Published:Updated:

புதுச்சேரி: `தண்ணீர் கிடையாது' கறார்காட்டிய டோமினோஸ் பீட்ஸா - அதிரடிகாட்டிய ஆளுநர் மாளிகை

புதுச்சேரி டோமினோஸ் பீட்ஸா நிறுவனம்
புதுச்சேரி டோமினோஸ் பீட்ஸா நிறுவனம்

வாடிக்கையாளருக்குக் குடிநீர் வழங்க மறுத்த டோமினோஸ் பீட்ஸா நிறுவனம், ஆளுநர் மாளிகையின் அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகு பணிந்திருக்கிறது.

உலகம் முழுவதும் 90 நாடுகளில் சுமார் 17,000 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது டோமினோஸ் பீட்ஸா நிறுவனம். புதுச்சேரியில் இதன் கிளை, மிஷன் வீதி மற்றும் ரங்கப்பிள்ளை வீதி ஆகிய இடங்களில் செயல்பட்டுவருகிறது. நேற்று அங்கு பீட்ஸா வாங்குவதற்காகச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், பீட்ஸாவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்திருக்கிறார். அப்போது அவருக்கு தாகம் எடுக்கவே அங்கிருந்த ஊழியர்களிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டதாகக் கூறப்படுகிறது.

டோமினோஸ் பீட்ஸா
டோமினோஸ் பீட்ஸா

அப்போது `தண்ணீர் இல்லை’ என்று தெரிவித்த அந்த ஊழியர்கள் `வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்திருக்கின்றனர். அத்துடன், `உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் உங்கள் ஆர்டரை கேன்சல் செய்துகொள்ளுங்கள்’ என்றும் கூறியிருக்கிறார்கள். அதில் அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், உடனே ஆளுநர் மாளிகையின் புகார் பிரிவைத் தொடர்புகொண்டு புகாரளித்திருக்கிறார்.

`ரூ.7.70 லட்சம் தண்ணீர் தொட்டி சர்ச்சை...!’ - திருப்பூர் விவகாரத்தின் பின்னணி

உடனே, ஆளுநர் மாளிகை அளித்த தகவலின்படி அடுத்த சில நிமிடங்களில் டோமினோஸ் பீட்ஸா நிறுவனத்துக்குச் சென்ற பெரியகடை காவல்துறையினர், `உணவகத்தில் தண்ணீர் வைக்காது ஏன்?’ என்று கேட்டு ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதையடுத்து நாளையிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வைப்பதாக உறுதியளித்திருக்கின்றனர் அதன் ஊழியர்கள்.

ஆளுநர் மாளிகை அதிரடிக்குப் பிறகு வைக்கப்பட்ட குடிநீர்
ஆளுநர் மாளிகை அதிரடிக்குப் பிறகு வைக்கப்பட்ட குடிநீர்

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சி ஒன்றில் டோமினோஸ் பீட்ஸா நிறுவனத்தின் மாவட்ட துணை மேலாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவர் பேசுகிறார். `உணவகச் சட்டங்களின்படி உணவகத்தில் தண்ணீர் வைக்க வேண்டுமா இல்லையா?’ என்று அந்த வாடிக்கையாளர் கேள்வியெழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் அந்த ஊழியர்,`தண்ணீர் இல்லை என்று சொன்னேன். வேண்டுமென்றால், பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். வீடியோ எடுக்காதீர்கள். அதற்கு நான் சொல்யூஷன் தருகிறேன்” என்கிறார்.

பெரியக்கடை காவல்நிலையத்தின் ஆய்வாளர் செந்திலிடம் பேசினோம்.``அந்த பீட்ஸா கடையில் குடிநீர் வழங்கவில்லை என்று வாடிக்கையாளர் ஒருவர் நேற்று ஆளுநர் மாளிகைக்கு புகார் அனுப்பினார். அதனடிப்படையில் அந்தக் கடைக்குச் சென்று விசாரணை நடத்தினோம். வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் வைக்காதது உறுதி செய்யப்பட்டது. உடனே, அங்கிருந்த ஊழியர்களிடமும், அந்தக் கடையின் சென்னைத் தலைமை அலுவலகத்தையும் தொடர்புகொண்டு வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அவர்களும் உடனே வைத்துவிட்டார்கள்” என்றார்.

Vikatan

அந்த டோமினோஸ் பீட்ஸா நிலையத்தின் மேனேஜர் வினய் என்பவரிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது, ``கொரோனாவுக்காகத்தான் வாடிக்கையாளர்களுக்கு வைக்கப்படும் தண்ணீர் சேவையை நிறுத்தியிருந்தோம். அப்படியிருந்தாலும் வாடிக்கையாளர்கள் தண்ணீர் கேட்டால் தர வேண்டும். நேற்று பணியில் இருந்த ஊழியர் தவறாக நடந்துகொண்டார். அதனடிப்படையில் நேற்றே அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு