Published:Updated:

Guna: கண்மூடித்தனமான தாக்குதல்; அழிக்கப்பட்ட பயிர்கள்! - அதிர்ச்சி கொடுத்த ம.பி போலீஸ்

ம.பி தாக்குதல்
ம.பி தாக்குதல் ( Twitter )

ம.பியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த விவசாயி மீது போலீஸார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம் ஜகன்பூர் சக் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் அஹிர்வார், இவர் தன் வீட்டுக்கு அருகிலிருந்த காலி அரசு நிலத்தில் நீண்டகாலமாக விவசாயம் செய்து வந்துள்ளார். அந்த 8 ஏக்கர் நிலத்தில் கல்லூரி வரவிருப்பதாகவும் விவசாயி அதை உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். விவசாய நிலத்தில் பயிர்கள் விளைந்துள்ளதால் அவை அறுவடை செய்யும் வரை சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும் என ராஜ்குமார் கேட்டுள்ளார்.

ம.பி தாக்குதல்
ம.பி தாக்குதல்
Twitter

ஆனால், அதை ஏற்காத குணா மாவட்ட காவல்துறையினர் ராஜ்குமாரின் விவசாய பயிர்களை அழித்துள்ளனர். இதைக் கண்டு பெரும் துயர் அடைந்த ராஜ்குமார், தன் பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தைக் குடித்துள்ளார், அதைப் பார்த்ததும் அவர் மனைவியும் அதே பூச்சி மருந்தைக் குடித்து இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதற்குள் அவர்கள் இருவரையும் தடுத்த போலீஸார், நிலத்தை விட்டு வெளியேறும்படி ராஜ்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

குஜராத்:`பிரதமரே வந்தாலும் தடுப்பேன்!’ -அமைச்சர் மகனின் காரை நிறுத்திய பெண் காவலர் ராஜினாமா?

போலீஸாரிடமிருந்து கணவரைக் காப்பாற்ற அவரை கட்டியணைத்துக் கொண்டுள்ளார் ராஜ்குமாரின் மனைவி. அப்போதும் விடாத காவலர்கள் இருவரையும் பிரித்துள்ளனர். அந்த நேரத்தில் ராஜ்குமாரின் மனைவி மயக்கமடைந்து விழுந்துள்ளார். ராஜ்குமார் தாக்கப்படும் வீடியோவும் மயக்கமடைந்த நிலையில் இருக்கும் கணவன் மனைவி இருவரையும் அவர்களின் குழந்தைகள் கட்டியணைத்து அழும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது. நேற்று நடந்த இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து குணா மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ம.பி தாக்குதல்
ம.பி தாக்குதல்
Twitter

தற்போது ராஜ்குமாரும் அவரின் மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் வைரலான வீடியோவுடன், `இந்த அநீதி நம் சிந்தனைக்கு எதிரானது’ எனப் பதிவிட்டுள்ளார். மேலும் மத்தியப் பிரதேசத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த கமல்நாத், சிவராஜ் சிங் சௌகான் நடத்துவது ‘காட்டுமிராண்டி அரசு’ என்று விமர்சித்துள்ளார்.

“என் மாநிலத்தில் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும். மேலும் குணா மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்” என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

விவசாயி ராஜ்குமார், அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் கண்மூடித்தனமாகத் தாக்கியதால் ம.பி போலீஸார் மீது கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு