Published:Updated:

ராணிப்பேட்டை: `கொட்டிக் கொடுக்கின்றனவா ரசாயன ஆலைகள்?’ - எம்.எல்.ஏ-வைச் சுற்றும் சர்ச்சை

``ராணிப்பேட்டையை உருக்குலையச் செய்த ரசாயனத் தொழிற்சாலைகளிடம் எம்.எல்.ஏ காந்தி பணிந்துபோகிறார்’’ என்று சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

``விவசாய பூமியாக இருந்த ராணிப்பேட்டையை மிக மிக மாசடைந்த நகரமாக உருகுலையச் செய்த ரசாயனத் தொழிற்சாலைகளை நிரந்தரமாகக் களையெடுக்க வேண்டும்’’ என்று கொந்தளிக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். இதன் முன்னோட்டமாகவே ராணிப்பேட்டையில் சூழல் பாதிப்புகளைக் கண்டறிய நிபுணர்குழுவை அமைத்து, அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு. இந்தக் குழு தொடர்ந்து மூன்று நாள்களாக ராணிப்பேட்டை சிப்காட்டிலுள்ள சிவப்பு வகைப்பாடு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து நீர் மாதிரிகளையும் சேகரித்திருக்கிறது.

நீர் மாதிரி சேகரிப்பு
நீர் மாதிரி சேகரிப்பு

இந்தநிலையில், ``ரசாயனத் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு தொகுதி எம்.எல்.ஏ காந்தி அழுத்தம் கொடுக்காதது ஏன்?’’ என்று சூழலியல் ஆர்வலர்களும், தொகுதி மக்களும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ``ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும், செல்வாக்குமிக்க மனிதராகவும் இருக்கும் எம்.எல்.ஏ காந்தி, ரசாயன ஆலைகளுக்கெதிராக இதுவரை எத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்... 50 ஆண்டுகளாக நிலவும் இந்தப் பிரச்னைக்காக சட்டமன்றத்தில் எத்தனை முறை குரல் கொடுத்திருக்கிறார்... மாவட்ட அதிகாரிகளுடன் எத்தனை முறை கலந்து பேசியிருக்கிறார்?

ராணிப்பேட்டை: நீர் மாதிரி சேகரிப்பு! - ரசாயன ஆலைகளில் அதிரடி காட்டிய நிபுணர்குழு

பாலாறும்-பொன்னையாறும் இணையும் பகுதிகளிலிருந்து பல தொழிற்சாலைகள் எந்த வரைமுறையும் இல்லாமல் தண்ணீரை உறிஞ்சியெடுக்கின்றன. `கழிவுநீரை, சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும்’ என்ற விதியை எந்த நிறுவனமும் கடைப்பிடிப்பதில்லை. இதெல்லாம் தெரிந்தும், எம்.எல்.ஏ காந்தி பெட்டிப் பாம்பாக அடங்கிப்போவதற்கு ஏதாவது லாப நோக்கம் இருக்கிறதா அல்லது மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் எம்.எல்.ஏ-வுக்குப் பணத்தைக் கொட்டிக்கொடுக்கின்றனவா?’’ என்று சரமாரியான கேள்விகளைத் தொடுத்திருக்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

எம்.எல்.ஏ காந்தி
எம்.எல்.ஏ காந்தி

அதுமட்டுமன்றி, ``சிப்காட்டில் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும் தமிழ்நாடு குரோமியத் தொழிற்சாலையில். 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவு மலைபோல் தேங்கிக்கிடக்கிறது. இதனால், 3,500 வகையான ரசாயன மாசு நேரடியாக நிலம், நீர், காற்று ஆகியவற்றில் கலந்து, மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குரோமியக் கழிவுகளின் வீரியத்தைக் குறைத்து வேறு மெட்டீரியலாக மாற்றுவதற்கோ அல்லது அப்புறப்படுத்துவதற்கோ ஏதாவது செய்தாரா?’’ என்றும் எம்.எல்.ஏ காந்திக்கு எதிராகக் கடுகடுக்கிறார்கள்.

இந்த விமர்சனம் தொடர்பாக, எம்.எல்.ஏ காந்தியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கொஞ்ச நஞ்சமில்லை. ரசாயன ஆலைப் பிரச்னைகள் குறித்து எத்தனையோ தடவை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். நீங்கள் என்னிடம் பேசுகிற இந்த நேரம்கூட சுற்றுச்சூழல் பிரச்னை குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் பேசிவிட்டுத்தான் வந்தேன். பல போராட்டங்களையும் முன்னெடுத்துவிட்டோம். குரோமியத் தொழிற்சாலையில் தேங்கிக் கிடக்கும் குரோமியக் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு