Published:Updated:

`முழு பணமும் கட்டுங்க..!’ - 80 வயது முதியவரை கட்டிலோடு கட்டிவைத்த ம.பி தனியார் மருத்துவமனை

முதியவர்
முதியவர்

``கட்டணங்களைக் கட்டும் வரை அவரை பணயக் கைதியாக மருத்துவமனை நிர்வாகம் வைத்திருந்ததாகவும் மூன்று முதல் நான்கு நாள்கள் அவருக்கு முறையாக உணவுகள் வழங்கப்படவில்லை.”

இந்தியாவில் கொரோனா தொடர்பான பரவலால் தனியார் மருத்துவமனைகள் பலவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன. இதனிடையே அதிக கட்டணம், படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகளை அனுப்புவது உள்ளிட்ட பல பிரச்னைகள் தொடர்பாகவும் தனியார் மருத்துவமனைகள் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் முதியவர் ஒருவரை சிகிச்சைக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் அவரது கை மற்றும் கால்களைக் கட்டி வைத்துள்ளதாக வெளியான தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாப்பூர் பகுதியில் அமைந்துள்ள ராணாயர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயதான பெயர் குறிப்பிடாத அந்த முதியவர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அவர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் அங்கிருந்து இந்தூர் அல்லது உஜ்ஜைன் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரின் குடும்பத்தினரிடம் அதிகமாகப் பணம் இல்லாத காரணத்தால் உள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையானது ஆரம்பத்தில் குடும்பத்தினரிடம் ரூபாய் 6,000 முன்பணமாகக் கட்ட கூறியுள்ளது. பின்னர், ரூபாய் 5,000 கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஆனால், முழு பணத்தையும் தங்களால் கட்ட முடியவில்லை என முதியவரின் மகள் கூறியுள்ளார். மேலும், அவரை டிஸ்சார்ஜ் செய்யும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் முழு பணத்தையும் கட்ட வலியுறுத்தியுள்ளனர். அவருடைய மகள் தங்களுடைய இயலாமையை வெளிப்படுத்தியபோது, மருத்துவமனை நிர்வாகம் முதியவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் இருந்த படுக்கை ஒன்றில் கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே தெரிய வந்த பிறகு, அந்த முதியவருக்கு மக்கள் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

‘8 மருத்துவமனை; 13 மணி நேரப் போராட்டம்!’ - ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்

கட்டணங்களைக் கட்டும் வரை அவரை பணயக்கைதியாக மருத்துவமனை நிர்வாகம் வைத்திருந்ததாகவும் மூன்று முதல் நான்கு நாள்கள் அவருக்கு முறையாக உணவுகள் வழங்கப்படவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், ``நாட்டின் மூத்த குடிமகனிடம், மருத்துவமனை நிர்வாகம் மிகவும் கொடூரமாக நடந்துள்ளது. இப்படிச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் கமல்நாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த முதியவர் கட்டப்பட்டிருக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். மேலும், ``கொரோனா தொடர்பான இந்த நெருக்கடியான சூழ்நிலையில் மருத்துவமனைகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறையும் கொள்ளையடிப்பதும் பல தனியார் மருத்துவமனைகளில் தொடர்கிறது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தனியார் மருத்துவமனையின் மீது சுமத்தப்படும் குற்றச்சாடுகளை அந்நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக அம்மருத்துவமனையில் பணிடாற்றி வரும் மருத்துவர் வருண் பஜாஜ், ``எலக்ட்ரோலைட் சமநிலையின்மை பிரச்னையால் அவர் பாதிப்படைந்துள்ளார். இதனால், அவர் தன்னைக் காயப்படுத்தும் நிலை ஏற்படும். அப்படி நிகழாமல் இருக்க அவரைக் கட்டி வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். விரைவில் இதுதொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அவர் வையுறுத்தியுள்ளார். முதியவர் படுக்கையில் கட்டி வைக்கப்பட்டிருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களின் வெளியானதால் பலரும் மருத்துவமனைக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

`இது, கொரோனா நோயாளி பயன்படுத்திய படுக்கை!' - பதறவைக்கும் புதுவை அரசு மருத்துவமனை; அதிர்ச்சி வீடியோ
அடுத்த கட்டுரைக்கு