Published:Updated:

3 வருஷம்கூட தாக்குப்பிடிக்கல... பாம்பன் மீனவர்களை கலங்கவைக்கும் மணல் அணை!

சேதமான மணல் அணை
சேதமான மணல் அணை

விளிம்பு நிலை மக்கள் எதையும் கேட்க மாட்டார்கள் என நினைத்த அதிகாரிகளின் எண்ணத்துக்கு மாறாக சின்னப்பாலம் மக்கள் மணல் அணை கட்டியதில் நடந்த ஊழல்களுக்கு எதிராகப் போராடினர். ஊடகங்களும் கடல்நீர் உட்புகுவதைத் தடுக்க மணலால் தடுப்பணை கட்டப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டின.

கடல் சீற்றத்திலிருந்து மீனவ கிராமத்தைப் பாதுகாப்பதற்காக பாம்பன் கடற்கரையோரம் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் 3 ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே முறிந்து விழுந்து சேதமானது. இதனால் சுமார் 40 லட்ச ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.

மீனவர்கள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட மணல் அணை
மீனவர்கள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட மணல் அணை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையோர கிராமம் சின்னப்பாலம். நாட்டுப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதையும், கடலில் இறங்கி பாசி சேகரிப்பதையும் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவரும் மீனவர்கள் நிறைந்த பகுதி. காற்றடி மற்றும் மழைக் காலங்களில் கடல்நீர் பெருக்கெடுத்து கரையோரம் உள்ள மீனவக் குடிசைகளுக்குள் குடிகொண்டுவிடும். இதனால் இக்காலங்களில் மீனவர்கள் தங்கள் குழந்தைகளுடன் உண்ண உறங்க இடமின்றி தவிப்பது வாடிக்கையாக இருந்துவந்தது.

இந்தத் தவிப்பைத் தவிர்க்க கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்க ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ நிதியிலிருந்து ரூ.43.40 லட்சம் அப்போதைய அமைச்சர் மணிகண்டனால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆக்ரோஷத்துடன் பொங்கிவரும் கடல்நீரைத் தடுக்கும் வகையில் ஜல்லிக்கல், சிமென்ட், ஆற்றுமணல் ஆகியவற்றால் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கத் திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட கட்டுமானப் பொருள்களுக்குப் பதிலாகக் கடற்கரை மணல், சவுட்டு மணல், குறைவான சிமென்ட் ஆகியவற்றைக்கொண்டு மணல் தடுப்பு' அமைக்கப்பட்டது.

இந்த மணல் அணையை அப்போதைய அமைச்சர் மணிகண்டன் கடந்த 2017 ஜூன் மாதத்தில் திறந்து வைத்தார். இந்தத் தடுப்புச் சுவர் பணிகள் முடிந்து திறந்து வைக்கப்பட்ட ஒரு மாதம்கூட முடியாத நிலையில், கடற்கரை உப்புக் காற்றினாலும், முறையான கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தாததாலும் தடுப்புச் சுவர் ஆங்காங்கே கரைந்து போயின.

கட்டுமானத்தின்போது கரைந்து போன சுவர் (பழைய படம்)
கட்டுமானத்தின்போது கரைந்து போன சுவர் (பழைய படம்)

ஒதுக்குப்புறமாக வாழும் விளிம்பு நிலை மக்கள் எதையும் கேட்க மாட்டார்கள் என நினைத்த அதிகாரிகளின் எண்ணத்துக்கு மாறாக மக்கள் மணல் அணை கட்டியதில் நடந்த ஊழல்களுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். ஊடகங்களும் கடல்நீர் உட்புகுவதைத் தடுக்க மணலால் தடுப்பணை கட்டப்பட்ட காட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டின.

இதையடுத்து, உயர் அதிகாரிகள் இந்த மணல் அணை சுவரைப் பார்வையிட்டு அதிர்ந்துபோயினர். உடனடியாக அந்த மண் சுவரைக் கட்டிய ஒப்பந்தக்காரர் மீதும் அவருக்குத் துணைபோன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் தரமான முறையில் மீண்டும் தடுப்புச் சுவர் அமைக்க உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, மொத்தமுள்ள 590 மீட்டர் நீள மண் சுவரில் இடதுபுறம் 50 மீட்டர் நீளத்துக்கும் வலதுபுறத்தில் 250 மீட்டர் நீளத்துக்கும் தரமற்ற பகுதியாகக் கணக்கிட்டு அந்தப் பகுதியை மட்டும் புதிதாகத் தடுப்புச் சுவர் எழுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அமைச்சரின் பெயர் பொறித்த கல்வெட்டையும் தரமாகக் கட்டி முடித்தனர்.

அதே வேளையில், ஏற்கெனவே கட்டப்பட்ட முழு நீள மணல் சுவரையும் இடித்துவிட்டு தரமான சுவரை முழுதாகக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால், மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளோ, திட்டத்துக்கான நிதியை பரிந்துரை செய்த முன்னாள் அமைச்சரான மணிகண்டனோ கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

கரையாமல் நிற்கும் கல்வெட்டு
கரையாமல் நிற்கும் கல்வெட்டு

இந்த நிலையில், புதுப்பித்துக் கட்டப்பட்ட 300 மீட்டர் தடுப்புச் சுவரைத் தவிர இடையில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கட்டப்பட்ட மணல் தடுப்புச் சுவரானது கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு முறிந்து விழுந்து சேதமாகியுள்ளது. நீண்ட காலம் தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதற்காக பல லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட தடுப்புச் சுவர் முழுதாக 3 ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்காமல் கடற்கரையோரம் முறிந்து கிடக்கும் நிலையில், திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட சுமார் 40 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு