Published:Updated:

மருத்துவமனையின் அலட்சியத்தால் அதிகரித்த எண்ணிக்கை?! -ராமநாதபுரம் மக்கள் அச்சம்

கொரானோ வைரஸ்
கொரானோ வைரஸ் ( விகடன் )

மஞ்சள் நிற பட்டியலில் இடம்பிடித்துள்ள ராமநாதபுரத்தில் நேற்று முன் தினம் வரை 2 பேர் மட்டுமே கொரானோ நோய் தொற்றுக்கு ஆளாகி, அவர்கள் இருவரும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் கொரானோ நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது ராமநாதபுரம் மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம்
ராமநாதபுரம்
உ.பாண்டி

நாடு முழுவதும் கொரானோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் விதிவிலக்காக சில மாநிலங்களும், சில மாவட்டங்களும் இருந்து வருகின்றன. தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னை, கோவை, திருப்பூர் என மாவட்டம் மாவட்டமாக கொரானோ பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த மாவட்டங்கள் சிவப்பு பட்டியலில் உள்ளன. கடலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் இளஞ்சிவப்பு பட்டியலிலும், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மஞ்சள் நிற பட்டியலிலும் இடம் பிடித்துள்ளன.

இதில் மஞ்சள் நிற பட்டியலில் இடம்பிடித்துள்ள ராமநாதபுரத்தில் நேற்று முன் தினம் வரை 2 பேர் மட்டுமே கொரானோ நோய் தொற்றுக்கு ஆளாகி, அவர்கள் இருவரும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரானோ நோய் தொற்று உள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்தது. இவர்களில் இருவர் கீழக்கரை பகுதியை சேர்ந்த்வர்கள். ஒருவர் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர்.

கொரானோ பட்டியல்
கொரானோ பட்டியல்
விகடன்

கடந்த 2-ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவருக்கு கொரானோ நோய் தொற்று உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அன்றைய தினமே அவர் உயிரிழந்தார். ஆனால் ஆய்வு முடிவுகள் வரும் முன்னரே ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் உயிரிழந்தவரின் உடலை கீழக்கரைக்கு அனுப்பி வைத்தது. கீழக்கரையில் மறுநாள் நடந்த இறுதி நிகழ்வில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் உயிரிழந்தவருக்கு கொரானோ நோய் தொற்று இருந்தது என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அனைவரும் தனிமை படுத்தப்பட்டதுடன், அவரது வீடு உள்ள கீழக்கரை சின்னக்கடை தெரு பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இறுதி நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

கீழக்கரை சின்னகடை தெரு
கீழக்கரை சின்னகடை தெரு
உ.பாண்டி

இந்நிலையில் கொரானோ தொற்றினால் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மகனுக்கு நோய் தொற்று பரவியிருப்பது நேற்று உறுதியானது. மேலும் ஏற்கனவே சிகிச்சையில் இருந்து வரும் பரமக்குடியை சேர்ந்த முதியவரின் கார் ஓட்டுநர் ஒருவருக்கும் கொரானோ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் பேர் வெளிநாடுகளில் வசித்து வந்த நிலையிலும் கொரானோ நோய் கட்டுக்குள்ளேயே இருந்து வந்தது. இதனிடையே கொரானோ நோய் தாக்கம் உடையவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிய ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியத்தால் இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மக்கள் பேசிவருகின்றனர். மேலும் கீழக்கரை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு