Published:Updated:

மதம்மாறிய மூதாட்டியின் சடலம்! அடக்கம் செய்ய முடியாமல் நாகையில் அலைக்கழிப்பு

சடலம்
சடலம்

மதம் மாறிய மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் அலைக்கழித்த அவலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

மதம் மாறிய முதாட்டியின் உடலை இந்துக்கள் இடுகாட்டில் புதைக்க, இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சடலத்தோடு அலைந்த அவலம் நாகையில் அரங்கேறியுள்ளது.

சடலம்
சடலம்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கத்தரிப்புலம் செண்பகராயநல்லூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரின் மனைவி ஜெகதாம்பாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துவ சபை ஒன்றில் சேர்ந்து மதம் மாறினார். வயது மூப்பின் காரணமாக நேற்று ஜெகதாம்பாள் காலமானார். இவரது உடலை எரியூட்ட விரும்பாத, அவரது உறவினர்கள் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்ய விரும்பினர். ஆனால், செண்பகராயநல்லூரில் கிறிஸ்துவ முறைப்படி உடலைப் புதைப்பதற்கான கிறிஸ்துவ இடுகாடு இல்லாததால் அங்கிருந்து சுமார் 40 கி.மீ தூரமுள்ள நாகையில் அடக்கம் செய்ய முடிவெடுத்தனர். இதுபற்றி நாகையில் உள்ள கிறிஸ்துவ சபைக்குத் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் ஜெகதாம்பாள் உடலை சவப்பெட்டியில் வைத்து நாகைக்கு எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.

அம்மா, பாட்டிக்குக் கொரோனா..?! -தந்தையின் சடலத்தை அடக்கம் செய்ய வழியின்றி தவிக்கும் சிறுவன்

அதனையடுத்து ஜெகதாம்பாள் உடலை அவரது உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து நாகையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடுகாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். நாகை நகராட்சி இடுகாட்டில் பொதுவாக இறந்த இந்துக்களின் உடல்கள் மட்டுமே எரிக்க மற்றும் புதைக்கப்படும் என்பது வழக்கம். அங்கு மதம் மாறிய கிறிஸ்துவரின் உடலை கிறிஸ்துவ முறைப்படி ஜெபம் செய்து புதைக்கப்பட உள்ளதாக தகவல் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பு மற்றும் பா.ஜ.க.வினருக்குத் தெரிய வந்ததால், அவர்கள் அங்கு வந்து ஜெகதாம்பாள் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சடலம்
சடலம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகப்பட்டினம் நகர காவல் நிலைய ஆய்வாளர், கிறிஸ்துவ சபை நிர்வாகிகள் மற்றும் ஜெகதாம்பாள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்தவர் உடலை கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டுமானால், கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய உறவினர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, ஜெகதாம்பாளின் உடல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கிறிஸ்துவ கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு