Published:Updated:

`14 வயசுல கல்யாணம் பண்ணா நல்லா இருப்பாங்க!' -சிவகங்கை ஜோதிடரால் சிறைக்குச் சென்ற குடும்பம்

ரத்னேஷ்வரன்
ரத்னேஷ்வரன்

ஊரடங்கு சமயத்தில் திருமணம் செய்தால் யாருக்கும் தெரியாது என வீட்டுக்குள் வைத்து திருமணம் முடித்துவைத்தோம்.

சிவகங்கை மாவட்டத்தில் ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 14 வயது சிறுமியை 27 வயது இளைஞருக்கு சட்டவிரோதமாக திருமணம் செய்துவைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Vikatan

சிவகங்கை மாவட்டம், ஆவுடையார் கோயிலைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரின் மகன் ரத்னேஷ்வரன் (27) என்பவருக்கும் இவரின் தாய்மாமன் மகள் கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. யாருக்கும் தெரியாமல் திருமணம் நடந்த நிலையில், அக்கம்பக்கம் உள்ளவர்களுக்குத் தெரிந்துள்ளது.

இதையடுத்து, இவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சிலர் சிறுமிக்கு சட்டவிரோதமாக திருமணம் செய்து வைத்துள்ளதாக மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து, ஊர் நல அலுவலர் விஜயலட்சுமி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மணமகனின் பெற்றோர் மாணிக்கம், ராஜேஸ்வரி மற்றும் மணமகளின் பெற்றோர் சொக்கலிங்கம், அஞ்சலை ஆகிய 4 பேர் மீது குழந்தைத் திருமணம் நடத்தி வைத்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மணமகன் ரத்னேஸ்வரன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரி நடவடிக்கை மேற்கொண்டார்.

சிவகங்கையில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணம்...தடுக்குமா அரசு? #TamilnaduCrimeDiary

இது தொடர்பாக மணமகனின் உறவினர்கள் சிலர், ``ரத்னேஷ்வரனுக்கு அவனுடைய தாய்மாமன் மகளை திருமணம் செய்வதென்று பல ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்திருந்தோம். இந்த நிலையில், குடும்ப ஜோதிடர் 27 வயதில் திருமணம் செய்தால் அவர்களின் வாழ்க்கை நலமா இருக்கும் என பெண்ணின் ஜாதகத்தையும், மாப்பிள்ளையின் ஜாதகத்தையும் வைத்து திருமணத்துக்குத் தேதி குறித்துக் கொடுத்தார்.

ஊரடங்கு சமயத்தில் திருமணம் செய்தால் யாருக்கும் தெரியாது என வீட்டுக்குள் வைத்து திருமணம் முடித்துவைத்தோம். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இந்த நிலையில், 3-ம் மாதத்தில் தாலி பெருக்கும் நிகழ்ச்சியின்போது சிலர் புகார் கொடுத்ததால் பிரச்னையாக மாறிவிட்டது" என்றனர்.

இதுகுறித்து காரைக்குடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரியிடம் கேட்டபோது, ``சம்பந்தப்பட்ட மணமக்களின் பெற்றோர் ஜோதிடர் பேச்சைக் கேட்டு சட்டவிரோதமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்தச் சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

குழந்தை திருமணம்
குழந்தை திருமணம்

இந்த நிலையில் அதிகாரிகள் மூலம் எங்களுக்குப் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, மணமக்கள் பெற்றோர் மீது திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாகவும் 14 வயது சிறுமி என்று தெரிந்து திருமணம் செய்த மணமகன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழும் எனத் தனித்தனி பிரிவுகளின்கீழ் 5 நபர்களையும் ரிமாண்ட் செய்துள்ளோம். இதுபோன்ற சட்ட விரோத திருமணங்கள் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு