மார்ச் 29 அன்று நள்ளிரவு 12.50 மணி... அசாம் மாநிலத்தின் ஐஐடி-கவுகாத்தியில் பி.டெக் மாணவர் ஒருவரால், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். ஐஐடி-கவுகாத்தி வளாகத்திலேயே இந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் நடந்திருப்பதாக அப்போது கூறப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த மாணவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில், “மாநிலத்தின் எதிர்காலச சொத்து” என்று கூறி கவுகாத்தி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆகஸ்ட் 13 அன்று இந்த ஜாமீன் மனுவை விசாரித்த கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் போர்தாகுர், “இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் என இருவரும் மாநிலத்தின் எதிர்கால சொத்துக்கள். ஐஐடி கவுகாத்தியில் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்கும் திறமையான மாணவர்கள். 19-21 வயதுக்குள் இருக்கும் இரண்டு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டதாக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவரைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பது அவசியமற்றதாகிவிடலாம்” என்று சொல்லி குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக பிப்ரவரி 2017-ல், ஐஐடி-கவுகாத்தி மாணவர்கள் இருவர் கவுகாத்தி பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.