Published:Updated:

`திடீரென அதிகரித்த கதிர்வீச்சு; பதறிய ஐரோப்பிய நாடுகள்!’ - ரஷ்யா மீது குற்றச்சாட்டு

ரஷ்யா - அணு உலை
ரஷ்யா - அணு உலை ( மாதிரிப்படம் )

``இந்தக் கதிர்வீச்சு அதிகரிப்பிற்கான காரணத்துக்கு இதுவரை எந்தநாடுகளும் பொறுப்பேற்கவில்லை. தற்போதைய அளவைவிட அதிகரித்தால் நிச்சயமாக அதிக பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்”

ஐரோப்பிய நாடுகளின் வளிமண்டலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக அளவு அணுக் கதிர்வீச்சு இருப்பதாக அந்த நாடுகள் தகவல்களை வெளியிட்டன. இந்தக் கதிர்வீச்சின் அளவு மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் ஆனால் வழக்கமாக இருக்கும் அளவைவிட அதிகளவில் இருப்பதாகவும் இதனை சோதனையிட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளே இந்தக் கதிர்வீச்சு அளவு திடீரென அதிகரிக்கக் காரணம் என்று ஐரோப்பிய நாடுகள் பல குற்றச்சாட்டுகளை எழுப்பின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது. இதனால், நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கதிர்வீச்சு பாதுகாப்பு ஆணையம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``சீசியம்-134, சீசியம்-137, கோபால்ட்-60 மற்றும் ருத்தேனியம்-103 ஆகிய கதிரியக்கப் பொருள்கள் குறைந்த அளவில் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளன. இந்தப் பொருள்கள் மிகவும் குறைவான அளவில் இருப்பதால் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது” எனப் பதிவிட்டுள்ளது. இதேபோல, நார்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் கூறியுள்ளன. அணுசக்தி சோதனை தடை தொடர்பான அமைப்பின் நிர்வாகச் செயலாளர் லேசினா ஜெர்போ, இந்தக் கதிரியக்கம் அதிகரித்துள்ள பகுதியின் வரைபடத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். வரைபடத்தின்படி பின்லாந்து, ஸ்வீடன், நார்வே அல்லது ரஷ்யா இந்த ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டதற்காக காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. லேசினா பதிவிட்டுள்ள மற்றொரு ட்வீட்டில், ``இந்த ஐசோடோப்புகள் பெரும்பாலும் அணுசக்தி நிலையங்களிலிருந்து வெளிவரைக் கூடியவைதான். அணு ஆயுதங்கள் தொடர்பானவை அல்ல” என்றும் குறிப்பிட்டார்.

`அணு ஆயுதங்களை மேம்படுத்தும் வட கொரியா?’ - மீண்டும் பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்

இதனையடுத்து டச்சு தேசிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம், ``ரஷ்யாவின் மேற்குப் பகுதிகளில் உள்ள அணு உலைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளே இந்தக் கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம். கதிர்வீச்சுகள் மேற்கு ரஷ்யப் பகுதிகளில் இருந்துதான் பயணிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்த நேரத்தில் எந்தவொரு நாட்டையும் சுட்டிக்காட்ட முடியாது” எனக் கூறியுள்ளது. அணு உலைகளில் எரிபொருள்கள் சேதமடைந்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என்றும் சில செய்தி நிறுவனங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

பல நாடுகளும் ரஷ்யாவைக் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தாலும் ரஷ்ய அணுசக்தி நிலையங்களை இயக்கும் ரோசனெர்கோடோம் அமைப்பானது இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், ``மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அணுமின் நிலையங்களில் எந்தப் பிரச்னையும் இதுவரை ஏற்படவில்லை. கதிர்வீச்சின் தன்மையையும் தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

அணு உலை மாதிரிப்படம்
அணு உலை மாதிரிப்படம்

இந்தக் கதிர்வீச்சு அதிகரிப்பிற்கான காரணத்துக்கு இதுவரை எந்தநாடுகளும் பொறுப்பேற்கவில்லை. தற்போதைய அளவைவிட அதிகரித்தால் நிச்சயமாக அதிக பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். இதேபோல ஒரு சம்பவம் 2017-ம் ஆண்டும் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போதும் இதற்கு ரஷ்யாதான் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரஷ்யாவும் இதனை மறுத்தது. 2019-ம் ஆண்டு வெளியான ஆய்வில் ரஷ்யாவில் அணு உலைகள் சந்தேகத்திற்கு உரிய வகையிலேயே இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் ரஷ்யாவின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திடீரென நடந்த இந்த மாற்றத்தால் பல நாடுகளும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதற்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அடிக்கடி சுவரேறிக் குதிக்கும் நபர்... அச்சத்தில் மக்கள்... இது கூடங்குளம் அணு உலை சர்ச்சை!
அடுத்த கட்டுரைக்கு