Published:Updated:

மூர்க்கத்தனமாகத் தாக்கும் பாகன்கள்; கதறும் யானை! - கோவை யானைகள் முகாம் அதிர்ச்சி

யானை
யானை

கோவை தேக்கம்பட்டி யானைகள் முகாமில் ஓர் யானை, பாகன்களால் சரமாரியாகத் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும், கோயில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் விதமாக நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம், தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு சுமார் 26 கோயில் யானைகள் முகாமில் கலந்துகொண்டிருக்கின்றன.

யானைகள் முகாம்
யானைகள் முகாம்
நீலகிரி: பிடிபட்ட `உடைந்த கொம்பன்’ யானை! - முடிவுக்கு வந்த இரண்டு மாதப் போராட்டம்

காடுகளில் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருந்த யானைகள், மற்ற பணிகளில் ஈடுபடும்போது சற்று இறுக்கமான சூழ்நிலை உருவாகலாம்.

அதைப் போக்கும்விதமாகத்தான் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. நல்ல உணவுகள், ஷவர் குளியல், இதமான தட்வெப்ப சூழ்நிலையில் வாக்கிங் என்று யானைகளுக்கு உற்சாகம் அளிக்கும் விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. யானைகள் முகாம் என்றாலே, யானைகள் ஜாலியாக ஆட்டம்போடும் வீடியோக்களைத்தான் பார்த்திருப்போம்.

யானை
யானை

இந்தநிலையில், அதற்கு நேரெதிரான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. யானைகள் முகாமில், ஒரு யானையை இரண்டு பாகன்கள் சரமாரியாகத் தாக்குவதும், வலியில் அந்த யானை கதறுவதுபோலவும் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ஜெயமால்யதா யானையை, அதன் பாகன் ராஜா மற்றும் காவடி (உதவியாளர்) குச்சியால் சரமாரியாகத் தாக்கும் வீடியோவை, முகாமுக்குச் சென்றிருந்தவர்கள் எடுத்திருக்கிறார்கள். ``இதுதான் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமா.. யானையைத் தாக்கியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,``எங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டாம். விசாரித்துவிட்டு. அது உண்மையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர்.

யானைப் பாகன் ராஜாவிடம் கேட்டபோது, ``நான் பரம்பரை யானைக்காரன். யானை என் காலை மிதித்தது. அதற்கு நான் இரண்டு அடி கொடுத்தேன். உடன் இருந்தவர் அடித்தது மிரட்டுவதுபோலத்தான் இருக்கும். யானையை என் குழந்தைபோலப் பராமரித்துவருகிறேன். என் கைக்காசைப் போட்டு பல செலவுகளைச் செய்திருக்கிறேன். ஶ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று நீங்களே நேரடியாக விசாரித்துப் பாருங்கள். நான் யானையைக் கொடுமை செய்பவனெல்லாம் இல்லை.

யானை
யானை

அது அடுத்தமுறை என் காலை மிதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் அடித்தேன். சிலர் தங்களை முகாமுக்குள் அனுமதிக்கவில்லை என்பதற்காக இப்படி வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். யானைக்கு ஒரு காயம்கூட இல்லை. யாராவது ஆய்வு செய்து காயத்தைக் காண்பித்தால், நான் என் வேலையைவிட்டுச் செல்லவும் தயாராக இருக்கிறேன்” என்றார்.

சுழற்றிய கோயில் யானை, பறிபோன பேச்சு, தொண்டையில் டியூப்... பெண்ணின் 20 வருடப் போராட்டம்!

இந்தநிலையில், யானையைத் தாக்கிய பாகன் ராஜாவை சஸ்பெண்ட் செய்து, கைதுசெய்ய திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு