Published:Updated:

`இளையராஜா கச்சேரிக்காகக் குளம் ஆக்கிரமிப்பா?' - மாவட்ட நிர்வாகத்துக்குச் சென்ற புகார் மனு

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

இளையராஜாவின் திருச்சி நிகழ்ச்சிக்காகக் குளத்தை ஆக்கிரமித்து வருவதாகவும், அதனால் நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்ததால் பரபரப்பு நிலவுகிறது.

Occupied pool
Occupied pool

வரும் 25-ம் தேதி இளையராஜாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பல்வேறு விளம்பரம் மற்றும் பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். மேடையில் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பாடகி உஷா உதூப், பாடகர் மனோ ஆகியோரும் ஹங்கேரி இசைக்குழுவும் கலந்துகொள்கிறார்கள்.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் சிட்டி எனும் நிறுவனத்தின் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. போலி ஆவணங்கள் மூலம் அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து இந்தக் கட்டடம் கட்டியதாக ஏற்கெனவே வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியின் பின்புறம் உள்ள ஏரி மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து இளையராஜா இசைக் கச்சேரி நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், இதுதொடர்பாகவும் பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்திட அனுமதி அளிக்கக் கூடாது எனப் பொன்மலைபட்டியைச் சேர்ந்த மைக்கேல் என்பவர், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

concert Place
concert Place

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மைக்கேல், ``திருச்சி கே.கே.நகர் மகாலெட்சுமி நகரில் உள்ள செப்கோ பிராஃபர்ட்டி எனும் நிறுவனம், மொராய்ஸ் சிட்டி எனும் பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்து உரிய அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறாமல் குடியிருப்புகளைக் கட்டி வருகிறது. இது தொடர்பாகத் திருவளர்ச்சிப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் புகார் கொடுத்தார். அதுகுறித்த விசாரணையில் மொராய்ஸ் சிட்டி நிர்வாகம் அதுதொடர்பான ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

Michael, who is petitioning the district administration
Michael, who is petitioning the district administration

தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணத்தில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் சர்வே நம்பர்களான 202, 203 உள்ளிட்ட நிலங்கள் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்கால் மற்றும் குளமாக உள்ளது. இந்தக் குளம் பாசன வாய்க்கால் உள்ளிட்டவை கீழக்குறிச்சி கிராமம் மட்டுமல்லாமல் கொட்டப்பட்டு மற்றும் குண்டூர் கிராமத்துக்கு உட்பட்டவை. இதனால் பல ஆயிரம் பாசன நிலங்கள் பயன்பெற்றுவந்தன.

இந்தக் குளம் மற்றும் பாசன வாய்க்காலைதான் சட்டவிரோதமாக `மொராய்ஸ் சிட்டி' உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இதற்குச் சம்பந்தமே இல்லாத திருச்சி மகாலட்சுமி நகரைச் சேர்ந்த ஜனனி பாலு என்பவர் மூலம் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொள்ளும், `என்றும் ராஜா எங்கும் ராஜா' என்கிற பெயரில் இசைக் கச்சேரி நடத்த பணம் வசூல் செய்து பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மொராய்ஸ் சிட்டியின் பின்புறம் உள்ள குளத்தை சில தினங்களில் ஆக்கிரமித்து, குளத்துக்குள் சாலை, மற்றும் காம்பவுன்ட் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.

teacher michael
teacher michael

இந்த இடம் தொடர்பாகத் தற்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இசைக் கச்சேரி நடத்துவது முற்றிலும் சட்டத்துக்கு விரோதமானது. இது, இவர்கள் எப்போதும் சட்டத்தை மதிக்காமல் எந்தச் செயலையும் சட்டவிரோதமாகச் செய்யத் துணிந்தவர்கள் என்பதையே காட்டுகிறது. அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, குளத்தை அழிக்கும் நோக்கில் நடத்தவிருக்கும் இசைக் கச்சேரியை தடை செய்ய வேண்டும்” என்றார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக இளையராஜா இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் ஜனனி பாலு என்பவரிடம் பேசினோம். ``நிலம் தொடர்பாக இடத்தின் சொந்தக்காரருக்கும் புகார் கொடுத்துள்ள மைக்கேல் என்பவருக்கும் பிரச்னை உள்ளது. நாங்கள் அந்த இடத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வாங்கி நடத்துகிறோம். இளையராஜா நிகழ்ச்சி என்பதால் இந்த விஷயத்தைப் பூதாகரமாக்க புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரில் உண்மை இல்லை என்பதை நிலத்தின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார். இது தொடர்பாக மொராய்ஸ் சிட்டியின் உரிமையாளர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன்னிலை விளக்கம் அளிப்பார்” என்றார்.

கச்சேரி விளம்பரம்
கச்சேரி விளம்பரம்

இசை நிகழ்ச்சிக்காக அரசுக்குச் சொந்தமான குளம் மற்றும் பாசன வாய்க்கால் அழிக்கப்பட்டதாகப் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம், குளம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க குழு அமைத்து உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்தும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுத்திட, தலைமைச் செயலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வரைவு திட்டம் உருவாக்கிட கடந்த 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் உத்தரவிட்டார்கள். ஆனால், அரசின் அலட்சியத்தால் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கிறது.