Published:Updated:

தொழில்நுட்பக் கோளாறு: முடங்கிய ரயில் போக்குவரத்து!- திடீர் மின்தடையால் ஸ்தம்பித்த மும்பை

மும்பை
மும்பை ( ANI )

மின்தடை ஏற்பட்டு சில மணி நேரத்திற்குப் பின்னர் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள நவி மும்பையின் கார்கர், தெற்கு மும்பையில் சர்ச் கேட் மற்றும் தானேவில் மும்ப்ரா உள்ளிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டது.

மும்பையில் மின்விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மாநகரம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால், ரயில் சேவைகள் தொடங்கி பல்வேறு சேவைகள் ஸ்தம்பித்தன. பிரச்னை சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து பல மணி நேரத்துக்குப் பின்னர் தற்போது மத்திய மற்றும் மேற்கு ரயில்வேயில் ரயில் சேவைகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பிற இடங்களில் விநியோகத்தை மீண்டும் தொடங்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளான ஜூகு, அந்தேரி, மிரா ரோடு, நவி மும்பை, பான்வெல், தானே உள்ளிட்ட இடங்களில் கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின்விநியோக தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார விநியோகம் தடைபட்டது. மின் தடை ஏற்பட்டதால் பல ரயில்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சில பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களும் வேலை செய்யவில்லை.

மின்சாரம் செயலிழந்த சில மணி நேரங்களிலேயே #Powercut, #Mumbai மற்றும் #poweroutage போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகத் தொடங்கின. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

மும்பை ரயில்நிலையம்
மும்பை ரயில்நிலையம்
ANI

இந்நிலையில், மருத்துவமனை ஐ.சி.யு வார்டுகளில் மின்சாரம் செயலிழப்பதைத் தவிர்ப்பதற்கு குறைந்தபட்சம் எட்டு மணிநேரத்திற்கு டீசல் போதுமான அளவு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மும்பை மாநகராட்சி, மருத்துவமனைகளைக் கேட்டுக்கொண்டது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக 022-22694727, 022-22704403 என்று ஹெல்ப்லைன் எண்களை மும்பை மாநகராட்சி அறிவித்தது.

இதையடுத்து, மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை பயன்படுத்தியதால் இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை என மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் செயலிழப்புக்கு மத்தியில் மும்பை விமான நிலையம் மற்றும் பங்குச் சந்தை ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன.

"மின்விநியோகத் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் தடைப்பட்டதாகவும், மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மும்பை மாநகராட்சி தெரிவித்தது. ``கல்வா-பட்கே மின்நிலையத்தின் சர்க்யூட் 2-வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக, தானே - மும்பை இடையிலான பகுதிகள் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. பிரச்னையை சரிசெய்ய ஊழியர்கள் முயன்று வருகிறார்கள். ஒரு மணி நேரம் அல்லது 45 நிமிடங்களில் மின்சார விநியோகம் சரியாக்கப்படும்’’ என்று மகாராஷ்டிரா மாநில மின்துறை அமைச்சர் நிதின் ராவத் தெரிவித்தார்.

மின் தடை ஏற்பட்டு சில மணி நேரத்திற்கும் மேலாக மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள நவி மும்பையில் கார்கர், தெற்கு மும்பையில் சர்ச் கேட் மற்றும் தானேவில் மும்ப்ரா உள்ளிட்ட சில பகுதிகளில் மின் விநியோகம் படிப்படியாக வழங்க்கப்பட்டது. மத்திய மற்றும் மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரயில் சேவைகளும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தன.

மும்பை
மும்பை

திடீர் மின் தடையால் புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். அவர் கூறுகையில், ``மும்பை நகரில் மின்தடை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிதின் ராவத்திடம் கேட்டு அறிந்தேன். மின்தடையை விரைவில் சீர்செய்வதற்கான வழிமுறைகளை வழங்கியுள்ளேன்" என்றார்.

இன்று தொடங்கிய மகாராஷ்டிராமாநிலத்தின் பொது நுழைவுத் தேர்வு (CET) ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி நடைபெற்றது. இருப்பினும், பெரும்பாலான கல்லூரிகளின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் பாதிக்கப்பட்டன. இதனால், பல கல்லூரிகளில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகளும் மின் தடையால் பாதிக்கப்பட்டன.

அடுத்த கட்டுரைக்கு