதியை 2016-ம் ஆண்டு தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. இவை எதையும் பொருட்படுத்தாமல் சட்ட விரோதமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த துடிக்கிறது சென்னை மாநகராட்சி. எனவேதான் இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டோம். இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு அதிகாரிகள் மூன்று பேர் மாநில அரசு அதிகாரி இருவர் என ஐந்துபேர் அடங்கிய கமிட்டியை அமைத்தது பசுமை தீர்ப்பாயம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டல ஆணையம் மற்றும் வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தரப்பில் இந்தத் திட்டத்தை பரிசீலனை செய்து, `இது தவறு’ எனத் தெரிய வரும்பட்சத்தில் இந்தப் பணிகளை நிறுத்தும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, இதைப் பரிசீலித்த தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டல ஆணையம் இந்தக் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு 23.12.2020 அன்று உத்தரவிட்டது. தங்களது இடைக்கால ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்த வல்லுநர் குழுவும், `மாநகராட்சி உரிய அனுமதி பெறாமல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. கட்டுமானத்தைத் தொடங்கிய பிறகு, அனுமதி வழங்கும் (Post facto) அம்சங்கள் சட்டத்தில் இல்லை. எனவே, கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி பெறாமல் திட்டத்தைத் தொடங்கியது தவறுதான்’ எனத் தெரிவித்துள்ளது. பயனில்லாத இந்தத் திட்டத்துக்கு முற்றிலும் தடை விதிக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது” என்றார்.

சேகர்
சேகர்
வி.சதீஷ்குமார்

அடுத்ததாகப் பேசிய சின்னான்டி குப்பத்தைச் சேர்ந்த சேகர், ``இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கும் கிழக்கு கடற்கரை சாலை பகுதி முற்றிலும் மணற்பாங்கான பகுதி. எவ்வளவு மழை பொழிந்தாலும் மழை நீர் தேங்கவே தேங்காது. தாழ்வான பகுதிகளில் தேங்கினாலும் ஒரு சில நாள்களில் நிலத்துக்குள் சென்றுவிடும். 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போதுகூட இந்தப் பகுதியில் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், கமிஷனுக்காக ஆசைப்பட்டு இந்தப் பகுதியை வெள்ளம் ஏற்படும் பகுதிபோல சித்திரித்து மழைநீர் வடிகால் கட்ட நினைக்கின்றனர். இந்தத் திட்டத்தால் நன்மையைவிட கெடுதல்களே அதிகம்.

இந்தப் பகுதியில் கழிவு நீர் கால்வாய்களே கிடையாது. எனவே, பலர் இதைக் கழிவு நீர் கால்வாயாகப் பயன்படுத்தக் கூடும். மழைநீரை நிலத்துக்குள் செல்லவிடாமல் கான்கிரீட் அமைத்து கடலுக்குள் சென்றுவிட்டால் நிலத்தடி நீர் குறைந்து இந்தப் பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அதுமட்டுமல்ல கடற்கரையோரம் நீரை சேமித்து மோட்டார் வைத்து அதைக் கடலுக்குள் அனுப்பும்போது கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் உள்வாங்கிவிட அதிக வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் இங்குள்ள கடலோர கிராமங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இப்படி ஏராளமான பாதகங்கள் உள்ள இந்தத் திட்டத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்” என்றார் சீற்றத்துடன்.

சரணவன்
சரணவன்
வி.சதீஷ்குமார்

அடுத்ததாகப் பேசிய சரணவன், ``மக்களுக்குப் பயன்படாத திட்டத்தை எந்த அனுமதியும் இல்லாமல் வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த நினைக்கின்றனர். ஆனால், பல வருடங்களாக இந்தப் பகுதி மக்கள் கழிவு நீர் கால்வாய் அமைத்துதரச் சொல்லி கேட்கிறோம். அதைச் செய்துதருவதற்கு இந்த அரசுக்கு மனம் இல்லை. வேண்டாம் என்று மறுக்கும் திட்டத்தில் மட்டும் முனைப்பு காட்டுகின்றனர். எப்போதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சென்னை போன்ற நகரங்களுக்குத் தேவை மழை நீர் சேகரிப்புதானே தவிர மழை நீர் வடிகால்கள் இல்லை. கடலுக்கு அனுப்ப நினைக்கும் தண்ணீரை எங்காவது சேமிக்க நினைத்தால் மனமுவந்து வரவேற்கலாம். நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை. இந்தத் திட்டத்தை நிறுத்தும் வரை ஓய மாட்டோம்” என்றார் ஆவேசமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு