பல திருமண உறவுகள் தோல்வியில் முடிவதற்கு காரணம், தங்களின் இணைக்கு உண்மையாக இருப்பதில்லை என்பதால் தான். திருமணமான பிறகு வேறோர் உறவைத் தேடுவதன் விளைவாக, பிரிவு மட்டுமல்ல, வெட்டுக் குத்து சம்பவங்களும் நடப்பதுண்டு. அதேசமயம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வழிதவறவும் பலர் காத்திருப்பதுண்டு.

அந்த வகையில், `ஒரே ஒரு திருமணம் தான், டோட்டல் லைஃப் க்ளோஸ்’ என சலிப்பாக வாழ்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஆப் தான் க்லீடன் (Gleeden). பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த டேட்டிங் ஆப்பில் பல புதிய உறவுகளைப் ஏற்படுத்திக் கொள்ளலாம், திருமணமானவர்கள் டேட்டிங் செய்யலாம்.
சமீபத்தில் உலகம் முழுவதிலும் இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தொட்டுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், 10 மில்லியன் மக்களில் 2 மில்லியன் பேர் இந்தியர்கள். இவர்களில் அதிகப்படியான இந்தியர்கள் உயர் பொருளாதார சமூகச் சூழலைக் கொண்டவர்கள். உயர் பதவிகளில் இருக்கும் நிர்வாகிகள், திருமணமான பெண்கள்.
இது குறித்து இந்நிறுவனத்தின் மேனஜர் சிபில் ஷிட்டெல் கூறுகையில், ``கலாசாரம், பண்பாடு, ஒருதார திருமணத்தை வலியுறுத்தும் இந்தியர்கள் தான் இந்த ஆப்பை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். 2022-ல் மட்டும் புதிதாக 18 சதவிகித இந்தியர்கள் இந்த ஆப்பை பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

இந்தியாவின் பெருநகரங்களில் இருந்து 66 சதவிகித பயனர்களும், மக்கள் தொகை குறைவான நகரங்களில் இருந்து 34 சதவிகிதத்தினரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். 55 சதவிகித இந்தியர்கள் அவர்களுடைய பார்ட்னர்களுக்கு உண்மையாக இருப்பதில்லை என இதிலிருந்து தெரிகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகான டேட்டிங் செய்யும் இந்த ஆப்பை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துவது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகி உள்ளது.