Published:Updated:

வரிசைகட்டும் சர்ச்சைகளில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ்!

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸ்

டிரெய்லரில் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு காட்சிகளின் அடிப்படையில் சில யூகங்களும் கருத்துகளும் சொல்லப்படுகின்றன.

வரிசைகட்டும் சர்ச்சைகளில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ்!

டிரெய்லரில் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு காட்சிகளின் அடிப்படையில் சில யூகங்களும் கருத்துகளும் சொல்லப்படுகின்றன.

Published:Updated:
‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸ்
பிரீமியம் ஸ்டோரி
‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸ்

டிரெய்லர் வெளியானபோதே மிகப்பெரிய அளவில் சர்ச்சையான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸ், ஜூன் 4-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி, மீண்டும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருக்கிறது. ஒன்பது எபிசோடுகளைக்கொண்ட இந்த வெப் சீரீஸ் காட்சியனுபவத்தைப் பொறுத்தவரை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ‘இந்த வெப் சீரீஸை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்’ என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.

வரிசைகட்டும் சர்ச்சைகளில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ்!

இந்திய உளவுப்பிரிவின் அதிகாரியாக பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயும், அவரின் மனைவியாக பிரியாமணியும் நடித்து, 2019-ம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி ஹிட்டடித்த வெப் சீரீஸ் `தி ஃபேமிலி மேன்.’ தீவிரவாதிகளோடும், உளவுப் பிரிவில் ஏற்படும் சிக்கல்களோடும் கதையின் நாயகன் போராடும் அதேநேரத்தில், வீட்டில் நடக்கும் குடும்பப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவதே பிரதான கதை. இந்த வெப் சீரீஸின் இரண்டாவது பாகத்துக்கான டிரெய்லர், கடந்த மே 19-ம் தேதி வெளியானபோதே, அது ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும்விதத்தில் இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் களஞ்சியம் உள்ளிட்டோர் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த வெப் சீரிஸைத் தடைசெய்ய வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, தமிழகத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதினார்.

இந்தத் தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே, ‘‘டிரெய்லரில் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு காட்சிகளின் அடிப்படையில் சில யூகங்களும் கருத்துகளும் சொல்லப்படுகின்றன. தொடர் வெளியாகி நீங்கள் பார்க்கும்போது, கதையையும், கதாபாத்திரங்களின் சித்திரிப்பையும், நடுநிலையான கருத்துகளையும் நிச்சயம் பாராட்டுவீர்கள்’’ என்று விளக்கம் அளித்திருந்தார்கள். ஆனால், ‘‘அவர்கள் வாக்குறுதி கொடுத்தபடி சீரீஸ் இல்லை. கண்டிப்பாகத் தடைசெய்தே ஆக வேண்டும்’’ என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

வரிசைகட்டும் சர்ச்சைகளில் ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ்!

‘‘ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து ஏராளமான தவறான சித்திரிப்புகள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கின்றன. ஈழத்தின் இறுதிப்போர் போன்ற ஒரு காட்சியிலிருந்துதான் இந்தத் தொடர் தொடங்குகிறது. போரை வழிநடத்தக்கூடிய போராளிக் குழுக்களின் தலைவர்கள் லண்டனுக்குத் தப்பிச்செல்வதுபோலக் காட்சியமைக்கப் பட்டிருக்கிறது. ‘விடுதலைப் புலிகள்’ அமைப்பின் தலைவர் பிரபாகரன்போலச் சித்திரிக்கப்படும் கதாபாத்திரத்துக்கு பாஸ்கரன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரின் தம்பி, தமிழ்நாட்டுக்கு வரும்போது ஐ.எஸ்.ஐ அமைப்பு நிகழ்த்தும் ஒரு குண்டுவெடிப்பில் கொல்லப்படுகிறார். பின்னர் அதே ஐ.எஸ்.ஐ அமைப்பு, பாஸ்கரனுடன் இணைந்து இந்தியாவைப் பழிவாங்க முயல்வதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. தொடர் முடியும்வரை ஐ.எஸ்.ஐ அமைப்பால் பாஸ்கரன் இயக்கப்படுவதாகவே காட்சிகள் இருக்கின்றன. இந்தியப் பிரதமர் மற்றும் இலங்கை அதிபருக்கு இடையில் சென்னையில் நடக்கும் பேச்சுவார்த்தையின்போது, வான்வழியாகத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகக் கதை நகர்கிறது. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராளிகளை, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப் பார்க்கிறார்கள். கற்பனைப் பெயர்களுடன் அவர்கள் எடுத்தால், யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. ஆனால், `தமிழீழம்’ என்ற வார்த்தை தொடரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போராளிக் குழுக்களில் இருப்பவர்கள் ஈழத்தமிழ்தான் பேசுகிறார்கள். உலகம் முழுக்க பரவி வாழும் ஈழத்தமிழர்களைத் தீவிரவாதிகளைப்போலச் சித்திரிப்பது ரொம்பவே ஆபத்தான போக்கு. அதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது’’ என்றார் ஈழ ஆதரவாளர் ராஜவேல் நாகராஜன்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு இது குறித்துப் பேசும்போது, ‘‘ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகச் சிங்கள அரசு நிகழ்த்தியிருக்கிற பல்வேறு கொடுமைகள், போர்க் குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்கள் உலக அரங்கத்தில் இருக்கின்றன. இது தொடர்பாக ஐ.நா-வில் மூன்று அறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில், அரசும் ராணுவமும் செய்த கொடுமைகள் குறித்து விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு, இந்திய அரசு செய்த உதவிகள் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஐ.நா மனித உரிமை உயர் ஆணையர் மீஷெல் பேச்சலெட் (Michelle Bachelet) கொடுத்த அறிக்கையில், ‘இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்’ என உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இதுதான் உலகத்தின் முன்னிருக்கும் உண்மைகள். ஆனால், மக்களுக்காகப் போராடியவர்களை பயங்கரவாதி களாகவும், இரக்கமில்லாத கொலைகாரர்களாகவும் காட்டிவிட்டு, கொலை செய்த அரச பயங்கரவாதிகளை நல்லவர்களாகக் காட்டுவதே இது போன்ற தொடர்களுக்குப் பின்னாலுள்ள உண்மையான நோக்கம். விடுதலைப்புலிகள் மீது மட்டுமல்ல... எந்தப் போராளி இயக்கங்கள்மீதும் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், உண்மைக்குப் புறம்பாக, தவறாகச் சித்திரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்றார்.

ராஜவேல் நாகராஜன், தியாகு , ஆதவன் தீட்சண்யா
ராஜவேல் நாகராஜன், தியாகு , ஆதவன் தீட்சண்யா

த.மு.எ.க.ச பொதுச்செயலாளரும், எழுத்தாளருமான ஆதவன் தீட்சண்யாவிடம் இது குறித்துக் கேட்டபோது, “மக்கள் ஆதரவோடு முப்பது ஆண்டுகள் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாதுதான். அதற்கான நம் விமர்சனங்களை முன்வைக்கலாமேயன்றி, ஒட்டுமொத்தமாகத் தொடருக்குத் தடைகோருவது தவறான முன்னுதாரணமாகிவிடும். இப்படியான சூழலை எதிர்பார்த்து, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கத்தான் பா.ஜ.க அரசு காத்திருக்கிறது. எனவே, நாம் தொடருக்குத் தடை கோருவதைத் தவிர்த்து, மக்களிடம் இந்தத் தொடரைப் புறக்கணியுங்கள் என்று கோரிக்கை வைக்கலாம்” என்றார்.

‘முதல் தொடரில் இஸ்லாமியர்கள், இப்போது தமிழர்கள், அடுத்ததாக வடகிழக்கு மாநில மக்களா?’ என்ற விமர்சனத்துடன் கேள்வியை முன்வைக்கிறார்கள் அரசியல் சினிமா விமர்சகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism