Published:Updated:

`ஒரேநாளில் 5 திருமணங்கள்.. மீறப்பட்ட விதிமுறைகள்!' -திகிலில் ஆழ்த்திய திருப்போரூர் முருகன் கோயில்

திருப்போரூர் கந்தசாமி கோயில்
திருப்போரூர் கந்தசாமி கோயில்

பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால் அர்ச்சகர்கள் அவசரக் கோலத்தில் திருமணங்களை நடத்துகிறார்கள். அறங்காவலர் குழுத் தலைவர், செயல் அலுவலர்கள் என யாரும் கோயில்களின் மீது அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் எவ்வித தனிமனித இடைவெளியும் கடைப்பிடிக்காமல் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற திருமணங்கள் அக்கோயிலுக்கு வந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நேற்று ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு திருமணத்துக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். கோயில் பூட்டப்பட்ட நிலையில் கோயிலுக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் மக்கள் நெருக்கம் அதிக அளவில் இருந்தது. அங்கு எவ்வித தனிமனித இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை.

செங்கல்பட்டில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இன்றும் இரண்டு திருமணங்கள் அதேபோன்று நடைபெற்றன. கோயில் நிர்வாகம் இவற்றைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 24-ம் தேதி முக்கிய முகூர்த்த நாள் என்பதால் இந்த ஆலயத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, அதற்குள் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

இந்தத் திருமணங்கள் குறித்து, இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.கே.ராஜாவிடம் பேசினோம், “உடல்நிலை சரியில்லை என்றாலோ, மனநிலை சரியில்லை என்றாலோ கோயிலுக்குச் செல்வது நம் வழக்கம். கொரோனா காரணமாக அடைக்கப்பட்ட ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டுவிட்டன. கடைகள், ஹோட்டல்கள், டாஸ்மாக் என எல்லாம் திறக்கப்பட்டுவிட்டன. டாஸ்மாக்குக்கு அளிக்கும் முக்கியத்துவம்கூட கோயில்களுக்கு அளிக்கப்படுவதில்லை. டாஸ்மாக் கடையைத் திறப்பதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியது தமிழக அரசு.

சி.ஆர்.ராஜா
சி.ஆர்.ராஜா

இதில், வருமானத்தை மட்டும் பார்க்கும் அரசாங்கம் இந்துக்களின் மனதைப் புரிந்துகொள்வதில்லை. இந்து கோயில்களைத் திறக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்துத் தரப்பினரையும் இணைத்து தமிழக அளவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்.

கோயில்களில் உரிய கட்டுப்பாடுகளுடன் திருமணங்கள் நடைபெற வேண்டும். ஆனால் இவற்றைக் கண்காணிக்கக் கூடிய செயல் அலுவலர்கள் கோயில் பக்கமே வருவதில்லை. பணம் கிடைக்கிறது என்ற காரணத்தால் அர்ச்சகர்கள் அவசரக் கோலத்தில் திருமணங்களை நடத்துகிறார்கள். அறங்காவலர் குழுத் தலைவர், செயல் அலுவலர்கள் என யாரும் கோயில்களின் மீது அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. இதனால்தான் கோயில்களில் நடைபெறும் திருமணங்கள் சர்ச்சையாகின்றன“ என்றார்.

திருப்பொரூர் கந்தசாமி கோயில்
திருப்பொரூர் கந்தசாமி கோயில்

இதுகுறித்து, திருப்போரூர் கந்தசாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேலிடம் விளக்கம் கேட்டோம். “ நேற்று காலை பத்து மணிக்குத்தான் நான் கோயிலுக்கு வந்தேன். அதற்கு முன்பே திருமணங்கள் முடிந்துவிட்டன. காவல்துறையினர் கோயிலில் இருந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தியதாகச் சொன்னார்கள். மக்களை காவல்துறையினர் கட்டுப்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளன. அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு