Published:Updated:

நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அத்திவரதர் சிலையை சேதப்படுத்துமா? - நிபுணர் சொல்வது என்ன?

ஜெ.நிவேதா

பொற்றாமரைக் குளத்திலுள்ள நீர் அசுத்தமாக இருக்கக்கூடும். அதனால், அந்த நீரை அனந்த சரஸ் குளத்தில் நிரப்ப வேண்டாம்.

Athivaradar
Athivaradar

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் இருந்த அத்திவரதர், ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சயனக் கோலத்திலும் ஆகஸ்ட் 1 முதல் 17-ம் தேதி வரை நின்ற கோலத்திலும் தரிசனம் அளித்தார். மொத்தம் 48 நாள்கள் தரிசனம் தந்த அத்திவரதர், ஆகஸ்ட் 17-ம் தேதி, மீண்டும் அனந்த சரஸ் குளத்துக்குள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

Athivaradar
Athivaradar

அத்திவரதர் வைபவத்தின்போது, 48 நாள்களும் காஞ்சிபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் காஞ்சிபுரம் வந்த பக்தர்கள், அத்திவரதரை தரிசித்துச் சென்றனர். குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், தமிழக முதல்வர், துணை முதல்வர், தெலங்கானா முதல்வர் என அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்களும் அத்திவரதரை தரிசனம்செய்ய காஞ்சிபுரம் வருகை தந்தனர்.

'அத்திவரதர் தரிசனம் தந்த 48 நாள்களில், ஒரு கோடியே ஏழாயிரத்து ஐநூறு பேர் தரிசனம் செய்ததாக'ப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாள்களில், 'தினசரி சுமார் 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக' மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொற்றாமரைக் குளத்திலுள்ள நீர் அசுத்தமாக இருக்கக்கூடும். அதனால், அந்த நீரை அனந்த சரஸ் குளத்தில் நிரப்ப வேண்டாம்.
வழக்கு

அத்திவரதர் எழுந்தருளிய காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில், அனந்த சரஸ், பொற்றாமரை என இரண்டு குளங்கள் இருக்கின்றன. இவற்றில், அனந்த சரஸ் குளத்தில்தான் அத்திவரதர் 40 ஆண்டுகளாக சயனக் கோலத்தில் இருந்தார். அவரை வெளியே எடுக்கும்பொருட்டு 24 அடி ஆழம்கொண்ட அனந்த சரஸ் குளத்திலிருந்த நீர் முழுவதும் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் ஜூன் 30-ம் தேதி இறைக்கப்பட்டது.

'அத்திவரதரை மீண்டும் குளத்தினுள் வைக்கும்போது, அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்திலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு, குளம் நிறைக்கப்படும்' என அறநிலையத் துறை தெரிவித்தது. இந்நிலையில், 'பொற்றாமரைக் குளத்திலுள்ள நீர் அசுத்தமாக இருக்கக்கூடும். அதனால், அந்த நீரை அனந்த சரஸ் குளத்தில் நிரப்ப வேண்டாம்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோகன் என்பவர் சில வாரங்களுக்கு முன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

Athivaradar
Athivaradar

வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் பொற்றாமரைக் குளம் மற்றும் அனந்த சரஸ் குளத்தின் நீரை தரப் பரிசோதனை செய்து, அதன் முடிவை ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார். தரப் பரிசோதனை தாமதமானதால், வழக்கு ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வழக்கு, மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

மாசுக் கட்டுப்பாடு வாரியம் சமர்ப்பித்திருந்த தரப் பரிசோதனையின் முடிவில், பொற்றாமரைக் குளத்தில் இ-கோலி பாக்டீரியா வகையைச் சேர்ந்த ஃபீசல் கோலி ஃபார்ம் (Fecal coli form) என்ற பாக்டீரியா 700 என்ற அளவில் (100 மி.லி தண்ணீரில்) இருப்பது தெரியவந்துள்ளது. இதே நீரில், மற்ற இ-கோலி வகை பாக்டீரியாக்கள் சுமார் 2,400 இருப்பதும் அந்தப் பரிசோதனையின் முடிவில் தெரியவந்தது. அனந்த சரஸ் குளத்திலும், அங்குள்ள மண்டபத்திலும்கூட இதேபோல இ-கோலி வகை பாக்டீரியாக்கள் அளவுக்கதிகமாக இருக்கின்றதென குறிப்பிட்டுள்ளது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

தேங்கி நிற்கும் நீர்நிலை என்பதால், அதிகாரிகளும் பொதுமக்களும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
நுண்ணுயிரியல்துறை நிபுணர் தேவசேனா

இதுகுறித்து நுண்ணுயிரியல்துறை நிபுணர் தேவசேனா நம்மிடம் பேசும்போது, "சுத்தமான நீரைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் தண்ணீரில் 250 என இ-கோலி அளவு இருக்க வேண்டும். குடிநீர் என்றால், ஒரு லிட்டர் நீருக்கு 100 இ-கோலி என்ற அளவு இருக்க வேண்டும். ஆனால், இங்கு வெறும் 100 மி.லி தண்ணீரிலேயே 2,400 இ-கோலிகள் இருப்பது கவனிக்கப்படவேண்டிய, ஆபத்தான விஷயம். 100 மி.லி அளவு நீரில் இ-கோலி வகைகள் இருக்கவே கூடாது. பூஜ்ஜியம் என்ற அளவுதான் இருக்க வேண்டும். ஆகவே, இந்த நீரைக்கொண்டு வேறொரு குளத்தை நிரப்புவது, சிக்கலைத் தரக்கூடும்.

கோயில் குளம் என்பதால், ஒரு சிலர் தீர்த்தம் என நினைத்து இந்த நீரைத் தவறுதலாகப் பருகவும் நேரலாம். அப்படியானவர்களுக்கு, ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். ஓடிக்கொண்டிருக்கும் நீர் என்றால் காற்றின் போக்கிலேயே பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். ஆனால் இங்கு சூழல் அப்படியும் இல்லை. தேங்கி நிற்கும் நீர்நிலை என்பதால், அதிகாரிகளும் பொதுமக்களும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இந்த பாக்டீரியாக்கள், சிலையின் தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது. அதனால், சிலை பாதிக்கப்படும் என்று பயம் கொள்ளத் தேவையில்லை" என்று கூறினார்.

Varadharaja perumal temple
Varadharaja perumal temple
அத்திவரதர் வைபவத்தில் ரூ.1,000 கோடி 'வேட்டை'... சுருட்டல் நடந்தது எப்படி?

'அத்திவரதரை சயன அறைக்குள் வைத்த நாளிலிருந்து, மழை பெய்துகொண்டே இருப்பதால், இப்போது அனந்த சரஸ் குளத்தில் இருப்பது சுத்தமான மழைநீர்தான். பொற்றாமரைக் குளத்து நீரை இந்தக் குளத்தில் நிறைக்கவில்லை' என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. பின்வரும் நாள்களில், மழை பெய்யும் அளவைப் பார்த்துவிட்டு, குளம் முழுமையாக நிரம்பாவிட்டால் போர்வெல் உதவியுடன் நிலத்தடி நீரின்மூலம் குளத்தை நிரப்பலாம் எனவும் அறநிலையத்துறை கூறியுள்ளது.

இந்த யோசனையின் பேரில், போர்வெல்மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீரும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதன் முடிவில், 'பாக்டீரியா மற்றும் இ-கோலி வகைகள் எதுவும் அந்த நீரில் இல்லை' என்பது தெரியவந்துள்ளது. இந்த முடிவையும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் நேற்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.

இந்த பாக்டீரியாக்கள், சிலையின் தன்மையை எந்த வகையிலும் பாதிக்காது.
நுண்ணுயிரியல்துறை நிபுணர் தேவசேனா

'அடுத்த 40 வருடங்களுக்கு, அதே இடத்தில்தான் அத்திவரதரின் சிலை இருக்கும் என்பதால், சயன அறையையும் குளத்தையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சயன அறையைப் பொற்றாமரைக் குளத்தின் நீரால் இப்போதைக்கு நிரப்பிவிட வேண்டாம்' என அறிவுறுத்தியுள்ளார், நீதிபதி ஆதிகேசவலு.