Published:Updated:

`ஊரடங்கால் சிக்கல்; 3 மாதங்களாக ஊதியம் இல்லை!’-தவிக்கும் அரசரடி அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

இராஜம் வித்யாலயம் நடுநிலைப் பள்ளி
இராஜம் வித்யாலயம் நடுநிலைப் பள்ளி

ஊரடங்கால் பள்ளி தாளாளர் லக்னோவில் மாட்டிக்கொள்ளவே, அவர் கையொப்பமிடாததால் மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் 20 ஆசிரியர்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. உலகளவில் மிகவும் மோசமாக பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக நோய்த் தாக்குதல் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறுபக்கம் ஊரடங்கால் பொருளாதாரரீதியாகப் பல்வேறு வகையான மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சிறு, குறு தொழிலாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை அரசரடி பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் ராஜம் வித்யாலயம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு 3 மாதம் சம்பளம் கொடுக்காமல் பள்ளி நிர்வாகம் இழுத்தடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ``எங்கள் பள்ளியில் ஆரம்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களைக்கண்டு மாணவர்கள் சிறப்பாகப் படித்தார்கள். ஆனால், எங்கள் பள்ளி அரசு உதவிபெறும் பள்ளி என்பதால் பள்ளி உரிமையாளர்களுக்குப் பெரிய அளவு பயன் கிடைக்கவில்லை. அதனால், பள்ளியைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்கள். பள்ளி நிர்வாகத்திற்குச் சொந்தமாக எங்கள் பள்ளி அருகிலேயே மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றும் உள்ளது. இதனால் அதன் முன்னேற்றத்தையே முக்கியமாக்கிவிட்டனர். எங்கள் பள்ளியில் சேர நினைக்கும் மாணவர்களைக் கூட சேரவிடாமல் அவர்களின் பெற்றோரை மூளைச் சலவை செய்து அந்த மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்துக்கொள்கின்றனர். இதனால் எங்கள் பள்ளியில் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து 126 மாணவர்கள் மட்டும்தான் படித்து வருகின்றனர்.

இராஜம் வித்யாலயம் நடுநிலைப் பள்ளி
இராஜம் வித்யாலயம் நடுநிலைப் பள்ளி

வருமானம் இல்லை என்பதால் அரசு உதவி பெறும் பள்ளியாக இருக்கும் இந்த நடுநிலைப் பள்ளியை மூட வேண்டும் எனச் செயல்படுகின்றனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பள்ளியில் பணியாற்றும் 21 பேருக்கும் சம்பளம் போடாமல் இழுத்தடிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். அரசு பணியாளர்களின் சம்பளத்தைச் சிக்கல் இல்லாமல் கிடைக்க வேண்டும் என அரசு பணியாற்றுகிறது. ஆனால், பள்ளி நிர்வாகமும், வட்டாரக் கல்வி அலுவலரும் சம்பளம் கிடைப்பதை எளிமை செய்யாமல் 3 மாதம் சம்பளம் கிடைப்பதை முடக்கியுள்ளனர்" என்று வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் எழில் கூறுகையில், ”`எங்கள் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை மூளை சலவை செய்து எங்களுடைய மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்க்கிறது’ என்பது அபாண்டமானது. எங்கள் நிர்வாகத்தின் மீது தவறாக தகவலை கூறியுள்ளனர்

அரசு வங்கிக் கணக்குகளில் ஆன்லைன் மூலம் சம்பளம் போடுகிறது. இதில், மாவட்டக் கருவூலம் மூலம் கணினி முறையில் சம்பளம் ஏற்றுவதில் எங்கள் பள்ளிக்குச் சில சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் தாளாளர் ஊரடங்கு சமயத்தில் லக்னோவில் மாட்டிக் கொண்டதால் அவர் ஊர் திரும்ப முடியவில்லை. அதனால் சம்பளம் போடுவது தொடர்பாக கையொப்பம் வாங்க முடியவில்லை. இருந்த போதிலும் கொரியர் மூலம் கையொப்பம் பெற்று அனுப்பியுள்ளோம். மாவட்டக் கருவூலம் எங்கள் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை விரைவில் ஏற்றிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.

கொரோனா
கொரோனா

இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர் நமச்சிவாயத்திடம் கேட்டோம். ``தற்போது IFHRMS என்ற ஆன்லைன் முறையின் மூலம்தான் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதனால் ஆவணங்கள், தகவல்கள் முறையாக இருந்தால்தான் முழுமைப்படுத்தி செயல்படுத்த முடியும். ஆனால், ராஜம் வித்யாலயம் பள்ளியில் சம்பளம் போடுவது தொடர்பாக கையொப்பம் போட்டு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர்களுக்குச் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் பணியாற்றும் 21 ஆசிரியர்களில் ஒரு ஆசிரியரின் ஓய்வூதிய பிடித்தம் தொடர்பான ஆவணம் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய பணிக்குச் சேர்ந்த தேதி பழைய ஓய்வு ஊதியம் அடிப்படையில் பெறும் வகையில் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து ஆசிரியர்களும் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், மாவட்டக் கருவூல அலுவலகத்தில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியைத் தவிர மற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தகவல் தெரிவித்துள்ளோம். ஒரு சில நாள்களில் 20 ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைத்துவிடும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு