Published:Updated:

திருநீறு... சிலுவை... குல்லா!

வேணுகோபால் சர்மா
பிரீமியம் ஸ்டோரி
வேணுகோபால் சர்மா

திருவள்ளுவர் சர்ச்சையும் ஓவிய வரலாறும்!

திருநீறு... சிலுவை... குல்லா!

திருவள்ளுவர் சர்ச்சையும் ஓவிய வரலாறும்!

Published:Updated:
வேணுகோபால் சர்மா
பிரீமியம் ஸ்டோரி
வேணுகோபால் சர்மா

தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம்... குடிசைகளையும் எரிக்கலாம் என்பது, இன்றைய சமூக வலைதளங்களுக்கு நிச்சயம் பொருந்தும்.

திருவள்ளுவரின் உருவப்படம்தான் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள லேட்டஸ்ட் சர்ச்சை. தமிழ்நாடு பா.ஜ.க-வின் ட்விட்டர் பக்கத்தில், ‘கற்றதனால் ஆய பயனென்கொல்...’ எனத் தொடங்கும் குறளையும் விளக்கத்தையும் பதிந்து, `தி.க-வையும் தி.மு.க-வையும் நம்பி வாழும் கம்யூனிஸ்ட்டுகளும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும்’ என ஒரு ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதில் சேர்க்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் படம்தான் சர்ச்சைகளுக்குக் காரணம்.

அந்தப் படத்தில் காவி நிற உடை, கை மற்றும் நெற்றியில் திருநீறுப்பட்டை சகிதமாக திருவள்ளுவர் காட்சியளிக்க, அதிர்ந்துபோன நெட்டிசன்கள் பலர் #BjpInsultsThiruvalluvar என்ற ஹேஷ்டேக்கில் தங்களது குமுறல்களைக் கொட்டியிருந்தனர். இன்னும் சிலரோ, வள்ளுவருக்கு சிலுவையும் மாலையும் அணிவித்து கிறிஸ்துவரைப்போலவும், குல்லா அணிவித்து இஸ்லாமியரைப்போலவும் ஷேர் செய்து அதகளம் செய்தனர். திருவள்ளுவர் என்றதுமே முகம் நிறைய தாடி, கையில் எழுதுகோல், தீர்க்கமான பார்வையுடன் ஓர் உருவம் கம்பீரமாக நம் மனக்கண்ணில் தோன்றும். உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் தூரிகை மூலம் உயிர்கொடுத்து நம் மனதில் பதியவைத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. நெட்டிசன்கள் திருவள்ளுவரை ஏராளமான கெட்டப்களில் உலவவிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், முதன்முதலாக திருவள்ளுவர் உருவம் பெற்ற சுவாரஸ்யமான வரலாற்றைப் புரட்டுவோம்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1908-ம் ஆண்டு ராமசாமி சர்மாவுக்கும் ஜானகி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர் கே.ஆர்.வேணுகோபால். வீட்டில் இருந்தபடியே கல்வி, ஓவியம், இசை, நாட்டியம் என ஆயக்கலைகள் பலவற்றை கற்று, பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர்; திருக்குறள்மீது தீராக் காதல்கொண்டவர். அவருக்கு 12 வயதிருக்கும்போது, ‘திருவள்ளுவர் எப்படி இருப்பார்?’ என்ற கேள்வி மனதில் எழுந்திருக்கிறது. பல நூறுமுறை எப்படி எப்படியோ வரைந்து பார்த்திருக்கிறார். எல்லாம் திருப்தியில்லாமல்போக, தன் இளமைக்காலம் முழுவதையுமே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சியிலேயே கழித்திருக்கிறார்.

வேணுகோபால் சர்மா
வேணுகோபால் சர்மா

இதற்கிடையே வெள்ளையர்களுக்கு எதிராக நாடகக் குழுவை ஆரம்பித்த காரணத்தால், அவரை போலீஸ் தேட, பம்பாய்க்குத் தப்பி ஓடியவர், பிரபல திரைப்பட இயக்குநரான பகவான் தாதாவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்டார். சென்னை வந்து திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி, `நாத விஜயம்’, `தெய்வீகம்’, `மை சன்’ போன்ற படங்களைத் தயாரித்து இயக்கினார். சில படங்களிலும் நடித்தார். பிறகு சினிமாவிலிருந்து முழுமையாக விலகிவிட்டார்.

அதன் பிறகு, திருவள்ளுவர் ஓவியம் வரைவதிலேயே முழு நேரத்தையும் செலவுசெய்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான வள்ளுவர் உருவங்களை வரைந்தவருக்கு, திடீரென ஒரு கணத்தில் தான் எதிர்பார்த்த திருவள்ளுவர் உருவம் பிடிபட்ட உணர்வு. அதை வரைந்தார். அந்த நேரத்தில் தற்செயலாக அங்கு சென்ற பாவேந்தர், கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்த படத்தைப் பார்த்து ‘அட... நம்ம வள்ளுவர்தானே!’ எனச் சிலிர்த்துக் கேட்டிருக்கிறார். அதன் பிறகு தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மு.வரதராசனார், கண்ணதாசன், எஸ்.எஸ்.வாசன் எனப் பல்வேறு அறிஞர்கள் இந்த வள்ளுவர் படத்தைப் பார்த்து அங்கீகரித்திருக்கிறார்கள்.

1964-ம் ஆண்டு பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது, அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேனால் அந்தப் படம் சென்னை சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது. அதுதான் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு நாட்டுடைமை யாக்கப்பட்டது. அதை, மத்திய அரசு அஞ்சல்தலையாகவும் வெளியிட்டது. திருவள்ளுவர் படமாக உருப்பெற்றதற்கான நுட்பமான காரணங்களை கே.ஆர்.வேணுகோபால் சர்மா புத்தகமாகவே எழுதியிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகமும் அந்த நூலை ஆராய்ந்து, 2012-ம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. திருவள்ளுவரின் உருவத்தை அவர் திருக்குறளின் தரவுகளிலிருந்துதான் வரையவே செய்திருக்கிறார் என்பதும் அந்த நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நெற்றி, கழுத்து, மார்பு... என ஒவ்வொரு பாகமும் வரையப்பட்டதற்கான காரணங்களை எழுதியுள்ள வேணுகோபால் சர்மா, அந்த உருவத்தில் ஏன் மதச்சாயங்களோ, சமயக்குறிகளோ இல்லை என்பதற்கு வைத்த பதில்... `உலகப் பற்றிலிருந்தும் சமயப் பற்றிலிருந்தும் திருவள்ளுவர் விலகிதான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், ஏதாவது மதத்தையோ, சமயத்தையோ தழுவிய நன்மொழிகள் திருக்குறளில் எங்கும் தென்படவில்லை. அப்படி இருந்தால், அந்தக் காலத்தில் வாழ்ந்த மத, சமய வெறியர்களிடமாவது கருத்து மாறுபாட்டையும் கண்டனங்களையும் எழுப்பியிருக்கும்’ எனக் குறிப்பிடுகிறார். இதை அன்று இருந்த அறிஞர் பெருமக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இன்றோ, அரசியல் ஆதாயத்துக்காக வரலாற்றை மறைத்து அவருக்கு மதச்சாயம் பூசி அரசியல் செய்கிறார்கள்.

ஆர்.கே.வேணுகோபால் சர்மாவின் இரண்டாவது மகனான எழுத்தாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமைகொண்ட ராம் சர்மா, “தமிழகத்தின் ஓவியக்கலையை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர் என் தந்தை. தன் நாற்பது ஆண்டுக்கால உழைப்பை திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் கொடுத்துச் சென்றவர். எந்த நிலையிலும் எந்த அரசாங்கத்திடமும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காது வாழ்ந்து மறைந்தவர். அடுத்த மாதம் அவரது 110-வது பிறந்த நாள் வருகிறது. இந்த நேரத்தில் இப்படியொரு சர்ச்சை எழுந்திருப்பது வேதனையளிக்கிறது” என்று ஆதங்கத்தோடு முடித்துக்கொண்டார்.

வேணுகோபால் சர்மாவின் 110-வது பிறந்த நாள் விழாவை அரசு கொண்டாடினால், அவருக்கு பெருமை சேர்த்ததுபோலவும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோலவும் இருக்கும்.