Published:Updated:

`கரியர் பெரிதா, உள்ளாடை பெரிதா எனக்கேட்டு அகற்ற சொன்னார்கள்!’ - நீட் எழுதிய கேரள மாணவிகள் கண்ணீர்

``குனிந்து தேர்வு எழுத முடியவில்லை. மார்பில் கைவைத்துக்கொண்டே இருந்தேன். வெளியே வந்தால் போதும் என்றிருந்தது. தேர்வு முடிந்து வந்தபோது அந்த இருட்டு அறையில் மாணவிகளின் ’பிரா’க்கள் குவிந்து கிடந்தன. நாங்கள் சுய மரியாதையை இழந்து தேர்வு எழுதினோம்.’’ - `நீட்’ எழுதிய மாணவி

`கரியர் பெரிதா, உள்ளாடை பெரிதா எனக்கேட்டு அகற்ற சொன்னார்கள்!’ - நீட் எழுதிய கேரள மாணவிகள் கண்ணீர்

``குனிந்து தேர்வு எழுத முடியவில்லை. மார்பில் கைவைத்துக்கொண்டே இருந்தேன். வெளியே வந்தால் போதும் என்றிருந்தது. தேர்வு முடிந்து வந்தபோது அந்த இருட்டு அறையில் மாணவிகளின் ’பிரா’க்கள் குவிந்து கிடந்தன. நாங்கள் சுய மரியாதையை இழந்து தேர்வு எழுதினோம்.’’ - `நீட்’ எழுதிய மாணவி

Published:Updated:

மருத்துவப் படிப்பிக்கான தகுதித் தேர்வான நீட் எக்ஸாம் நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில் தேர்வு எழுத வந்த சில மாணவிகளிடம், 'பிரா'வை அகற்றிய பின்னரே எக்ஸாம் ஹாலுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stop Violence against women (Representational Image)
Stop Violence against women (Representational Image)
Unsplash

இந்த விதியால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொல்லம், சூரநாடு பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் கொல்லம் ரூரல் எஸ்.பி-க்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் கூறுகையில், "தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்தின் கேட்டை கடந்தபோது ஒரு பெண் அதிகாரி மாணவியை அழைத்து ஸ்கேனர் உபயோகித்து பரிசோதனை நடத்தினார். பிராவில் மெட்டல் ஹூக் இருந்ததால் பீப் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளாடையை அகற்றி வெளியே வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ள கொள்ள முடியாமல் மாணவி கதறி அழுதார். இதனால் அந்த அதிகாரி மாணவியை மிகவும் மோசமான வார்த்தைகளை பிரயோகித்து பேசினார். ’தேர்வு முக்கியமா, உன்னுடைய உள்ளாடை முக்கியமா?’ எனக் கேட்டார். தேர்வு எழுதிய பிறகு உள்ளாடை இல்லாமல் வெளியே போக முடியாமல் ஓர் ஓரமாக நின்று அழுவதைக் கண்ட மற்றோர் அதிகாரி அருகில் சென்று விஷயங்களை கேட்டார். நிலைமையை புரிந்துகொண்ட அவர் அந்த மாணவியின் அம்மாவின் போன் நம்பரை வாங்கி செல்போனில் அழைத்து அம்மாவை துப்பட்டாவை கொண்டுவரும்படி சொன்னார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு
மாதிரி படம்

பின்னர் காரில் சென்றபோது, ’தேர்வு எப்படி எழுதினாய்?’ எனப் பெற்றோர் கேட்டபோது வெடித்து அழுத மாணவி நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகள் உலோகம் போன்ற பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை காரணம் காட்டி மாணவியின் உள்ளாடையை அகற்றவைத்துள்ளனர். இது தந்த மன உளைச்சலால் சரியாகத் தேர்வு எழுத முடியவில்லை என்றும், தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத முடியாமல் திரும்பி வந்ததாகவும் மாணவி கூறியுள்ளார். இன்னும் பல மாணவிகளுக்கும் இதுபோன்று நடந்ததாக மாணவி கூறியுள்ளார்" என்றனர் பெற்றோர் தரப்பில்.

நீட் தேர்வில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து மாணவிகளின் உறவினர்கள் பலரும் முகநூலில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுபற்றி மீடியாவிடம் பேசிய மாணவி ஒருவர், "நான் இதற்கு முன்பும் தேர்வு எழுதியதால் மெட்டல் ஆடைகள் அணியக்கூடாது என்பது தெரியும். அதனால் பிளாஸ்டிக் ஹூக் உள்ள பிரா அணிந்து சென்றேன். ஆனாலும் அவர்கள் பீப் சத்தம் கேட்டதாக சொல்லி பிராவை அகற்றச் சொன்னார்கள். அவர்கள் சொன்ன அறையில் 10, 15 மாணவிகள் ஒன்றாக நின்றுகொண்டு பிராவை கழற்றும் நிலைமை. ஒரு கவரில் தனியாக உள்ளாடையை வைப்பதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. அங்கு ஓரிடத்தில் போடச்சொன்னார்கள். ஒரு வருடம் கஷ்டப்பட்டு படித்த இந்தத் தேர்வை எழுத முடியாதோ என்ற பயத்தின் காரணமாக அவர்கள் சொன்னதை செய்தோம். புதிதாக வந்த மாணவி ஒருவர், இதை எப்படி செய்வது எனத் தயங்கியபோது, 'உங்கள் கரியர் பெரிதா, உள்ளாடை பெரிதா?' எனக் கேட்டார்கள். நாங்கள் சுய மரியாதையை இழந்து தேர்வு எழுதினோம்.

நீட் தேர்வு மையம்
நீட் தேர்வு மையம்
மாதிரி படம்

உள்ளாடையை அகற்றிய பிறகு தரைத்தளத்தில் இருந்து இரண்டாவது மாடியில் உள்ள தேர்வு எழுதும் அறைக்கு நாங்கள் செல்லும்போது வழிகாட்ட ஆண் வாலன்டியர்ஸ் நின்றனர். அவர்களை எல்லாம் தாண்டி தேர்வு எழுதும் அறைக்குச் சென்றேன். அது ஆண்களும் பெண்களும் சேர்ந்து தேர்வு எழுதும் அறை. உள்ளாடை இல்லாமல இந்த ஹாலில் எப்படி இருப்பது என கேட்டதற்கு, அனைத்து மாணவிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் எனச் சொன்னர்கள். என் இருக்கையை சுற்றி மாணவர்கள் இருந்தார்கள். அடிக்கடி ஒரு சார் அங்கு பரிசோதனைக்காக வந்தார். அவர்கள் முன்பு எப்படி தேர்வு எழுத முடியும்? நாங்கள் அழுதோம். வெள்ளை நிற ஆடை அணிந்து வந்த மாணவிகளின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. கீழே விழுந்த பேனாவை எடுக்கவோ, குனிந்து தேர்வு எழுதவோ முடியாத அவஸ்தை. தேர்வு முடியும் வரை மார்பில் கைவைத்துக்கொண்டே இருந்தேன். எப்படியாவது வெளியே வந்தால் போதும் என்று இருந்தது. வெளியே வந்து அந்த இருட்டான அறையில் சென்று பார்த்தபோது அந்த ரூம் முழுவதும் மாணவிகளின் உள்ளாடைகளாக குவிந்து இருந்தது. ’காரில் போகிறவர்கள் அப்படியே வெளியே செல்லுங்கள்’ என்றனர். மாணவிகள் அழுதுகொண்டே சென்றனர்" என்றார்.

இதுபற்றி மார்தோமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கண்காணிப்பாளர் ஒருவர் கூறுகையில், "செக்யூரிட்டி, கேமரா, மாணவர்களை பரிசோதிப்பது உள்ளிட்டவை வெளியில் உள்ள ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அட்மிட் கார்டு மற்றும் அடையாள அடையை பரிசோதிப்பதை மட்டுமே எங்கள் கல்லூரி ஆசிரியர்கள் செய்தனர். மற்றபடி பரிசோதனையில் நடந்தவற்றுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.

கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து
கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து

இதுகுறித்து விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கொல்லம் ரூரல் எஸ்.பி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி இளைஞர் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து, "நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடையை அகற்றச் சொன்னது பொறுப்பற்ற செயல். இது குறித்து எழுத்துபூர்வமாக மத்திய அரசிடம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளோம். எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.