Published:Updated:

`பட்டியலின ஊராட்சித் தலைவரைக் கடத்தி வைச்சிருக்காங்க...!’- கொதிக்கும் நாட்டாமங்கலம் மக்கள்

புகார் எழுப்பும் மக்கள்
புகார் எழுப்பும் மக்கள்

`தலைவர் கணேசனை கடந்த 16-ம் தேதி முதல் ரகசிய இடத்தில் கடத்தி வைத்துள்ளார். அவரது செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளார். முக்கியமான போன் கால்களை மட்டும் பேச அனுமதித்து, மற்ற நேரம் அவர்கள் போனை வைத்துள்ளார்கள்'.

``பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவரை, துணைத்தலைவர் கடத்தி வைத்து மிரட்டி வருகிறார். ஊராட்சித் தலைவரை மீட்டும், சாதி ஆதிக்கத்துடன் செயல்படும் துணைத் தலைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நாட்டாமங்கலம் ஊராட்சி கமிட்டியினர் புகார் தெரிவித்துள்ளது மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புகார் எழுப்பும் மக்கள்
புகார் எழுப்பும் மக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் ஊராட்சித் தலைவர் பதவி பட்டியல் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அங்கு தேர்தல் நடத்த கடந்த காலங்களில் பெரும் பிரச்சனை எழுந்ததும், எதிர்ப்பை மீறி அரசு அங்கு தேர்தல் நடத்தியதும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில்தான் தங்கள் ஊரட்சித் தலைவரை, ஆதிக்க சாதியை சேர்ந்த துணைத் தலைவர் தரப்பு கடத்தி வைத்துள்ளதாக நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாட்டாமங்கலம் மக்கள், ``எங்கள் ஊரில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். கடந்த ஊராட்சித் தேர்தலில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த கணேசன் வெற்றி பெற்று மக்களுக்கு நன்கு பணியாற்றி வந்தார். ஊராட்சியில் 8-வது வார்டில் 80 ஓட்டுகள் வாங்கி உறுப்பினராக வெற்றி பெற்ற பிரதீப் எனவர், தன்னை துணைத் தலைவராக அறிவித்துக்கொண்டு அராஜகம் செய்து வருகிறார். ஊராட்சித் தலைவர் கணேசனை மதிக்காமல், தான் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 10 மாதங்களில் தலைவரைச் செயல்படவிடாமல் தடுத்து பல முறைகேடுகளை பிரதீப் செய்து வருகிறார்.

புகார் எழுப்பும் மக்கள்
புகார் எழுப்பும் மக்கள்

தற்போது காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் வேலைக்கு 36 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவரைத் தேர்வு செய்யவுள்ள நிலையில் இந்த பிரதீப், சரியான தகுதி இல்லாத தனது சகோதரியை அப்பொறுப்புக்கு கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறார். இதற்கு ஒப்புக்கொள்ளாத தலைவர் கணேசனை கடந்த 16-ம் தேதி முதல் ரகசிய இடத்தில் கடத்தி வைத்துள்ளார். அவரது செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளார். முக்கியமான போன் கால்களை மட்டும் பேச அனுமதித்து, மற்ற நேரம் அவர்கள் போனை வைத்துள்ளார்கள்.

`ரோலிங் சேர்... சாதிப் பிரச்னை... தர்ணா!’ - மயிலாடுதுறை ஊராட்சி சர்ச்சைப் பின்னணி

பட்டியலின ஊராட்சித் தலைவரை சுதந்திரமாக செயல்படவிடாமல் அடிமைபோல் நடத்துவது மட்டுமில்லாமல், தகுதி இல்லாத நபரை ஊராட்சி செயலாளராக்க திட்டமிட்டு ஊராட்சித் தலைவரை கடத்தி வைத்திருக்கும் பிரதீப் மீதும் அவருடன் இருக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை மீட்டு குடும்பத்தினரிடம் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் தேவையற்ற பிரச்சனைகள் எற்படும்" என்றார்கள்.

புகார் எழுப்பும் மக்கள்
புகார் எழுப்பும் மக்கள்

இது சம்பந்தமாக உசிலம்பட்டி வட்டார காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்கள்.

`பட்டியலின உள்ளாட்சிப் பிரதிநிதிகளை இழிவுபடுத்தப்படுவது, அவர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் ஆதிக்கம் செலுத்தும் போக்குகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ளன. இதுபோன்ற புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு