Published:Updated:

மருமகள் உயிருடன் இருக்கும் போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய உறவுகள்! பெரம்பலூர் சர்ச்சை

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார், ரோஷினி வசிக்கும் மேட்டுத் தெரு பகுதியில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பெரம்பலூரில் திருமணத்தின்போது பெண் வீட்டார் அணிவித்திருந்த நகைகளை மாப்பிள்ளை வீட்டார் விற்றுவிட்டதாக, இருவீட்டார் தரப்பிலும் பிரச்சனை இருந்திருக்கிறது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், மருமகள் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாகக் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருமகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிப்பு
மருமகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிப்பு

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தெருவில் வசிப்பவர் செல்வராஜ். இவரது மகள் ரோஷினி. இவருக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த காட்டுக்கொட்டகையைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவரின் மகன் வீரராகவனுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது ரோஷினிக்கு 50 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்குக் குழந்தை இல்லாததால், இருவீட்டார் தரப்பிலும் அடிக்கடிப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு கடந்த மார்ச்சில் வீரராகவன் தற்கொலை செய்து கொண்டார். ரோஷினி அடிக்கடி பிரச்னையில் ஈடுபட்டதாலேயே மகன் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறி ஆத்திரத்தில் வீரராகவன் குடும்பத்தினர் அவரைக் கடுமையாக திட்டியிருக்கிறார்கள். இதனால், ரோஷினி, தனது தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். `திருமணத்தின்போது 50 பவுன் நகை போட்டு அனுப்பிய நிலையில், 7 பவுன் நகைகளை மட்டுமே மாப்பிள்ளை வீட்டார் கொடுத்தனர்’ என்று ரோஷினி குடும்பத்தினர் புகார் கூறிவருகிறார்கள்.

பெரம்பலூர்  போலீஸார்
பெரம்பலூர் போலீஸார்

இதுதொடர்பாக இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார், ரோஷினி வசிக்கும் மேட்டுத் தெரு பகுதியில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ரோஷனியின் தந்தை பெரம்பலூர் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்து ரோஷினியிடம் உறவினர்களிடம் பேசினோம். ``எங்க உறவுக்கார பையனுக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தோம். அங்கு நடக்கும் ஒரு சில பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு, அதற்கு இவள்தான் காரணம் என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? திருமணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை இல்லாததைப் பெரும் குற்றமாகப் பேசியிருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, அவர்கள் வெளியில் கடன் வாங்கியிருப்பார்கள்போல. அந்தக் கடனையும் அடைக்க முடியாமல் தவித்து வந்திருக்கிறார்கள்.

பெரம்பலூர் காவல் நிலையம்
பெரம்பலூர் காவல் நிலையம்

இதுபோன்று பல பிரச்னைகளால் அந்த மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார். இதற்குக் காரணம் ரோஷினிதான் என்று கூறி, அந்தப் பெண்ணை கடுமையாகத் திட்டியிருக்கிறார்கள். அவளும், அங்கு வாழப் பிடிக்காமல் பிறந்த வீட்டுக்கே திரும்ப வந்துவிட்டார். அப்போது வெறும் ஏழு பவுன் நகை மட்டுமே எடுத்து வந்தார். இதில் தான் இருவீட்டாருக்கும் பிரச்னையே. இருதரப்பிலும் பிரச்னை முற்றிப்போய் மாப்பிள்ளை வீட்டார், பெண் இறந்துவிட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்திருக்கிறார்கள். இது தவறு இல்லையா?

பெரம்பலூர்
பெரம்பலூர்

வீட்டில் எவ்வளவு பிரச்னையாக இருந்தாலும் இதுபோன்ற காரியங்களைச் செய்வது சரியா? இதற்காகத்தான் அவர்கள் மீது வழக்கு கொடுத்திருக்கிறோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். புகாரின் அடிப்படையில், பெரம்பலூர் நகர போலீஸார் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு