Published:Updated:

மதுக்கடையை திறந்தால் தீக்குளிப்போம்! -முன்னாள் அமைச்சரை பதறவைத்த பெண்கள்

பெண்களை சமாதானம் செய்த மணிகண்டன்
பெண்களை சமாதானம் செய்த மணிகண்டன் ( உ.பாண்டி )

அரசாங்கம் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும். அப்படி மூட முடியலைன்னா, நீங்க கொடுக்குற அரிசி உள்ளிட்ட எந்தப் பொருளும் எங்களுக்கு வேண்டாம்.

'மதுக்கடைகளைத் திறந்தால் தீக்குளிப்போம்' எனக் கூறி, நிவாரண உதவி வழங்க வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் பெண்கள் ஆவேசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து அரசிடம் எடுத்துக் கூறுவதாகக் கூறி அவர்களை சமாதானம் செய்தார் மணிகண்டன்.

மூதாட்டிக்கு நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
மூதாட்டிக்கு நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
உ.பாண்டி

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு, தொகுதி எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன், நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ராமேஸ்வரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வழங்கப்படும் இலவச உணவுக்கான கட்டணமாக ரூ. 70 ஆயிரத்திற்கான காசோலையை நகராட்சி ஆணையர் ராமரிடம் வழங்கினார். மேலும், சம்பை கிராமத்தில் ஏழ்மை நிலையிலும் குறைந்த விலைக்கு இட்லி விற்றுவரும் மூதாட்டி புஷ்பவள்ளிக்கும் நிதியுதவி வழங்கினார்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்
மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்
உ.பாண்டி

இந்நிலையில், நகராட்சி அலுவலகத்திற்கு எம்.எல்.ஏ மணிகண்டன் வந்திருப்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், நகராட்சி அலுவலகத்தினுள் சென்றனர். அங்கு, மணிகண்டனை முற்றுகையிட்ட பெண்கள், ''ஊர் முழுக்க கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்குறதுக்கு எங்களை வேலைக்குக்கூட போகவிடாம வீட்டுக்குள்ளேயே அடஞ்சுகிடக்கனும்னு அரசாங்கம் சொல்லுது. ஆனா, இப்ப அரசாங்கமே மதுக்கடைகளை திறக்கப் போறோம்னு அறிவிச்சிருக்கு. அப்படி மதுக்கடைகளைத் திறந்தா, எங்க ஊரு ஆம்பளைங்க எல்லாரும் பிராந்தி கடை வாசலில்தான் போய் நிற்பாங்க.

அவங்க மூலமா கொரோனா தொற்று ஏற்பட்டு எங்க குடும்பத்தை பாதிச்சா, நாங்க எப்படி உயிரோடு இருக்க முடியும். எனவே, அரசாங்கம் மதுக்கடைகளை திறக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும். அப்படி மூட முடியலைன்னா நீங்க கொடுக்குற அரிசி உள்ளிட்ட எந்தப் பொருளும் எங்களுக்கு வேண்டாம். எங்க நிலையை உணர்ந்து ராமேஸ்வரம் தீவுப் பகுதியான பாம்பனில் உள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவேண்டும். அப்படி செய்யாவிடில் மதுக்கடைகள் முன் தீக்குளிப்போம்'' என ஆவேசப்பட்டனர்.

நிவாரண உதவி வழங்கும் மணிகண்டன்.
நிவாரண உதவி வழங்கும் மணிகண்டன்.
உ.பாண்டி

இதையடுத்து, அவங்க கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை அமைதியாக இருங்கள் எனவும் கூறி, அப்பெண்களை சமாதானம்செய்து அனுப்பினார் மணிகண்டன். மதுக்கடை திறப்பிற்கு எதிராக பெண்கள் ஆவேசத்துடன் முற்றுகையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

அடுத்த கட்டுரைக்கு