Published:Updated:

`நிரம்பி வழியும் கடைகள், மார்க்கெட்டுகள்!’ - அலட்சியம் காட்டும் ராமநாதபுரம் மக்கள் #21daylockdown

ராமநாதபுரத்தில் அலைமோதும் மக்கள்.
ராமநாதபுரத்தில் அலைமோதும் மக்கள்.

இன்று காலை முதல் ராமநாதபுரம் சின்னக்கடை, அரண்மனை, கேணிக்கரை, பாரதிநகர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடைகள் திறந்து இருந்தன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, நேற்று இரவு முழுவதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மளிகை, காய்கறிக் கடைகள் மற்றும் உணவகங்கள், பால் விற்பனை மையங்கள் ஆகியவற்றில் திரண்ட மக்கள் அத்தியாவசியப் பொருள்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

ஊரடங்கு நாளில் ராமநாதபுரம் மீன் மார்க்கெட்
ஊரடங்கு நாளில் ராமநாதபுரம் மீன் மார்க்கெட்

இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு உள்ள நாள்களில் அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறிகள், மளிகை பொருள்கள், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என அரசு அறிவித்தது. இதனால் இன்று காலை முதல் ராமநாதபுரம் சின்னக்கடை, அரண்மனை, கேணிக்கரை, பாரதிநகர் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. கடைகள் திறக்கப்பட்டிருந்ததைக் கண்ட மக்கள், ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் அப்பகுதிகளில் கும்பலாகத் திரண்டனர்.

இதேபோல் இன்று காலை ராமேஸ்வரம் நகர் பகுதிகளில் சில டீக்கடைகள் திறக்கப்பட்டு, அவற்றின் முன் பலர் கூடி நின்றபடி டீ குடித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் அப்துல்ஜபார், டி.எஸ்.பி மகேஷ் ஆகியோர் தலைமையில் சென்ற வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் கூட்டம் கூடியிருந்த டீக்கடைகளை அடைக்கச் செய்ததுடன், தேவையின்றி டூ வீலரில் சுற்றித் திரிந்தவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

பாரதி நகர் பகுதியில் டூவீலர்கள்
பாரதி நகர் பகுதியில் டூவீலர்கள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் ராமநாதபுரத்தின் பெரும்பான்மையான காய்கறி, மீன் மார்க்கெட், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் முந்தியடித்துக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று பொருள்களை வாங்கி வருகின்றனர். இதனால் ஏப்ரல் 14 -ம் தேதி வரை மக்கள் வீட்டிலேயே இருங்கள் என்று பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள் அர்த்தமின்றிப் போனது.

இதேபோல் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுவை வாங்குவதற்காக ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி உள்ளிட்ட பகுதிகளில் மதுபானப் பிரியர்கள் டூவீலர்களில் சென்றவாறு உள்ளனர். இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த அரசுப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறையின், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து அரசு ஊழியர்களும் 24 மணி நேரம் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், கொரானோ வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் சூழலே ஏற்பட்டுள்ளது.

மீன், இறைச்சி வியாபாரம்.
மீன், இறைச்சி வியாபாரம்.

`இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொது வெளிகளில் அவசியமின்றி சுற்றித்திரிவோர் மீதும் கும்பலாகச் செல்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கவலை தெரிவிக்கிறார்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு