Published:Updated:

`தவறான டெஸ்ட் ரிசல்ட்; கொரோனா வார்டில் 3 நாள்கள் தங்கவைக்கப்பட்ட 35 பேர்!’ - நொய்டா அதிர்ச்சி

ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்
ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்

தனியார் ஆய்வகங்கள் அளித்த தவறான முடிவால் நொய்டாவைச் சேர்ந்த 35 பேர் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் தவறாக 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் சார்பில் சிறப்பு மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

swab test
swab test

தேசிய அளவில் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளை முதலில் அரசு ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இந்தநிலையில், கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கவே, தனியார் ஆய்வகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளலாம் என ஐசிஎம்ஆர் கடந்த மார்ச்சில் அனுமதி அளித்தது.

அதன்படி, தற்போதுவரை ஐசிஎம்ஆர் அனுமதியுடன் நாடு முழுவதும் 453 தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. முதலில் இந்தச் சோதனைக்கு அதிகபட்சமாக ரூ.4,500 மட்டுமே வசூலிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் கட்டணம் நிர்ணயித்திருந்தது. பின்னர், இந்தக் கட்டண நிர்ணயம் நீக்கப்பட்டு, இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அரசு இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?

இந்தநிலையில், டெல்லியை ஒட்டியுள்ள உ.பி மாநிலம் நொய்டாவில் செயல்பட்டு வரும் தனியார் ஆய்வகங்கள் அளித்த தவறான முடிவால் அப்பகுதியைச் சேர்ந்த 35 பேர் கொரோனா சிறப்பு வார்டில் 3 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் சாதாரணக் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்னைகளுக்காகத் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார்கள்.

அப்படி சிகிச்சைக்காகச் சென்றவர்களை கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவமனை நிர்வாகங்கள் அறிவுறுத்தியிருக்கின்றன. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ளவே, 35 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளன.

கொரோனா
கொரோனா

இதையடுத்து, நொய்டாவில் உள்ள மாநில அரசின் தனிமைப்படுத்தும் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையைத் தொடங்கியிருக்கிறார்கள். அங்கு, அவர்களின் சளி உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மாதிரிகளை சோதனை செய்து பார்த்ததில், அவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் உ.பி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்திருக்கிறது.

`பரிசோதனையில் நெகட்டிவ்; தனிமை வார்டு மனஉளைச்சல்!' -கேரள கொரோனா வார்டில் விபரீத முடிவெடுத்த 2 பேர்

ஆனால், அதற்குள் அந்த 35 பேரையும் மற்ற கொரோனா பாதித்தவர்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 3 நாள்கள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்குக் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்ததும், அவர்கள் அனைவரும் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேநேரம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் 3 நாள்கள் தங்கவைக்கப்பட்டிருந்ததால், அவர்கள் மேலும் 7 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

இதுதொடர்பாக வழக்குப் பதியப்பட்டு, விசாரணைக்கு உ.பி மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பிட்ட தனியார் ஆய்வகங்கள் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை உரிய வெப்பநிலையில் பராமரிக்காததே தவறான முடிவுகள் வரக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய நொய்டா சுகாதாரத் துறை அதிகாரி தீபக் ஓஹ்ரி, ``கொரோனா பரிசோதனையில் முறைகேடு நடைபெறுவதாக 6 தனியார் ஆய்வகங்கள் தொடர்பாக எங்கள் கவனத்துக்குப் புகார் வந்திருக்கிறது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டிருக்கிறது. கொரோனா பரிசோதனை தொடர்பான ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது’’ என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் உ.பி-யில் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு