Published:Updated:

`உள்ளூர் வாகனங்களுக்கும் டோல் கட்டணம்; இதுக்கு ஒரு தீர்வே கிடையாதா?’ கொதிக்கும் திருமங்கலம் மக்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுங்கச்சாவடியில் வாக்குவாதம்
சுங்கச்சாவடியில் வாக்குவாதம்

மதுரை மாவட்டம், திருமங்கலம் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில், வாகன ஓட்டிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையே பிரச்னைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

சுங்கச்சாவடி நிர்வாகியிடம் விளக்கம் கேட்கும் உள்ளூர் தம்பதி
சுங்கச்சாவடி நிர்வாகியிடம் விளக்கம் கேட்கும் உள்ளூர் தம்பதி

தற்போது கட்டாய ஃபாஸ்டேக் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஃபாஸ்டேக் எடுக்காதவர்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்படுகிறது. இதனால் பல சுங்கச்சாவடிகளில் பிரச்னை ஏற்படுகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடிக்கும் திருமங்கலம் வட்டார மக்களுக்கும் பல ஆண்டுகளாகப் பிரச்னை தொடர்ந்துவருகிறது.

காரணம், திருமங்கலம் நகராட்சியின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியால் திருமங்கலம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 13 கி.மீட்டர் துரத்திலிருக்கும் மதுரை மாநகராட்சி எல்லைக்குள் சென்று வருவதற்கு ஒவ்வொரு முறையும் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்துவதால், திருமங்கலம் மக்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

உள்ளூர் மக்களிடம் கட்டணம் கேட்கக் கூடாது என்று பலமுறை அதிகாரிகள் வலியுறுத்தியும், அதை சுங்கச்சாவடி நிர்வாகம் அலட்சியப்படுத்துகிறது.

நியாயம் கேட்கும் பெண்
நியாயம் கேட்கும் பெண்

அது மட்டுமல்லாமல் திருமங்கலம் வழியாக கொல்லம் செல்லும் சாலையிலுள்ள டி.கல்லுபட்டி, கிருஷ்ணன் கோயில், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, குற்றாலம் செல்கிறவர்களும், அந்தப் பகுதியில் நான்கு வழிச்சாலை இல்லாத நிலையிலும் கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை எதிர்த்தும் இப்பகுதி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தினார்கள். வழக்கு போட்டார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏறடுத்தாமல், திருமங்கலம் வட்டார வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வாய்மொழியாக மட்டும் உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், அவ்வப்போது உள்ளூர் வாகனங்களிடம் கட்டணம் கேட்டு தகராறில் ஈடுபடுவதை சுங்கச்சாவடி ஊழியர்கள் வழக்கமாகவைத்திருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்தினர் மக்களின் பாதிப்பைக் கண்டுகொள்ளாமல் சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து, திருமங்கலம் பகுதி வாகனங்களிடம் மீண்டும் கட்டணம் கேட்க, உள்ளூர் மக்களுக்கும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த சுங்கச்சாவடியை கடக்க முயன்ற, உள்ளூர் வாகனம் ஒன்றை ஊழியர்கள் நிறுத்த முற்பட, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சுங்கச்சாவடி ஊழியர்களும் அவர்களை மிரட்டும் பாணியிலேயே பேச, அங்கே ஒரே களேபரமானது. அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மட்டுமல்லாமல் நிர்வாக மேலாளர்களும் கடுமையாகவே பேசினார்கள்.

கட்டணம் செலுத்த மறுக்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்
கட்டணம் செலுத்த மறுக்கும் உள்ளூர் வாகன உரிமையாளர்

அந்தநேரம், அவ்வழியே சென்ற நாம், நடக்கும் சம்பவத்தைப் பதிவு செய்துகொண்டிருந்ததால், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் வேகத்தைக் குறைத்து, கொஞ்சம் இறங்கி வந்து விளக்கம் அளித்தனர்.

நம்மிடம் பேசிய திருமங்கலத்தை சேர்ந்த தம்பதியர், ``நாங்கள் திருமங்கலத்தில் வசிக்கிறோம். நாங்கள் வைத்திருக்கும் கார் வெளியூர் பதிவு எண் கொண்டது என்பதால் டோல் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாதா? நாங்கள் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அடையாள அட்டைகளைக் காட்டியும் தகராறு செய்கிறார்கள். நீண்டகாலமாக உள்ளூர் மக்களிடம் டோல் கேட்டு தகராறு செய்யும் கொடுமை தொடர்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் ஒரு முடிவுகட்ட வேண்டும். `டோல் கட்டணம் சிறு தொகைதானே... கட்டிவிட்டுச் செல்ல வேண்டியதுதானே?’ என்று ஊழியர்கள் எகத்தாளமாகச் சொல்கிறார்கள். நியாயமற்ற கட்டணக் கொள்ளையை எப்படிக் கொடுக்க முடியும்?

திருமங்கலம் நகராட்சியின் நுழைவுப் பகுதியிலுள்ள இந்த டோல்கேட்டை முதலில் இடம் மாற்ற வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்" என்றார்.

கப்பலூர் சுங்கச்சாவடி மேலாளர் என்று கூறிக்கொண்டவர் நம்மிடம், ``உள்ளூர் வாகனம் என்பதற்கான ஆர்.சி-யைக் காட்டினால் விடத்தான் செய்கிறோம். ஆனால், இந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வேறு மாவட்ட ஆர்.சி-யைக் காட்டினால் அனுமதிக்க முடியாது. இங்கு வேலை செய்யும் நாங்களும் உள்ளூர்தான். யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யட்டும். எங்களுக்குக் கவலை இல்லை. இது எம்.என்.சி கம்பெனியால் நடத்தப்படும் நிறுவனம். இங்கு எல்லாமே சரியாகத்தான் இருக்கின்றன. தேவையில்லாமல் பிரச்னை செய்கிறார்கள்" என்று விளக்கம் அளித்தார்.

போலீஸ் போர்டு வைத்த வாகனத்துக்கு கட்டணச் சலுகை.
போலீஸ் போர்டு வைத்த வாகனத்துக்கு கட்டணச் சலுகை.

இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருந்தபோது, போலீஸ் என்று பெயர்ப் பலகை வைத்த வாகனத்தை கட்டணம் வாங்காமல் ஊழியர்கள் அனுப்ப, ``இதை எப்படி அனுமதிக்கிறீர்கள், லோக்கல் அட்ஜெஸ்மென்ட்டுக்காக இப்படி அனுமதிக்கும் நீங்கள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்கலாமே" என்று சுங்கச்சாவடி நிர்வாகிகளிடம் பாதிக்கப்பட்ட திருமங்கலம் மக்கள் கேட்க, சரியாக பதிலளிக்காமல் சமாளித்தனர்.

அம்பானி நிறுவனங்கள் புறக்கணிப்பு; டோல்கேட் கட்டணம் கிடையாது - உக்கிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

``அவர்கள் நினைத்தால் காவல்துறை என்று ஸ்டிக்கர் ஒட்டிய வாகனம், ஆளும்கட்சிக் கொடி கட்டிய வாகனம், அரசு அதிகாரிகளின் வாகனங்களை விதிகளை மீறி, கட்டணம் இல்லாமல் அனுப்புகிறார்கள். அதேநேரம் கட்டணம் வாங்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்ட உள்ளூர் மக்களின் வாகனங்களில் கட்டணம் கேட்டு அராஜகம் செய்கிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். மதுரைக்கு வேலைக்குச் செல்லும், தொழில் செய்யும் திருமங்கலம் மக்கள் வாகனங்களை வாங்கி வைத்துக்கொண்டு நிம்மதி இல்லாமல் தவிக்கின்றனர்" என்கின்றனர் திருமங்கலம் மக்கள்.

சுங்கச்சாவடி நிர்வாகியிடம் விளக்கம் கேட்கும் உள்ளூர் தம்பதி
சுங்கச்சாவடி நிர்வாகியிடம் விளக்கம் கேட்கும் உள்ளூர் தம்பதி

திருமங்கலம் சுங்கச்சாவடி பிரச்னையால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்னை சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. இதற்கு ஒரு முடிவுதான் என்ன?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு