`எதிரி நாட்டில்கூட இப்படி நடக்காது!’- முள்ளிவாய்க்கால் நினைவிடத் தகர்ப்பைக் கண்டிக்கும் தலைவர்கள்

2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட நிகழ்வு இலங்கைத் தமிழர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 2009-ல் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலையை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.

தற்போது ஒரே இரவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவுச்சின்னம் தகர்க்கப்பட்டதால், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். பல்கலைக்கழக வளாகத்துக்கு எதிரே போராட்டமும் நடத்தினர். இலங்கை அரசின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
பழ.நெடுமாறன் - தமிழர் தேசிய முன்னணித் தலைவர்
``யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் நிறுவப்பட்டிருந்த நினைவுச்சின்னத்தை சிங்கள ராணுவம் அகற்றியிருக்கிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை சம்பந்தமான எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்பதில் சிங்கள அரசு தீவிரமாக இருக்கிறது. 2009-ம் ஆண்டு நடந்த இனப்படுகொலையின் நினைவாக அவ்விடத்தில் ஏராளமான உடல்கள் மற்றும் ராணுவம் விட்டுச்சென்ற ஆயுதங்கள் கிடந்தன. அவற்றை உலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் சென்று பார்த்து, அச்செய்தியை உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்தனர். இதன் காரணமாக அவ்விடத்திலிருந்த அனைத்துத் தடயங்களையும் அழித்துவிட்டனர். அழித்ததோடு மட்டுமல்லாமல், அந்த இடத்தை சுற்றிலும் வேலி அமைத்து அந்த இடத்தைப் பார்ப்பதற்குத் தடை போட்டுவிட்டார்கள். தொடர்ந்து அவர்கள் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் குறித்து மனித உரிமை கமிஷன் மற்றும் உலக நாடுகளும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஜெர்மனி நாட்டில் இரண்டாம் உலகப்போரின்போது போரிட்ட அமெரிக்கா மற்றும் சோவியத் வீரர்களின் நினைவுச்சின்னம் இன்றும் இருக்கிறது. ஆனால், இலங்கையில், நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழக நினைவுச்சின்னத்தை அகற்றியது மட்டுமல்ல, அதற்கு முன்பும் விடுதலைப்புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர்களின் நினைவுச்ச்சின்னங்களை முழுவதுமாகத் தகர்த்துவிட்டார்கள். இனப் படுகொலை தொடர்பான எந்த அடையாளமும் இருக்கக் கூடாது என்பதில் இலங்கை அரசு தீவிரமாக இருக்கிறது. அதற்குண்டான செயல்களை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.
எந்த நாட்டிலும் இறந்தவர்களின் கல்லறைகளையும் அல்லது நினைவுச்சின்னங்களையும் அழிப்பது கிடையாது. முதல் உலகப் போரில் இறந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் கல்லறைகள் சென்னையில் இருக்கின்றன. இன்றும் இங்கிலாந்திலிருந்து வந்து மக்கள் மரியாதை செலுத்திவிட்டுச் செல்கிறார்கள். மேலும், 1857-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது இறந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் கல்லறைகள் இன்னும் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன. சுதந்திரம் பெற்ற பிறகும்கூட நாம் அதை அழிக்கவில்லை. உலகம் முழுவதும் இந்த மரபு பின்பற்றப்படுகிறது. ஆனால், இலங்கையில் மட்டும் இறந்தவர்களையும் அவமதிக்கக்கூடிய போக்கு தொடர்கிறது. இதை உலக நாடுகள் முன்வந்து இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டும்.”
தீபச்செல்வன் - ஈழக் கவிஞர்
``நேற்று நடந்த நிகழ்வான, பல்கலைக்கழகத்தில் நினைவிடத்தை அகற்றியது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை நினைவுத் தூண்கள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தூய்மை இல்லங்களை அழித்தனர். இந்த முறை இந்த அரசு பதவி ஏற்ற பிறகு நினைவுகளையே அழிப்பதற்கான செயலில் தீவிரம் காட்டிவருகிறது. நினைவுகளை அழிப்பதற்கான இந்தச் செயல் இன ஒடுக்குமுறை, இன அழிப்பின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது. தமிழ் மக்களைத் தொடர்ந்து பழி தீர்ப்பதும், அவர்களை மனரீதியாக புண்படுத்துவதும் இம்முறையும் தொடர்ந்திருக்கிறது. அரசியல்ரீதியாகத் தீர்வு காணும்போதுதான் நினைவுச்சின்னங்களை அமைப்பதற்கான ஒரு முடிவு பிறக்கும். இப்போது இலங்கையில் இருக்கும் சூழல், அரசியல் பற்றிப் பேசாத... அரசியல் தெரியாதவர்களையும்கூட இந்தச் சம்பவம் அரசியலைப் பற்றிச் சிந்திக்கவைத்திருக்கிறது.

இங்குள்ள தமிழர்களின் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்துத் தகர்த்தது ஒரு கள்ளத்தனமான மேலும், சட்ட விரோதமான செயலாகும். அரசியல்ரீதியாக போர் வீரர்களை நினைவுகூருவதே இதற்கான தீர்வாகும்.”
சிவாஜிலிங்கம் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உறுப்பினர்
``யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவு. அந்தப் போரை நடத்தி படுகொலை செய்த ஆட்சியாளர்கள், தாங்கள் எந்தவிதக் குற்றத்தையும் செய்யவில்லை என்று சொல்லிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், கடந்த அரசாங்கம் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாகச் சொன்னபோது இந்தச் சம்பவத்தை அரங்கேற்றி அரசு பின்வாங்கியிருக்கிறது. ராணுவத்தால் தமிழர்களை இனப் படுகொலை செய்ததோடு, அவர்களைப் புதைத்த இடங்களையும் இயந்திரங்களின் மூலம் சேதப்படுத்தி, அந்த இடத்திலேயே ராணுவ முகாம்களை அமைத்திருக்கிறார்கள். ஓர் எதிரி நாட்டில்கூட போருக்காகச் செல்லும்போது அங்கே இருக்கும் கல்லறைகளை யாரும் சேதப்படுத்துவது இல்லை.

அப்படியிருக்க இலங்கையில் மட்டும் இந்தச் சம்பவம் தொடர்ந்துவருகிறது. காட்டுமிராண்டித்தனமான இந்த ஆட்சியாளர்களின் வெறிச்செயல் இன்னும் தொடரத்தான் செய்யும் இவ்வாறு தொடர்ந்தால் நாங்கள் எப்படி அந்த ஆட்சியாளர்களுக்கு கீழ் வாழ்வை நகர்த்துவது? இந்த ஆட்சியாளர்கள் `தேசிய நல்லிணக்கம், எதிர்காலத்தில் சமத்துவம்’ என்று வாயால் பேசிக்கொண்டே இனரீதியாகவும் மதரீதியாகவும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்ததற்குத் தீர்வாக உடனடியாக அதை கட்டிக் கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்குத் தீர்வுகாணும் வகையில் வருகின்ற 11-ம் தேதி இங்குள்ள தமிழ்க் கட்சிகளும், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து காலை 6 முதல் மாலை 6 மணி வரை முழுநேரக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம். மேலும், மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் சுழற்சி முறையில் நடைபெறும். இங்கு சட்டம் ஒழுங்கு என்பது கிடையாது. இங்குள்ள ஆட்சியாளர்கள் சட்டத்தை மீறி இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். இதற்கான தீர்வு என்றால் தமிழ் மக்களும், தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து போராடுவதுதான்.”