அத்திவரதர் வைபவம் நிறைவடைந்து, ஒரு மாதத்துக்குமேல் ஆகிவிட்டது. ஆனாலும், அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. ‘அத்திவரதர் வைபவம் குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் கேட்டால், அதிகாரிகள் அலறுகிறார்கள்’ என்று காஞ்சிபுரம் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
கடந்த 21.8.19 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘அத்திவரதர் தரிசனம் கண்டவர் ஒரு கோடி... கரப்ஷனோ ஆயிரம் கோடி!’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர் களுக்கு தகவல் அளிக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் குளத்தில் வைக்கப்பட்டுள்ள அத்திவரதர் சிலை, 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு, 48 நாள்களுக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அத்திவரதர் வைபவம், ஆகஸ்ட் 17-ம் தேதியுடன் நிறைவடைந்தது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வைபவம் என்பதால், அத்திரவரதரைக் காண ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் கூடினர். இதை சற்றும் எதிர்பார்த்திராத காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், போதிய அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் திணறியது. எரியும் வீட்டில் பிடுங்குகிற வரை லாபம் என, ஏற்கெனவே திணறிக்கொண்டிருந்த பக்தர்களிடம், ஆட்டோ ஓட்டுநர்கள் தொடங்கி கோயில் அர்ச்சகர்கள் வரையில் பலரும் அடாவடியாகக் கொள்ளை யடித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதைத் தடுத்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், கைகட்டி வேடிக்கை பார்த்தது.அதோடு, வி.ஐ.பி பாஸ் என்ற பெயரில் சில ஜவுளி நிறுவனங்கள், மாவட்ட அதிகாரிகள், காவல்துறை, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், அர்ச்சகர்கள் எனப் பல தரப்புகளும் கூட்டணி போட்டு வசூலில் சக்கைப்போடு போட்டன.
அத்திவரதர் வைபவம் நிறைவுற்று ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், அதுகுறித்த தகவல்களை வழங்குமாறு ஆர்.டி.ஐ மூலம் சமூக ஆர்வலர்கள் சிலர் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் கேள்விகள் எழுப்பியுள்ளனர். இந்தத் தகவல்களைத்தான் மாவட்ட நிர்வாகம் தர மறுத்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் காசிமாயன் கூறுகையில், ‘‘அத்திவரதரை தரிசிக்க வருகைதந்த பொதுமக்களின் எண்ணிக்கை எவ்வளவு, இந்த வைபவத்துக்காக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு, அந்த நிதியை செலவு செய்ததற்கான வரவு செலவு ரசீதுகள், எவ்வளவு தங்கம், வெள்ளி நகைகள் வந்தன போன்ற விவரங்களை வழங்குமாறு ஆர்.டி.ஐ-யில் கோரியிருந்தேன். குறிப்பாக, ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரையிலான 47 நாள்களில் விநியோகிக்கப்பட்ட வி.வி.ஐ.பி., வி.ஐ.பி., உபயதாரர், பத்திரிகையாளர் பாஸ் எண்ணிக்கை யையும், அவற்றை விற்றதில் கிடைத்த வருமானத்தையும் வழங்குமாறு கேட்டிருந்தேன். இந்த பாஸ்கள் விநியோகித்த முறை, அதற்காக அமைத்த குழுவில் இடம் பெற்றவர்களின் பட்டியல், வி.ஐ.பி-கள் வருகை, தரிசனம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் போன்றவையும் கேட்டு மனு செய்திருந்தேன்.
இந்தத் தகவல்களைக் கொடுத்தால் நிச்சயம் மாட்டிக்கொள்வோம் என்ற கலக்கத்தில், `சட்டப் பிரிவு 2(F)-ன்படி ஆர்.டி.ஐ தகவல் அளிக்க முடியாது’ என, காஞ்சிபுரம் மாவட்ட பொதுத் தகவல் அலுவலர் பதில் அனுப்பியுள்ளார். அந்த உத்தரவில் பொதுத் தகவல் அலுவலர் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. பொதுவாக, ஆர்.டி.ஐ-யில் கோரப்படும் தகவலை மறுக்கும்போது, சட்டப் பிரிவு 8 மற்றும் 9-ன் அடிப்படை யிலேயே மறுக்க வேண்டும் என்று சட்டப் பிரிவு 7(1) குறிப்பிடுகிறது. 2(F) சட்டப் பிரிவு என்பது, தகவலை மறுக்கக்கூடிய பிரிவே அல்ல. கோரப்படும் தகவல்கள் எந்த வடிவில் இருந்தாலும், அதை அப்படியே வழங்க வகைசெய்யும் சட்டப் பிரிவுதான் அது. நான் கோரும் தகவலை மறுப்பதற்காக, அவசரகதியில் ஏதோ ஒரு சட்டப் பிரிவைப் போட்டு பதில் அனுப்பியுள்ளனர்.

ஆர்.டி.ஐ-யில் கோரும் தகவல்களை ஒவ்வொரு கேள்வியாகத்தான் மறுக்க வேண்டும். எனக்கு அனுப்பிய பதிலில், மொத்தம் 28 கேள்விகளுக்கும் ஒரே பதிலாக, ‘இந்தத் தகவல்களை வழங்க முடியாது’ என மறுத்துள்ளனர். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளேன். மிகச் சாதாரண கேள்விகளுக்கே தகவல் அளிக்க முடியாது என மாவட்ட நிர்வாகம் மறுத்திருப்பதிலிருந்தே, இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நிகழ்ந்திருப்பது புலனாகிறது. விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்” என்றார்.
பட்டு வஸ்திரங்கள் எங்கே?
அத்திவரதர் வைபவத்தின்போது புதிதாக வாங்கப்பட்ட பட்டு அங்க வஸ்திரங்கள் 48 நாள்களும் சாமிக்குச் சாத்தப்பட்டன. கோயில் தரப்பிலிருந்து சாத்தப்படும் பட்டு வஸ்திரங்களின் விலை 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்கின்றனர். அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்களும் ஆயிரக் கணக்கில் பட்டு அங்க வஸ்திரங்களைக் காணிக்கையாக வழங்கினர். இப்போது, அந்தப் பட்டு அங்க வஸ்திரங்கள் காணாமல் போய் விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லி பாபு என்பவர், அத்திவரதருக்கு காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பட்டு அங்கவஸ்திரங்கள் எவ்வளவு, ரசீதுகள் எங்கே, அந்த வஸ்திரங்கள் யாரின்வசம் உள்ளன போன்ற விவரங்களை, தனக்கு அளிக்குமாறு ஆர்.டி.ஐ மூலம் கேட்டிருந்தார். அதற்கு வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையர் தியாகராஜன், கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால், தியாகராஜன்மீது விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் டில்லி பாபு புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து டில்லி பாபுவிடம் பேசியபோது, ‘‘காணிக்கையாக வழங்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும் முறையாக ரசீது போடப்பட்டிருக்க வேண்டும். அங்கவஸ்திரங்களை ஏலம்விட்டு கிடைக்கும் பணத்தை, கோயில்கணக்கில் வரவுவைக்க வேண்டும். சாமிக்குச் சாத்தப்பட்ட பட்டு வஸ்திரங்கள் என்பதால், மக்கள் ஆர்வத்துடன் ஏலம் எடுப்பார்கள். ஆனால், இவர்கள் ரசீதே போடாமல் பட்டு வஸ்திரங்களைப் பெற்றுள்ளனர். ரசீதுகளைக் காட்டும்படி கேட்டால், ‘முடியாது’ என்று பதில் வருகிறது. நிச்சயமாக இதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருக்கிறது. காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார் ஆதங்கத்துடன்.

இணை ஆணையர் தியாகராஜனிடம் விளக்கம் கேட்டதற்கு, ‘‘மொத்தம் 788 பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வந்தன. நெரிசலில் ரசீது போட முடியவில்லை. மற்றபடி, தனியாக ரெஜிஸ்டரில் பதிவுசெய்துள்ளோம். காணிக்கையாக வந்த பட்டு வஸ்திரங்களில் ஒன்றுகூட காணாமல் போகவில்லை’’ என்றார்.
இதுகுறித்து கருத்தறிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னய்யாவைத் தொடர்பு கொண்டோம். ‘மழை முன்னெச்சரிக்கை குறித்தான ஆய்வுக்கூட்டங்களில் பிஸியாக இருப்பதால், அவர் பேச இயலாது’ என்று பதில் வந்தது. தொடர்ந்து அவரது அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரியான collrkpm@nic.in முகவரிக்கும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக் கிறோம். பதில் அனுப்பும்பட்சத்தில் பிரசுரிக்கிறோம்.
எத்தனை நாள்களுக்குத்தான் தகவலைத் தராமல் மறைத்து வைப்பார்கள் எனப் பார்ப்போம்.
‘ஷேர்’ ஆட்டோ! ஆர்.டி.ஓ கொள்ளை!
அத்திவரதரை தரிசிக்க, தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து வரதராஜப் பெருமாள் கோயில் வரை செல்வதற்கு ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. இதற்கான கட்டணமாக, நபர் ஒருவருக்கு 400 ரூபாய் வரையில் கொள்ளை வசூல் நடந்ததை நாம் அப்போதே எழுதியிருந்தோம். இந்த விவரத்தை லேட்டாகத் தெரிந்துகொண்ட காஞ்சிபுரம் மாவட்டப் போக்குவரத்து அதிகாரிகள் சிலர், ‘எங்களுக்கும் ஒரு ஷேர் கொடுங்க. இல்லைன்னா கேஸ்தான்’ என ஆட்டோ ஓட்டுநர்களிடம் ‘லம்ப் அமவுன்ட்’ அடித்துவிட்டார்களாம். இதை மோப்பம்பிடித்த உள்ளூர் காவல்துறையும், தங்கள் பங்குக்கு ஆட்டோவுக்கு 2,000 ரூபாய் என டீல் பேசி வசூலித்துவிட்டதாம். இதை வெளியே சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் முழிக்கிறார்கள் காஞ்சிபுரம் ஆட்டோக்காரர்கள் பலர்.