Published:Updated:

`காஷ்மீர் எங்க இருக்கு?; சீனாவுல இருக்கு’ - நெட்டிசன்களைக் கொந்தளிக்கவைத்த ட்விட்டர், அலெக்ஸா!

ஜம்மு - காஷ்மீர் சீனா இருப்பதாகக் காட்டும் ட்விட்டர்
ஜம்மு - காஷ்மீர் சீனா இருப்பதாகக் காட்டும் ட்விட்டர்

தேசியப் பாதுகாப்பு ஆய்வாளரான நிதின் கோகலே, லடாக்கின் லே பகுதியில் அமைந்துள்ள போர் நினைவகத்திலிருந்து மதியம் 12 மணியளவில் ட்விட்டரில் லைவ் வீடியோ ஒன்றை ஆரம்பித்தார். அந்த வீடியோவில்...

காஷ்மீர் எல்லையில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நிலவிவருகிறது. சீனப் படைகள் காஷ்மீர் எல்லையை ஆக்கிரமித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. `எல்லையில் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன' என இந்திய அரசு தெரிவித்துவருகிறது. இந்தநிலையில், `காஷ்மீர், சீனாவைச் சேர்ந்தது' என பதிலளித்து நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அமேஸான் நிறுவனத்தின் 'அலெக்ஸா' செயற்கை நுண்ணறிவுக்கருவி.

அமேஸான் அலெக்ஸா
அமேஸான் அலெக்ஸா
India-China Face-off: `38,000 ச.கி.மீ ஆக்கிரமிப்பு; எந்தச் சூழலுக்கும் தயார்!’ - ராஜ்நாத் சிங்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், ``காஷ்மீர் எந்த நாட்டைச் சேர்ந்தது?'' என இந்தி மொழியில் அமேஸான் அலெக்ஸா கருவியிடம் கேள்வி எழுப்பியிருந்தார் அந்த நெட்டிசன். அதற்கு, ``இது உங்கள் கேள்விக்கான ஒரு பதிலாக இருக்கலாம். காஷ்மீர் சீனாவில் அமைந்திருக்கிறது'' என்று பதிலளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது அலெக்ஸா.

இதையடுத்து பலரும் அமேஸான் நிறுவனத்தை டேக் செய்து இதேபோல அலெக்ஸாவிடம் கேள்வியைக் கேட்டு அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிடத் தொடங்கினர். இந்தி மொழியில் மட்டுமே `காஷ்மீர் சீனாவில் அமைந்துள்ளது' என்று அலெக்ஸா பதிலளிக்கிறது. ஆங்கிலத்தில், `காஷ்மீர், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது' என்று சரியான பதிலைத் தருகிறது.

சோஷியல் மீடியாவில் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, அமேஸான் நிறுவனம் ட்விட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தது. அதில்,

இதை எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. இது குறித்து எங்கள் ஆராய்ச்சிக்குழுவுக்குத் தகவல் அனுப்பியிருக்கிறோம். எதிர்காலத்தில் உதவி தேவைப்பட்டால் எங்களை அணுகவும். நாங்கள் எப்போதும் உதவத் தயாராக இருக்கிறோம்.
``அமேஸான் ஹெல்ப்' ட்விட்டர் பக்கம்
ட்விட்டர்
ட்விட்டர்
Pixabay
India-China Faceoff: `மே மாதத்திலிருந்தே மிக மோசமான நிலைமைதான்..!' - எல்லையில் என்ன நடக்கிறது?

இந்தச் சம்பவத்துக்கு முன்பே `காஷ்மீர், சீனாவில் இருப்பதாக' ட்விட்டர் செயலி காட்டியது சர்ச்சையானது. கடந்த அக்டோபர் 18-ம் தேதி, தேசியப் பாதுகாப்பு ஆய்வாளரான நிதின் கோகலே (Nitin Gokhale), லடாக்கின் லே பகுதியில் அமைந்துள்ள போர் நினைவகத்திலிருந்து, மதியம் 12 மணிக்கு ட்விட்டரில் லைவ் வீடியோ ஒன்றை ஆரம்பித்தார். அந்த வீடியோவில் காட்டப்படும் `Location’ பகுதியில் `ஜம்மு & காஷ்மீர், பீப்புள் ரிபப்ளிக் ஆஃப் சீனா' என்று காட்டியது ட்விட்டர் செயலி. இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்...

ட்விட்டர் நண்பர்களே... நான் 'ஹால் ஆஃப் ஃபேமி'ல் இருந்து லைவ் வீடியோ ஒன்றைப் பதிவிட்டேன். 'ஹால் ஆஃப் ஃபேம்' என்பதை லொகேஷனாகக் கொடுத்தால் ஜம்மு & காஷ்மீர், பீப்புள் ரிபப்ளிக் ஆஃப் சீனா என்று சொல்கிறது.
நிதின் கோகலே, தேசியப் பாதுகாப்பு ஆய்வாளர்

காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ள லே நகரத்தில், உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவாக இந்திய ராணுவத்தால் கட்டப்பட்ட அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. அதுதான் `ஹால் ஆஃப் ஃபேம்' என்று அழைக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் இந்த அருங்காட்சியகம் சீனாவில் அமைந்திருப்பதாக ட்விட்டர் செயலி குறிப்பிட்டதையடுத்து நெட்டிசன்கள் பலரும் ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராகப் பல ட்வீட்களைப் பதிவிட்டனர். `இது இந்தியச் சட்டத்துக்கு எதிரானது', `அமெரிக்க நிறுவனமான ட்விட்டர் இந்தியாவின் சட்டத்தை மீறிவிட்டது' என்றெல்லாம் பதிவிட்டு ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராகக் கொந்தளித்தனர் நெட்டிசன்கள்.

இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ``இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து ஞாயிற்றுக்கிழமை எங்களுக்குத் தெரியவந்தது. இது தொடர்பான உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். விரைவில் இது குறித்து விசாரித்து, தவறு சரிசெய்யப்படும்'' என்று கூறியிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. பின்னர் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது.

இது தொடர்பாக இந்திய அரசு, ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜாக் டார்ஸிக்கு (Jack Dorsey) ``ஜம்மு & காஷ்மீர், இந்திய அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதிகள். இத்தகைய விஷயங்கள் ட்விட்டர் நிறுவனத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு, ட்விட்டரின் நடுநிலைமை, நேர்மை பற்றிய கேள்விகளையும் எழுப்புகின்றன'' என்று காட்டமாகக் கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், இந்திய வரைபடத்தைத் தவறாகச் சித்திரித்திருப்பதாகவும் இந்தியர்களின் உணர்வை மதிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

``அமேஸான் அலெக்ஸா, ட்விட்டர் என இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் காஷ்மீர், சீனாவில் அமைந்திருப்பதுபோலச் சித்திரித்திருப்பது திட்டமிட்ட சதியாகத்தான் இருக்கும். தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்வதெல்லாம் பொய்'' என்று சில நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

அமேஸான், ட்விட்டர்
அமேஸான், ட்விட்டர்
``இது சதியாக இருக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே இது போன்ற தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், தற்போது காஷ்மீர், சீனா என சென்ஸிட்டிவான இடங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் `இது சதியாக இருக்குமோ?' என்கிற சந்தேகம் எழுந்திருக்கலாம். வேண்டுமென்றே தங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்ள எந்தவொரு பெரிய நிறுவனமும் தயாராக இருக்காது. எனவே, இது டெக்னிக்கல் கோளாறாகத்தான் இருக்கும்'' என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
அடுத்த கட்டுரைக்கு