Published:Updated:

அரசமைப்புச் சட்டம் புதைத்த மனு நூலுக்கு மறுவாழ்வா?

புதைக்கப்பட்ட மனு சாஸ்திரம்!

பிரீமியம் ஸ்டோரி

த்தரப்பிரதேசம், ஹத்ராஸ் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு பெண், அந்த ஊரின் உயர் சாதியினர் சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையும் செய்யப்பட்டார். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இதை முறையாக விசாரிக்காமல் அநீதி இழைத்ததுடன், அந்தப் பெண்ணின் உடலை உறவினர்களுக்குக் காட்டாமலேயே நள்ளிரவில் தகனம் செய்துவிட்டன.

இதையடுத்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 236 பேர், தாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, யோகி தலைமையிலான அரசு தங்களைப் பழிவாங்குகிறது; இனி இந்து மதத்தில் இருப்பதால் மேலும் சுயகௌரவம் பாதிக்கப்படும் என்று கூறி அக்டோபர் 14-ம் தேதியன்று புத்த மதத்துக்கு மாறினர்.

சரியாக 64 வருடங்களுக்கு முன்னர் 1956-ல் இதே தேதியன்றுதான் டாக்டர் அம்பேத்கர், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியதோடு, ‘இனி இந்து மதத்தில் இருப்பதால் பட்டியலின மக்களுக்கு எந்த விமோசனமும் இல்லை’ என்ற கருத்துடன், நாக்பூரிலுள்ள தீட்சை பூமிக்கு தன் ஆதரவாளர்கள் இரண்டு லட்சம் பேருடன் சென்று புத்த மதத்தில் இணைத்துக்கொண்டார். தனது வாழ்நாள் முழுவதும் மதம் என்ற பெயரில், பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடியும் பலன் ஏதுமின்றி, இதிலிருந்து விடுபடும் வழியாகத்தான் அவர் மதமாற்றத்தை ஒரு போராட்டக் கருவியாகக் கையிலெடுத்துக்கொண்டார்.

அரசமைப்புச் சட்டம் புதைத்த மனு நூலுக்கு மறுவாழ்வா?

இதற்கு முன்பே அம்பேத்கர் 1935-ம் வருடம் நாசிக் மாவட்டம், இயோலா என்ற இடத்தில் நடந்த மஹர் இனத்தவரின் மாநாட்டில் உரையாற்றும்போதே, “இந்து மதத்திலுள்ள சமத்துவமின்மைதான், இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று நான் எண்ணுவதற்குக் காரணம். துரதிர்ஷ்டவசமாகத் தீண்டாமை எனும் கறையுடன் பிறந்துவிட்டேன். அது என் தவறன்று. ஆனால், நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்” என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். ‘இந்து மதம் சாஸ்திரங்களை நம்பியிருக்கிறது. சாஸ்திரங்கள் சாதிக் கட்டுமானத்தை வலியுறுத்துகின்றன. எனவே, சாஸ்திரங்களை நம்பியிருக்கும் மதத்தை விட்டொழித்தால் தவிர, மக்களின் விடுதலைக்கு வேறு வழி ஏதுமில்லை’ என்று வலியுறுத்தினார் அம்பேத்கர்.

இந்தியா விடுதலையடைவதற்கு முன்னர் மன்னராட்சியிலும் சரி... காலனியாட்சியிலும் சரி... இந்தத் துணைக்கண்டத்திலிருக்கும் மக்களை சமூகக் கொடுமைகளிலிருந்து வெளிக்கொண்டுவருவதற்கு எத்தகைய முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை. சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சியும், சமூகச் சீர்திருத்தத்தைத் தங்களது நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் காட்டிக்கொண்டிருந்தாலும், அதற்கான தீவிரமான செயல்திட்டம் ஏதும் அவர்களால் தீட்டப்படவில்லை.

புதைக்கப்பட்ட மனு சாஸ்திரம்!

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சொத்துரிமை, வாரிசுரிமை, திருமணம் இவற்றைப் பற்றிப் புதிய சட்டங்களை இயற்ற முற்பட்டபோது, இங்கிருந்த மதத் தலைவர்கள் அளித்த மத நூல்களின் கோட்பாடுகளை எடுத்துக்கொண்டுதான் சட்டம் வகுத்தனர். ஆனாலும், இந்தியா விடுதலை பெற்று அரசமைப்புச் சட்டம் உருவாகும்வரை, ‘மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிட அடிப்படையில் அரசு வேறுபாடுகளைக் காட்ட முடியாது’ என்ற அடிப்படை உரிமையை மன்னர்களோ, காலனி ஆட்சியாளர்களோ எவரும் அளித்ததில்லை. அம்பேத்கர், அர்த்தமற்ற சில இந்து மத சாஸ்திரங்களைச் சாடியதுடன், அரசமைப்புச் சட்டம் இயற்றும் அவை விவாதங்களில் ஒரு பெரிய புரட்சியைச் செய்ததன் மூலம் சட்டப்படி மனு சாஸ்திரம் 1950-லேயே புதைக்கப்பட்டுவிட்டது.

அரசமைப்புச் சட்டம் புதைத்த மனு நூலுக்கு மறுவாழ்வா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவில், ‘சட்டத்தின் முன் மக்கள் அனைவரும் சமம்’ என்று அறிவித்ததோடு, ‘நாடாளுமன்றங்கள் அந்தச் சட்டத்திலுள்ள அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாது’ என்று 13-வது பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. இது தவிர, 15-வது பிரிவில் ‘அரசு, எந்தக் குடிமகனுக்கும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது வேறு எக்காரணத்தை முன்னிட்டும் வேறுபாடு காட்டக் கூடாது; பட்டியலின, தொல்குடியின மக்களையும், சமூகரீதியாகவும் கல்வியாலும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் முன்னேற்றுவதற்குச் சட்டங்களை இயற்றலாம்’ என்று கூறியதுடன், பிரிவு 16-ல், ‘அதே உரிமைகள் பொது வேலைவாய்ப்புகளிலும் உண்டு’ என்றும் கூறியது. தொடர்ந்து 17-வது பிரிவில், ‘பட்டியலின மக்களைக் கொடுமைப்படுத்தும் வகையில் தீண்டாமை எந்த வடிவத்திலும் இருக்கக் கூடாது; நாடாளுமன்றம் அதற்கான சட்டங்களை இயற்ற வேண்டும்’ என்றும் கூறப்பட்டிருக்கிறது.

‘ஆர்டிக்கிள் 15’ என்ற இந்தித் திரைப்படம் கடந்த ஆண்டில் வெளியானது. அந்தப் படத்தை எடுத்த இயக்குநரிடம், ‘அரசமைப்புச் சட்டத்தில் பல பிரிவுகள் இருக்கும்போது, உங்கள் படத்துக்கு ‘பிரிவு 15’ என்று பெயர் வைத்தது ஏன்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘15-வது பிரிவுதான் அரசமைப்புச் சட்டத்தின் மிகச் சிறப்பான பிரிவு; அது ஒரு மனிதனின் இதயத்தைப் போன்றது’ என்று கூறினார்.

அதேநேரத்தில் மத உரிமைகளையும் வழங்கத் தவறவில்லை இந்திய அரசமைப்புச் சட்டம். அதன் 25(1) பிரிவு, ‘பொது ஒழுங்கு, நன்னடத்தை, நல்வாழ்வு மற்றும் இப்பகுதியிலுள்ள மற்ற சட்டப் பிரிவுகளுக்குட்பட்டு, சமய பிரசாரம் செய்ய உரிமை உண்டு’ என்கிறது. பிரிவு 25(2)-ல் ‘மேற்கூறிய பிரிவில் என்ன கூறியிருப்பினும், தற்போது நடைமுறையிலிருக்கும் சட்டங்களோ அல்லது எதிர்காலத்தில் உருவாகும் சட்டங்களோ, மத நடவடிக்கை சார்ந்த பொருளாதாரம், நிதி, அரசியல் மற்றும் மதச்சார்பற்ற நடவடிக்கைகளைக் கொண்டு வரத் தடையாகாது. மேலும் சமூக நலன், சீர்திருத்தத்தை உருவாக்குவதுடன், இந்து சமய நிறுவனங்கள் அனைத்து வகுப்பினர் மற்றும் பிரிவினர்களுக்கும் திறந்துவைக்கப்படும்’ என்கிறது.

அரசமைப்புச் சட்டம் புதைத்த மனு நூலுக்கு மறுவாழ்வா?

தவிர 1976-ம் வருடம் அரசமைப்புச் சட்டம் (பிரிவு 51 ஏ) திருத்தப்பட்டு, மக்களுக்குச் சில அடிப்படைக் கடமைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதன் உட்பிரிவு ‘இ’-ல் ‘ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் மதம், மொழி, பிரதேச வேறுபாடுகளைக் களைந்து பொதுவான சகோதரத்துவத்தைப் பின்பற்றுவதோடு, நல்லிணக்கத்தை முன்னேற்ற வேண்டும்’ என்ற கடமை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் இந்து மனுவிலிருந்து விலகி, படிப்படியாக நமது இந்திய அரசியமைப்புச் சட்டம் மக்கள் அறம் சார்ந்து உருவாக்கப் பட்டிருக்கிறது.

சூடுபறக்கும் மனு விவாதங்கள்

இன்று தமிழகம் முழுவதும் மனு சாஸ்திரம் பற்றிய விவாதங்கள் சூடுபறக் கின்றன. ‘மனு சாஸ்திரத்தின் பெயரால் திருமாவளவன் இந்துப் பெண்களை அவமதித்துவிட்டார்’ என்று பா.ஜ.க கலகக்கொடி தூக்குகிறது. ‘மனு சாஸ்திரத்தில் கூறியதைத்தான் நான் காணொளி உரையில் குறிப்பிட்டேன்’ என்று திருமாவளவன் பதிலுரைத்தார். ‘மனு சாஸ்திரத்தில் எங்கு அப்படிப்பட்ட கருத்து இருக்கிறது, திருமாவளவனுக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?’ என்று புதிதாக அந்தக் கட்சியில் சேர்ந்த குஷ்பு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கு எதிர்வினையாக விடுதலைச் சிறுத்தைகள், ‘வர்ணாசிரமத்தின் அஸ்திவாரம் மனுதர்மம்தான். எனவே, அந்த நூலைத் தடை செய்ய வேண்டும்’ என்று குரலெழுப்பியிருக்கிறார்கள்.

`மனு’ என்று உண்மையிலேயே ஒருவர் இருந்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், அவர் எழுதியதாகக் கூறப்படும் தர்ம நூலுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட உரைகள் உள்ளன. தவிர அறிஞர்கள் பலரும், ‘மனு சாஸ்திரம் என்ற பெயரில் பல இடைச்செருகல்கள் உள்ளன; மனு சாஸ்திரம் என்பது சில அறங்களின் கோட்பாடு என்பதைத் தவிர அதற்கு எவ்விதப் புனிதமும் கற்பிக்கத் தேவையில்லை’ என்கிறார்கள்.

கூக்குரல் எழுப்புவோர் உணர்வார்களா?

`இந்துப் பெண்களை திருமாவளவன் அவமதித்துவிட்டார்’ என்று கூக்குரல் எழுப்பும் சிலர், முதலில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் படிக்க வேண்டும். என்றைக்கு அந்தச் சட்டம் உருவானதோ, அன்றிலிருந்து நம்மை வழிநடத்திச் செல்வது அரசமைப்புச் சட்டம் ஒன்றுதானே ஒழிய வேறு எந்த சாஸ்திரங்களோ புனித நூல்களோ அல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும். மதங்கள் எவையாக இருப்பினும், அவை பெண்களை ஒரு ஜடப்பொருளாகத்தான் நடத்தி வந்திருக்கின்றன. ‘சூத்திரர்களையும், பெண் களையும், விலங்கினங்களையும் தொடர்ந்து மத்தளத்தை அடிப்பதுபோல் அடித்துவைத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லும் மனு சாஸ்திரத்தை, இன்று கலகக்குரல் எழுப்புபவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

‘சமயம் என்ற பெயரில் ருதுவான பெண்களை சபரிமலை வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியாது’ என்ற நடைமுறையை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘பெண்களை வழிபாட்டுத்தலத்தி லிருந்து ஒதுக்கிவைப்பது தீண்டாமைக்கு ஒப்பானதே’ என்று குறிப்பிட்டுள்ளது.

பிறன் மனை விழைதலைத் தடுக்கும்விதமாக இயற்றப்பட்ட 1860-ம் வருட இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497-ஐ, 2018-ம் ஆண்டு ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், ‘பெண்களை ஜடப்பொருளாகவும், சொத்துகளாகவும் நடத்த முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி ஒரு பெண்ணின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்த முக்கியத் தலைவர்கள் யாரும் மனு சாஸ்திரத்தை தூக்கிப்பிடித்ததில்லை. இந்த வகையறாக்களில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்பினரின் முன்தோன்றல்கள் வராது. இன்று சில பா.ஜ.க தலைவர்கள், ‘மனுவின் கோட்பாடுகளை, ஆங்கிலேயர்கள் தங்களது சமயப் பரப்பலுக்கு ஆதரவாக மொழிபெயர்த்து வெளியிட்டதால் தான் இப்படிப்பட்ட பிரச்னைகள் உருவானது’ என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். மனு சாஸ்திரத்தை நேர்மையுடன் மொழிபெயர்த்த இந்தியர்களின் பதிப்புகளைப் படித்தாலும் ஒரு விஷயம் புலப்படும். அந்த நூலில் பெண்களுக்கு சமத்துவமில்லை. கடுமையான வர்ணாசிரமக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதுடன், சாதிக்கொரு நீதி இருப்பதும் துல்லியமாகவே தெரியும்.

மனு சாஸ்திரம் நூலிலுள்ள கோட்பாடுகள் அரசமைப்புச் சட்டத்தால் நிராகரிக்கப்பட்டவை. அந்த நூலை அரசு தடை செய்தாலும், மக்களின் மனதில் பதிந்திருக்கும் கருத்துகளை நீக்குவதற்கு கருத்துரீதியான போராட்டங்கள் தேவை. அரசை வழிநடத்துவது அரசமைப்புச் சட்டமே தவிர, அறம் தவிர்த்த நூல்கள் அல்ல.

இறுதியாக ஒன்று... சபர்மதி ஆசிரமத்திலிருந்து 9.9.1918-ல் எழுதிய கடிதமொன்றில், காந்தி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மனு ஸ்மிருதியிலுள்ள சில கோட்பாடுகளை நாம் பின்பற்ற நேர்ந்தால், இங்கே தார்மிக அராஜகங்களே வெளிப்படும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு