Published:Updated:

கொரோனா: `கூட்டமாகக் குளியல்; மீன்பிடி சண்டை!’ - தஞ்சை தென்பெரம்பூர் அணை சர்ச்சை

தென்பெரம்பூர் அணை
தென்பெரம்பூர் அணை

``தற்போது, டெல்டா மாவட்டக் கிராமங்களிலும், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வெளியூர் மக்கள் அதிகளவில் இங்கு ஒன்றாகக் கூடுவது ஆபத்தானது.''

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இன்று தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களைப் போலவே தஞ்சை மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஆனால், தஞ்சாவூர் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்பெரம்பூர் அணையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், இப்பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக, இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

தென்பெரம்பூர் அணை
தென்பெரம்பூர் அணை

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். இதைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஜூலை 30-ம் தேதி வரை இந்த மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள தென்பெரம்பூர் அணையிலோ, வழக்கத்தைவிட இன்று மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. கல்லணையில் இருந்து வரக்கூடிய வெண்ணாறு, இங்கு வடவாறு, வெட்டாறு, வெண்னாறு என மூன்று ஆறுகளாகப் பிரிக்கின்றன. தண்ணீர் பாயும் நாள்களில் பொதுவாகவே இங்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வார்கள். விடுமுறை நாள்களில் மக்கள் கூட்டம் இன்னும் அதிகரித்து சுற்றுலாதளம் போலவே காட்சி அளிக்கும். இன்று முழு ஊரடங்கு. ஆனால், இங்கு அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்காமல், நூற்றுக்கணக்கானவர்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடியிருந்தனர். கூட்டமாகக் குளியல், ஒன்றாக அமர்ந்து உணவருந்துதல், மீன்பிடித்தல் எனக் களைகட்டியது. `உள்ளூர் மக்கள் மட்டுமே இங்கு மீன்பிடிக்கலாம்; வெளியூர் மக்களுக்கு அனுமதி கிடையாது’ என மோதலும் உருவானது.

தென்பெரம்பூர் அணை
தென்பெரம்பூர் அணை

இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ``தற்போது டெல்டா மாவட்டக் கிராமங்களிலும்கூட, கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வெளியூர் மக்கள் அதிகளவில், இங்கு ஒன்றாகக் கூடுவது ஆபத்தானது. இதைத் தடுக்க காவல்துறையினர் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இன்று முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டிருந்தும்கூட, காவல்துறையினர் இங்கு கண்காணிப்புக்கு வரவில்லை” என ஆதங்கத்தோடு தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு