Published:Updated:

10-ம் வகுப்பு வினாத்தாளில் விவசாயிகள் பற்றிய சர்ச்சை கருத்து: பிரபல சென்னை பள்ளியின் விளக்கம் என்ன?

சென்னையின் பிரபல பள்ளியின் 10-ம் வகுப்பு கேள்வித்தாளில், விவசாயிகள் போராட்டத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து இடம்பெற்றிருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த இரு தினங்களாக 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாட வினாத்தாளின் பகுதி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த வினாத்தாளின் புகைப்படத்தை, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.

அந்தப் பதிவில், ``சென்னையின் புகழ்பெற்ற பள்ளி ஒன்றின் 10-ம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் இது. மிகப்பெரிய பிரச்னையான வேளாண் சட்டங்கள் குறித்தும், குடியரசுதின போராட்டச் சம்பவம் குறித்தும் தற்போது வரை விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், `இது அந்நியர்களின் தூண்டுதலால், வன்முறை வெறிபிடித்தவர்கள் செய்த வேலை' என்று கூறப்பட்டிருக்கிறது'' என்று கவலை தெரிவிக்கும்விதமாகப் பதிவிட்டிருந்தார்.

டி.எம்.கிருஷ்ணா
டி.எம்.கிருஷ்ணா

அந்த வினாத்தாளில், ``குடியரசு தினத்தன்று தேசியத் தலைநகரில் வெடித்த கொடூரமான வன்முறை, குடிமக்களின் மனதில் கண்டனத்தையும் வெறுப்பையும் நிரப்பியிருக்கிறது. வேளாண் சட்டத்தை எதிர்ப்பவர்கள் பொதுச் சொத்துகளை அழித்து, பகல் நேரத்தில் காவல்துறையினரைத் தாக்கியிருக்கின்றனர். உங்கள் பகுதியிலுள்ள தினசரி நாளிதழின் ஆசிரியருக்கு, சுயலாபத்துக்காக இது போன்ற வன்முறைச் சம்பவங்களை நடத்துபவர்களைக் கண்டித்து கடிதம் எழுதுங்கள். பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது, தேசியக்கொடியை அவமதிப்பது, காவல்துறையைத் தாக்குவது உள்ளிட்ட சில குற்றங்களை எந்தவொரு காரணத்துக்காகவும், ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே கேள்வியின் இறுதியில் கிளைக் கேள்வி ஒன்றும் கேட்கப்பட்டிருந்தது. ``அந்நியர்களின் தூண்டுதலால் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை வெறிபிடித்தவர்களைத் தடுக்க சில நடவடிக்கைகளைப் பரிந்துரையுங்கள்'' என்றும் கேட்கப்பட்டிருந்தது.
10-ம் வகுப்பு வினாத்தாள்
10-ம் வகுப்பு வினாத்தாள்
செங்கோட்டையில் மதக்கொடி; பா.ஜ.க தொடர்பு! - வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தீப் சித்து யார்?

விவசாயிகளை, `வன்முறை வெறி பிடித்தவர்கள்' என்று குறிப்பிட்டிருந்தது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் எழுந்தன. டி.எம்.கிருஷ்ணாவின் பதிவின் கீழ் கமென்ட் செய்திருந்தவர்கள் பலரும், ``மாணவர்கள் மத்தியில் விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் கேள்வியெழுப்பட்டிருக்கிறது. மிக நுட்பமாக இந்தக் கேள்வியை வடிவமைத்திருக்கின்றனர். விவசாயிகளை வன்முறையாளர்களாக மாணவர்களிடையே சித்திரிக்க முயன்றிருக்கின்றனர். மாணவர்களை திசைதிருப்பி நஞ்சுப் பிரசாரம் செய்திருக்கிறது இந்தப் பள்ளி'' என்று தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேவேளையில், ``பல காலமாக `அக்பர் சிறந்த மன்னர்', `திப்பு சுல்தான் சிறந்த தேசபக்தர்' என்றெல்லாம் பொய்களைச் சொல்லித்தந்த பள்ளிகள், தற்போது உண்மைகளை மாணவர்களுக்குச் சொல்லித் தரத் தொடங்கியிருக்கின்றன. உண்மையை உரக்கச் சொன்ன சென்னைப் பள்ளிக்குப் பாராட்டுகள்'' என்றும் சிலர் கமென்ட்டில் பதிவிட்டிருக்கின்றனர்.

டி.எம்.கிருஷ்ணாவின் ட்வீட்டைப் பகிர்ந்து, ``இது சென்னை கோபாலபுரத்தில் அமைந்திருக்கும் DAV பள்ளியின் வினாத்தாள்'' என்று சிலர் பதிவிட்டிருந்தனர்.

இந்தக் கேள்வித்தாளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பின்வருமாறு உள்ள கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் சிரோமணி அகாலி தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மன்ஜிந்தர் சிங் சிர்சா (Manjinder Singh Sirsa).

``இந்தக் கேள்வித்தாளின் மூலம் சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி எந்த வகையான வகுப்புவாத வெறுப்பைப் பரப்புகிறது? பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களின் தேர்வைப் பாருங்கள். விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்கும், போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாகச் சித்திரிப்பதற்குமான பிரசாரம்தான் இது.”
மன்ஜிந்தர் சிங் சிர்சா, சிரோமணி அகாலி தளம்

மேலும், ``இது விவசாயிகள் மனதைப் புண்படுத்தியிருக்கிறது. இதற்காக கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும்'' என்றும் பதிவிட்டிருக்கிறார் மன்ஜிந்தர் சிங்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
AP Photo
விவசாயிகள் போராட்டம்: ட்விட்டர் Vs மத்திய அரசு... என்ன நடக்கிறது?

இது குறித்து சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி நிர்வாகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``பத்தாம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் வெளியான கருத்துக்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவாகவும் எதிர்வினையாற்றியிருந்தனர். ஓர் ஆசிரியர் எழுதிய கேள்வியின் குறிப்பிட்ட அந்த வரிகள், பள்ளியின் கருத்தைப் பிரதிபலிக்காது. இருப்பினும், சூழலுக்கும், சமகால நிகழ்வுகளுக்கும் ஏற்ப கற்பிக்க வேண்டும் என்ற எங்கள் முயற்சியில் நாங்கள் பெருமைகொள்கிறோம். குழந்தைகளை சுயமான சிந்தனைகொண்டவர்களாகவும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும் வழிநடத்த தேவை இருப்பதை நாங்கள் வலுவாக நம்புகிறோம்” என்று அந்தப் பள்ளி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு