Published:Updated:

`விஜய் சேதுபதி இனப் பற்றாளர்தான்... ஆனால்?’ - முரளிதரன் பயோபிக்கால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை!

விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன்
News
விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன்

`` `ராஜபக்‌ஷே ஒரு நெல்சன் மண்டேலா' என்று சொல்லி நெல்சன் மண்டேலாவைக் கொச்சைப்படுத்தியவர் முத்தையா முரளிதரன்...'' - வன்னிஅரசு

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இவர். இதன் காரணமாக இவரின் பயோபிக் திரைப்படத்துக்கு `800' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை எம்.எஸ்.ஶ்ரீபதி இயக்குகிறார். முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.

முரளிதரன்
முரளிதரன்

கடந்த ஆண்டு இந்தப் படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியானபோதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. வி.சி.க, பெரியாரிய அமைப்புகள் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளும் `தமிழினத் துரோகி ராஜபக்‌ஷே-வின் ஆதரவாளரான முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது' எனக் கோரிக்கை வைத்தனர். ஈழத் தமிழர்கள் பலரும் அந்தச் சமயத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராகப் போர்க் கொடித் தூக்கினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முத்தையா முரளிதரன்,
விஜய் சேதுபதி
முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதி
இதையடுத்து, ``என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன். அதுபோன்ற ஒரு காட்சியும் என் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களைக் காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்கவே மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்'' என்று ஒரு பேட்டியில் விளக்கம் அளித்திருந்தார் விஜய் சேதுபதி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதன் பிறகு இந்தப் படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பதால் இது குறித்த பேச்சுகள் அடங்கிப் போயிருந்தன. தற்போது மீண்டும் இந்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ``முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழர் என்றாலும் அவர் சிங்களர்களின் பக்கமே நிற்கக் கூடியவர். எனவே அவரின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது'' என்கிற குரல்கள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன.

800 motion poster
800 motion poster
youtube screen shot

இந்நிலையில், `800' படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இந்த மோஷன் போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், `ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் கொன்று குவித்த நாடான இலங்கையின் தேசியக் கொடி கொண்ட கிரிக்கெட் ஜெர்ஸியை எப்படி விஜய் சேதுபதி அணிந்து கொண்டு நடிக்கலாம்?' என்று கேள்விகளை எழுப்பி நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்பையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த படம் குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து, இரண்டு நாள்களுக்கு முன்பாக ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார் விஜய் சேதுபதியின் நண்பரும் இயக்குநருமான சீனு ராமசாமி.

``விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய் சேதுபதி நடிக்கும் `யாதும் ஊரே யாவரும் கேளீர்' திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா... நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?'' என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

மேற்கண்ட ட்விட்டர் பதிவின் மூலம், முத்தையா முரளிதரன் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் வைத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. அதேவேளை, ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, விஜய் சேதுபதிக்கு ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருப்பது, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், '800' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்ற கருத்தை ஆரம்பத்திலிருந்தே வலுவாக முன் வைத்துக் கொண்டிருந்தவர்களுள் முக்கியமானவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு. தற்போது மீண்டும் இந்தப் படம் குறித்த செய்திகளை வெளியானதை அடுத்து வன்னிஅரசைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே. அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழர்களின் உரிமைகளுக்காக விடுதலைப் புலிகளும் பொதுமக்களும் இணைந்து போராடினார்கள். ஒட்டு மொத்தமாகச் சிங்கள, பௌத்த பேரினவாதமானது தமிழர்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, சொந்த மண்ணிலே அவர்களை நான்காம் தரக் குடிமக்களாக மாற்றியது. அவர்களை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகளையும் மக்களையும் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு.

2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட முள்ளி வாய்க்கால் நாளன்று, `இன்றைக்குத்தான் நான் மகிழ்ச்சியாகத் தூங்குவேன். இதுதான் என்னுடைய மகிழ்ச்சியான நாள்' என்று பேசியவர் முத்தையா முரளிதரன். `ராஜபக்‌ஷே ஒரு நெல்சன் மண்டேலா' என்று சொல்லி நெல்சன் மண்டேலாவைக் கொச்சைப்படுத்தியவர் முத்தையா முரளிதரன். காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அமைப்புகள் தொடங்கப்பட்டு இன்றைக்கும் அவர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் போராடுபவர்களைப் பார்த்து `நாடகமாடுகிறார்கள்' என்று சொன்னவர் முத்தையா முரளிதரன். ராஜபக்‌ஷே-வின் மகன் நமல் ராஜபக்‌ஷேவும் கோத்தபய ராஜபக்‌ஷேவும் `எல்லோரும் முரளிதரன் போல இருந்துவிட்டால் இங்கே இனப் பிரச்னையே இருக்காது' என்று சொல்கிறார்கள். இனத் துரோகத்தைச் செய்த முரளிதரனை `தமிழர்' என்கிற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு, சிங்கள, பௌத்த பேரினவாதம் அவரைத் தூக்கிப் பிடிக்கிறது. ஆனால், லண்டனில் ஒருமுறை தமிழில் பேசுங்கள் என்று சொன்னதற்கு, `எனக்குத் தமிழ் தெரியாது' என்று சொல்லிவிட்டுப் போனவர் அவர்.

வன்னியரசு
வன்னியரசு

இனத் துரோகியான முரளிதரனின் கதாபாத்திரத்தில், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும், மிகச் சிறந்த நடிகரான விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை. இங்கு நடக்கும் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர் விஜய் சேதுபதி. தமிழர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்திலும் உறுதியாக இருப்பவர் விஜய் சேதுபதி. அப்படித் தமிழ்ப் பற்றாளரான விஜய் சேதுபதி அவருக்குச் சற்றும் பொருத்தமில்லாத கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனையையும் வலியையும் ஏற்படுத்துகிறது. முத்தையா முரளிதரன் ஒரு இனத் துரோகி, விஜய் சேதுபதி ஒரு இனப் பற்றாளர். எனவே, அவர் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது ஏற்புடையதல்ல.

விஜய் சேதுபதி, முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதென்பது இன துரோகத்துக்கு ஆதரவாக, உறுதுணையாக இருக்கக்கூடும் என்பதனாலும் அவர்மீது உள்ள அக்கறையினாலும்தான் நாங்கள் இந்தப் படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்கிற கோரிக்கையை வைக்கிறோம். அதுமட்டுமல்லாமல் இந்தப் படம் வெளியாவதன் மூலம், இனப் படுகொலை நடந்த ஒரு மண்ணில், `இப்படிப்பட்ட தமிழரை நாங்கள் அடையாளப்படுத்தியுள்ளோம்' என்று இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கான பரப்புரையாக இதனை மாற்றிக் கொள்வார்கள். அவர்களின் பரப்புரைக்கு விஜய் சேதுபதி ஆதரவாக இருக்கிறாரா என்பதுதான் எங்கள் கேள்வி.

`விஜய் சேதுபதியை எச்சரிக்கிறோம்' என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை. சகோதரர் விஜய் சேதுபதியிடம், `இந்தப் படத்திலிருந்து விலகிவிடுங்கள்' என்று அன்பான வேண்டுகோளைத்தான் முன் வைக்கிறோம். இது வி.சி.க-வின் கோரிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள்கூட இது தொடர்பாக என்னிடம் பேசினார்கள். அவர்களின் கோரிக்கையும் இதுவாகத்தான் உள்ளது. ஒருவேளை இந்தப் படம் வெளியானால், அதனை வெளிநாடுகளில் நாங்கள் திரையிடமாட்டோம் என்றுகூடக் கூறினார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளையும் வலியையும் புரிந்துகொண்டு, விஜய் சேதுபதி எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்ப்பார் என நம்புகிறோம்'' என்கிறார் வன்னிஅரசு.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

இது குறித்து `800' படத்தின் இயக்குநர் தரப்பிடம் பேசினோம், ``சர்ச்சை நோக்குடன் விஜய் சேதுபதி எந்த படத்திலும் நடித்ததில்லை. நடிக்கவும் மாட்டார். இந்த படமும் அப்படியே. படம் வெளிவந்தால் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.