Published:Updated:

`சுயமரியாதைத் திருமணம் செய்த காதல் ஜோடி; சமரசத்துக்கு அழைத்து மணப்பெண் கடத்தல்!' - சேலம் சர்ச்சை

செல்வன் - இளமதி
செல்வன் - இளமதி

சேலம் கொளத்தூரில், சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியைத் தாக்கி, மணப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில், காதலர்களான செல்வன், இளமதி ஆகியோர் சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் ஒன்று, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும், திருமணத்தை நடத்தி வைத்தவர்களையும் அடித்துத் துன்புறுத்தி, பெண்ணை காரில் கடத்திச்சென்றிருப்பது மேட்டூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காதல் ஜோடி
காதல் ஜோடி
எம்.விஜய்குமார்

அதையடுத்து, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள், கொளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதோடு பெண்ணை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடிவருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

இதுபற்றி மணமகன் செல்வனிடம் பேசினோம். ``என்னோட சொந்த ஊரு பவானி அருகே உள்ள கவுந்தப்பாடி. நான் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவன். நான், மாயபுரம் பெருமாள்மலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்தேன். அதே கம்பெனியில், பவானி குரும்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதியும் வேலைபார்த்தது. அவர் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்.

திருமணம்
திருமணம்

இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்யும்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. நாங்க ரெண்டு பேரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம். இருவிட்டாரும் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதையடுத்து, நேற்று முன்தினம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம். நான் சிறு வயதிலிருந்தே கொளத்தூர் மணியண்ணனின் திராவிடர் விடுதலைக் கழகம் அமைப்பில் இருக்கிறேன்.

அதையடுத்து, மேட்டூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்து, நேற்று காலை மேட்டூர் வந்தோம். பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு அதிகமாக இருந்ததால், கொளத்தூர் சென்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தோழர் வீட்டுக்குச் சென்றோம். அங்கு, நேற்று 11:30 மணிக்கு பெரியார் சிலை முன்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டோம்.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி
க.தனசேகரன்

அதையடுத்து, பெண் வீட்டார் தரப்பில் மாலை 5:00 மணிக்கு சமரசம் பேச வருவதாக, ஈஸ்வரன் தோழருக்கு போன் வந்ததையடுத்து, நாங்கள் அய்யம்புதூரில் உள்ள பரத் தோழர் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். இரவு 8:30 மணிக்கு, நான்கைந்து கார்களில் 40-க்கும் மேற்பட்ட அடியாட்களோடு வந்து, ஈஸ்வரன் தோழரை அடித்துத் துன்புறுத்தினார்கள்.

இத்தகவல் எங்களுக்குத் தெரிந்ததும் நான், என் மனைவி இளமதி, தோழர் பரத் ஆகியோர் மணியண்ணனின் தோட்டத்திற்கு டூவிலரில் கிளம்பினோம். எங்களை உப்பன்பருத்திக்காடு பகுதியில் இரவு 9:30 மணிக்கு வழிமறித்துப் பிடித்து, சாதிப் பெயர் சொல்லித் திட்டி, அடித்து சித்ரவதை செய்தார்கள். என் மனைவி இளமதியை ஒரு காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய் விட்டார்கள்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்த எங்களை ஈஸ்வரன் தோழரை அடித்துத் தூக்கிக்கொண்டுவந்து ஆம்னி வேனில் போட்டுவிட்டு, என் பாக்கெட்டில் இருந்த செல்போனையும், 15,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, என் மனைவி இளமதியை மீட்டுக் கொடுக்க வேண்டும்'' என்றார்.

கடத்தப்பட்ட கார்
கடத்தப்பட்ட கார்
எம். விஜயகுமார்

இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, ``காதல் தம்பதியினரை சாதி வெறிக் கும்பல் காட்டுமிராண்டித்தனமாக அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இது, ஆளும் அ.தி.மு.க அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம். காதல் தம்பதியினருக்கு இந்த ஆட்சியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. சாதி சங்கத்தைப் போல அ.தி.மு.க அமைச்சர் ஒருவர் சாதி வெறிக் கும்பலுக்குத் துணையாக இருப்பது வெட்கக்கேடானது.

சட்டமன்றத்தில் காதல் தம்பதியினருக்கு பாதுகாப்பு கொடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும். செல்வனுக்கும் இளமதிக்கும் நேற்றே சுயமரியாதைத் திருமணம் நடந்துவிட்டது. செல்வனின் மனைவி இளமதியை உடனே மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களிடம் பேசியதற்கு, ``இந்த வன்முறைக்குப் பின்னால் சாதிய அமைப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணனும் இருக்கிறார். கருப்பண்ணனின் தூண்டுதலால்தான் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது'' என்றார்கள்.

இதுபற்றி தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் தரப்பில் கேட்டதற்கு, ``அமைச்சர் சட்டசபையில் இருப்பதால் தற்போது பேச முடியாது. இதற்கும் அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்பதோடு முடித்துக்கொண்டனர். இதுதொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தாக்குதலில் காயமடைந்த ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில், கடத்தப்பட்ட மணப்பெண் இளமதியை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு