ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் (Srikakulam) மாவட்டம், ராஜம் (Rajam) கிராமத்தில் அரசு மருத்துவமனை இருக்கிறது. ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள மேட்டுவலசா (Mettuvalasa) கிராமத்தில் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட ஒரு பதிவு காரணமாகத் தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரண்டு தரப்பினரும் செங்கல், கட்டை போன்றவற்றைக் கொண்டு மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். இதில் 20-க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர்.
இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் ராஜம் கிராமத்திலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த மருத்துவமனையில் மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாததால், மருத்துவமனையிலிருந்த காவலாளிகள் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். காவலாளிகள் காயமடைந்தவர்களுக்குத் தையல் போட்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வீடியோவில் சிகிச்சை அளிக்கும் நபர், மருத்துவமனையில் காவல் பணியில் இருக்கும் சஞ்சீவி என்பது தெரியவந்திருக்கிறது. மருத்துவ ஊழியர்கள் யாரும் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு சஞ்சீவி சிகிச்சை அளித்திருக்கிறார். `ஒரு பாதுகாவலர் எப்படி காயத்துக்குத் தையல் போட்டு சிகிச்சை அளிக்கலாம்’, `அந்த மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்கள் எங்கே?’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில், ``எங்கள் மருத்துவமனையின் காவலர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கான பயிற்சியை வழங்கியிருக்கிறோம். அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்க எங்கள் மருத்துவமனையிலுள்ள இரண்டு காவலர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். பயிற்சி பெற்றவர்களின் சேவையை அவசர நேரங்களில் நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம். இல்லையெனில், இருக்கும் மருத்துவ ஊழியர்களைக் கொண்டு அனைத்து நோயாளிகளையும் எங்களால் பார்க்க முடியாத நிலை உண்டாகும்" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.