Election bannerElection banner
Published:Updated:

பாலத்தில் சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்பு; மழையில் போராட்டம்! சிவகங்கை சர்ச்சை - என்ன நடந்தது?

பெண்ணின் உடல்
பெண்ணின் உடல்

இறந்தவரின் உடலை பொதுப்பாலம் வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர் கண்ணன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், ஆட்டோ ஓட்டுநராகப் பணி செய்துவருகிறார். இவருடைய மனைவி நாகலெட்சுமி உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு நோயின் தன்மை அதிகமாகி, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த 4-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்த நாகலெட்சுமி
இறந்த நாகலெட்சுமி

தொடர்ந்து மறுநாள் 5-ம் தேதி சொந்த ஊரான மேலையூர் கிராமத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு, அன்று மாலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இறந்த பெண் பட்டியலினப் பெண் என்பதாகக் கூறி இறந்தவரின் உடலை பொதுப்பாலம் வழியாகக் கொண்டு செல்லக் கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்: மூன்று நாள்களாகக் காட்டுக்குள் கிடந்த ஆண் சடலம்! - கண்டுபிடித்த வளர்ப்பு நாய்

இறந்த பெண்ணின் உறவினர்களும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும், ``எப்போதும் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை மழையால் மூழ்கியிருக்கிறது. எனவே, பொதுப்பாலம் வழியாகத்தான் உடலைக் கொண்டு செல்வோம்’’ என்று கூறி அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பிலும் காவல்துறையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் இரவு 12 மணிக்கு மேல் வரை பிரச்னை முடிவுக்கு வராமல் இருந்தது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சில கோரிக்கைகளை முன்வைத்ததால், தற்காலிகப் பாதை வழியாக சுடுகாட்டுக்கு உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

போராட்டத்தின் போது
போராட்டத்தின் போது

இது குறித்து இறந்த பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தியாகி இமானுவேல் சேகரன் பேரவையைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர் கிருஷ்ண மூர்த்தி,``மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் எப்போதும் வயக்காட்டு வழியாக, கால்வாயைக் கடந்து சுடுகாட்டுக்கு இறுதிச் சடங்கு செய்யச் செல்வார்கள். ஆனால், தற்போது கடுமையான மழை காரணமாக எப்போதும் கொண்டு செல்லும் பாதையில் உடலைக் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் பொதுப்பாலத்தைக் கடந்து சாலையின் வழியாக உடலைக் கொண்டு செல்ல முடிவு செய்தோம். இதைத் தெரிந்துகொண்ட ஆதிக்க சாதியினர் `பொதுப்பாலம் வழியாகச் செல்லக் கூடாது. எப்போதும்போல கால்வாயைக் கடந்து செல்லுங்கள்’ எனக் கூறி அவர்கள் தரப்பு பெண்களை சாலைமறியலுக்குத் தூண்டினர். இதனால், நாங்கள் பாலத்தின் வழியாக உடலைக் கொண்டு செல்லாமல் பாதியிலேயே நிறுத்திவைத்துவிட்டோம். ஆர்.டி.ஓ-விடம் பேச்சுவார்த்தையில் கேட்டபோது, `பொதுப்பாலம் வழியாகவே உடலைக் கொண்டு செல்லலாம். தற்போது போலீஸ் பாதுகாப்பு தேவை. எனவே, எஸ்.பி வரும் வரை காத்திருங்கள்’ எனத் தெரிவித்தார்.

ஆனால், எஸ்.பி வந்த பிறகு அதைப் பற்றி ஆர்.டி.ஓ பேசவில்லை. எஸ்.பி ரோஹித் நாதன் சம்பவ இடத்துக்கு வந்து எங்களிடம் என்ன ஏது என்று நியாயத்தைக் கேட்காமல், `ஏன் நீங்க பாலத்தில் போக வேண்டும் எனப் பிரச்னை செய்யறீங்க?’ என எங்களிடம்தான் கேள்வி கேட்டார். இதனால் எஸ்.பி-யுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. மாலை முதல் இரவுவரை பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, `பாலத்தில் செல்ல வேண்டாம். உங்களுக்குப் புதிய பாதை உருவாக்கித் தருகிறோம்’ என ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்து அதன்வழியே உடலைக் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.

பெண்ணின் உடல்
பெண்ணின் உடல்

இது குறித்து எஸ்.பி-யிடம் கேட்டதற்கு,`வேண்டுமென்றால் பாலத்தில் செல்ல அனுமதிக்காத நபர்கள் மீது புகார் கொடுங்கள். அதன் அடிப்படையில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறோம்’ என்றார். பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு எஸ்.பி சொன்ன புதிய பாதையில் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்தோம். `இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்போம்’ என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டப்படி பார்த்தால் பொதுப்பாலத்தில் உடலைக் கொண்டு செல்ல வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட தரப்புக்கு ஆதரவாகச் செயல்படாமல் எதிர்த்தரப்பினரின் முடிவையே செயல்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் செயல் வேதனை அளிக்கிறது’’ என்றார்.

மதங்களைக் கடந்த மனிதநேயம்... கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் குழுவினர்! #PhotoStory

பாலத்தின் வழியாக உடலைக் கொண்டு செல்லக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த எதிர்த்தரப்பினரிடம் விசாரித்தபோது,``எங்கள் கிராமத்தில் பல்வேறு சாதியினர் வசித்துவருகின்றனர். ஒவ்வொரு சாதியினரும் அவர்கள் பாரம்பர்யமாகக் கொண்டு செல்லும் பாதையில்தான் உடலைக் கொண்டு செல்கின்றனர். இந்தநிலையில், `மழைநீர் தேங்கியிருக்கிறது’ எனப் பொய்யான தகவலைக் கூறி உடலைப் பாலத்தின் வழியாகக் கொண்டு செல்ல முயல்கின்றனர். நாங்கள் அண்ணன், தம்பியாகத்தான் பழகிவருகிறோம். வெளியில் இருந்து வந்த நபர்கள், பட்டியலின மக்களைத் தூண்டி இப்படித் தேவையற்ற பிரச்னையைக் கிளப்புகிறார்கள்" என்றனர்.

போராட்டம்
போராட்டம்

இது குறித்து சிவகங்கை எஸ்.பி ரோஹித்நாத்திடம் கேட்டோம். ``உடலை அந்தப் பாலத்தின் வழியாக எடுத்துச் செல்வது மிகவும் தூரம். அதேசமயம் எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரிவினரின் வீடுகள் இருக்கும் பகுதிகளில்தான் கொண்டு செல்ல வேண்டும். இதனால் இரண்டு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இரண்டு தரப்பினரின் நலன் கருதி புதிய பாதை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனாலும், தியாகி இமானுவேல் சேகரன் பேரவையினர் எதற்கும் ஒத்துப்போகவில்லை. இறந்த பெண்ணின் உடல் மழையில் நனைந்துகொண்டிருந்தது. அந்த அளவுக்கு அரசியல் செய்தனர். அதையும் மீறி, இரு தரப்பினரின் நலனைக் கருதி நடவடிக்கைகள் எடுத்து உடலைத் தகனம் செய்யவைத்தோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு