Published:Updated:

இன்னும் ஓயாத சர்ச்சை... அல்லல்படும் அய்யன் வள்ளுவர்!

திருவள்ளுவர் சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
திருவள்ளுவர் சிற்பம்

திருவள்ளுவருக்கு காவி உடை தரித்த விவகாரம் பற்றியெரிகிறது. `திருவள்ளுவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்; இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்’ என ஆளாளுக்குக் கொடி பிடிக்க, படாதபாடுபடுகிறார் அய்யன் வள்ளுவர். இந்தச் சர்ச்சைகள் வெடிப்பதற்கான பின்னணி என்ன?

இன்னும் ஓயாத சர்ச்சை... அல்லல்படும் அய்யன் வள்ளுவர்!

திருவள்ளுவருக்கு காவி உடை தரித்த விவகாரம் பற்றியெரிகிறது. `திருவள்ளுவர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்; இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்’ என ஆளாளுக்குக் கொடி பிடிக்க, படாதபாடுபடுகிறார் அய்யன் வள்ளுவர். இந்தச் சர்ச்சைகள் வெடிப்பதற்கான பின்னணி என்ன?

Published:Updated:
திருவள்ளுவர் சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
திருவள்ளுவர் சிற்பம்

எழுத்தாளர் வே.மதிமாறனிடம் பேசினோம். ‘‘மனுதர்மம் உள்ளிட்ட இந்துமத நூல்கள், ‘சூத்திரர்கள் படிக்கக் கூடாது. படித்தால் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்’ என்றுதான் கூறின. வள்ளுவரோ, ‘கல்லாமை குற்றம்’ எனக் குறிப்பிட்டதோடு, ‘கல்வி கற்காதவன் வடிகட்டிய முட்டாள். அவனுக்கு இருப்பது கண் அல்ல புண்’ என்றும் குறிப்பிடுகிறார். மகாபாரதம், தன் மனைவியையே பணயமாக வைத்து சூதாடிய தருமனை நாயகனாக முன்னிறுத்து கிறது; தேவர்களும் அசுரர்களும் சோம பானம், சுரா பானம் அருந்தியதாகச் சொல்கிறது. ‘மாமிசத்தை எப்படி வேகவைத்து உண்ண வேண்டும்’ என்று இந்து மத வேதமான ரிக் சுலோகம் விளக்குகிறது. ஆனால், குறளில் ‘கள்ளுண்ணாமை’ அதிகாரம், சூதாட்டம் மற்றும் மதுப் பழக்கத்தைக் கண்டிக்கிறது. ‘புலால் உண்ணாமை’யையும் குறள் வலியுறுத்துகிறது. திருக்குறள் இந்து மத நூல் என்றால், மகாபாரதம், மனுதர்மம், ரிக் உள்ளிட்ட இந்து மத நூல்களை பா.ஜ.க-வினர் கண்டிக்கத் தயாரா?

திருக்குறள் இந்து நூல் என்றால், ‘இந்துக்கள் அனைவரும் திருக்குறள் படிக்கவேண்டும்’ என்று ஏன் இதுவரை சொல்லவில்லை. திருக்குறளைக் கோயிலுக்குள் ஏன் அனுமதிக்கவில்லை.
மதிமாறன்
மதிமாறன்

திருக்குறள் இந்து நூல் என்றால், ‘இந்துக்கள் அனைவரும் திருக்குறள் படிக்கவேண்டும்’ என்று ஏன் இதுவரை சொல்லவில்லை. திருக்குறளை கோயிலுக்குள் ஏன் அனுமதிக்கவில்லை? குறளில் மந்திரம் இல்லை என்று காரணம் சொன்னால்கூட, மகாபாரதம், ராமாயணம்போல் கதாகாலட்சேபமாவது செய்திருக்கலாமே! திருக்குறள் இந்து நூலாக இருந்திருந்தால், ‘இந்து மன்னர்கள்’ என்று நீங்கள் சொல்லக்கூடிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஏன் திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை?

திருக்குறளை ‘தீக்குரல்’ என்று விமர்சித்த காஞ்சி சங்கரமடத்தை, பா.ஜ.க-வினர் எதிர்ப்பார்களா? அனைத்து மதத்தினரும் படித்துவரும் பல்கலைக்கழகங்களில், ‘இது மத நூல் அல்ல’ என்று சொல்லி பகவத் கீதையைப் பாடமாக்கிய நீங்கள், பொதுமறையான திருக்குறளை ‘இந்து மத நூல்’ என்று சொல்லி ஏன் கொச்சைப்படுத்துகிறார்கள்? வெளிநாடுகளுக்குப் போய் வள்ளுவரை உதாரணம் காட்டிப் பேசும் பிரதமர் மோடி, ‘குறள்தான் இந்தியாவின் தேசிய நூல்’ என்று ஏன் அறிவிக்கவில்லை?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘நாமெல்லாம் இந்துக்கள்; ராமர்தான் நம் கடவுள்’ என்றெல்லாம் சொல்லியும் தமிழ்நாட்டில் தாமரை மலரவில்லை. அதனால், தமிழ் உணர்வுகள் வழியாகவே தமிழர்களைச் சென்றடைய முடியும் என்ற அரசியல் நோக்கில்தான், பகவத் கீதையைத் தூக்கித் தூர வைத்துவிட்டு இப்போது திருக்குறளை கையில் எடுக்கிறார்கள்.

கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக இங்கே வந்த வெள்ளைக்கார பாதிரியார்களான ஜி.யு.போப், கால்டுவெல் போன்றோர் தமிழையும் திருக்குறளையும் முழுவதுமாகக் கற்றறிந்துதான், ‘இது உலகப் பொதுமறையாக இருக்கிறது’ என்றனர். அதன் பிறகே ‘உலகின் சிறந்த மொழி தமிழ்’ என்று கூறி, திருக்குறளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். இந்து நூலாக இருந்திருந்தால், அவர்கள் எப்படி திருக்குறளை மொழிபெயர்த்திருப்பார்கள்? திருக்குறள் இந்து நூல் என்றால், அதை உலகெங்கும் பிரசாரம் செய்த கிறிஸ்துவப் பாதிரியார்களை நீங்கள் பாராட்டுவீர்களா?

திருவள்ளுவர், சமண அல்லது சைவத் துறவியாக இருந்திருக்கலாம். ஆனால், கண்டிப்பாக அவர் நாத்திகர் இல்லை என்பது குறள்களிலிருந்தே தெரியவருகிறது.
 மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

இங்கே வந்து வேட்டி கட்டுவதும், வெளிநாடு சென்று ‘தமிழ் சிறந்த மொழி’ என்று பேசுவதுமாக உள்ள பிரதமர் மோடிக்கு, தமிழைப் பற்றியோ திருக்குறளைப் பற்றியோ ஏதாவது தெரியுமா? இவர்கள், திருவள்ளு வரை காவிமயமாக்குவதும் திருக்குறளை ‘இந்து நூல்’ என்று தூக்கிப் பிடிப்பதும் ‘தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை எப்படியாவது வளர்க்க வேண்டும்’ என்ற அரசியல் காரணத்துக்காக மட்டுமே. நாங்கள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் இவர்களால் பதில் சொல்லவே முடியாது’’ என்றார் அழுத்தமாக.

வே.மதிமாறனின் கேள்விகளை பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணனிடம் முன்வைத்தோம்.

‘‘திருவள்ளுவர் இந்துதான் என்று நாங்கள் யாருக்கும் சான்றிதழ் காட்டத் தேவையில்லை. ஏனெனில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலிலேயே தெய்வமாக அவர் வீற்றிருக்கிறார். அங்கே விநாயகர், முருகன், சிவன், பார்வதி சந்நிதிகளும் இருக்கின்றன. மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறதா இல்லையா என்பது, இதை சர்ச்சையாக்கும் தி.மு.க-வினருக்குத் தெரியாதா? மயிலாப்பூரில் நடைபெறும் 63 நாயன்மார்கள் திருவிழாவின்போது, திருவள்ளுவர் உற்சவமூர்த்திக்கும் காவித்துணி கட்டி, திருநீறு பூசி வீதியுலா வருவதெல்லாம் தி.மு.க-வினருக்குத் தெரியாதா?

இந்திரன், பிரம்மா என இந்து மதக் கடவுள்கள் மட்டுமல்லாது, ஊழ்வினை பயன்குறித்தும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. மறுபிறவி, ஏழு ஜென்மம் என்பதெல்லாம் இந்து மதத்தைத் தவிர வேற்றுமதங்களில் கூறப்படாதவை. இவைகுறித்தெல்லாம் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. மேலும், திருக்குறள் எழுதப்பட்ட காலகட்டத்தில், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களே கிடையாது. எனவே, திருவள்ளுவர் இந்துதான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இந்து மதத்துக்கென தனியாக எந்த ஒரு நூலும் இல்லை. மனுதர்மம், இந்து மதத்தின் புனித நூல் என்று யாருமே சொல்லவில்லை. பகுத்தறிவாளர்கள் என்று சொல்லக்கூடிய இவர்களுக்கு இந்தியும் புரியாது; சம்ஸ்கிருதமும் தெரியாது. மனுதர்மம் என்றால் என்ன, சனாதன தர்மம் என்றால் என்ன என்பதெல்லாம் இவர்களுக்குத் தெரியாது. ஒரு மனிதன் சூதாடினால், அவனின் குடும்பம் எந்த நிலைக்குள்ளாகும் என்பதை எடுத்துச் சொல்வதுதான் மகாபாரதம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

திருக்குறள் எழுதப்பட்ட காலகட்டத்தில், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களே கிடையாது. எனவே, திருவள்ளுவர் இந்துதான் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
 நாராயணன்
நாராயணன்

இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர் களுக்கும் குர்ஆனும் பைபிளும்தான் புனித நூல்கள். அவர்கள் குறளை புனித நூலாக ஏற்க மாட்டார்கள். எங்களைப் பொறுத்தவரை திருக்குறள் என்பது தமிழுக்கான, உலகத்துக்கான நூல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த நூலை எழுதிய திருவள்ளுவர் இந்து என்பதில் உண்மையிலேயே நாங்கள் பெருமை கொள்கிறோம்’’ என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித் துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘திருவள்ளுவருக்கு திருநீறு பூசுவது, சிலுவை அணிவிப்பதெல்லாம் அவரவர் விருப்பம்’ என்று பேசியிருப்பதும் விவாதப் பொருளாகியுள்ளது.

இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ‘‘1800-களில் பிரிட்டிஷ் அதிகாரியாக சென்னை வந்த லார்டு எல்லீஸ் என்பவர்தான் முதன் முதலாக திருவள்ளுவரின் உருவத்தை தங்க நாணயத்தில் வடிவமைத்தார். அதில், வள்ளுவரின் உருவம் ஜைன மதத் துறவி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் ஒப்புக்கொண்டிருக்கும் திருவள்ளுவரின் கம்பீரமான உருவ அமைப்பு, 1959-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வேணுகோபால் சர்மா என்பவரால் வரையப்பட்டது.

1970-களில், ‘திருவள்ளுவரை சமண மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்தவராக மாற்றும் செயல் நடைபெறுகிறது’ என்று சர்ச்சை கிளம்பியது. ஆனாலும் அரசியல்ரீதியாக அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இப்போது திருவள்ளுவரை `இந்து மத ஞானி’ என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, திருவள்ளுவர் சமண அல்லது சைவத் துறவியாக இருந்திருக்கலாம். ஆனால், கண்டிப்பாக அவர் நாத்திகர் அல்ல என்பது குறள்களிலிருந்தே தெரியவருகிறது. பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயத்தையும் ஆவணக்காப்பகத்தில் உள்ள ஆவணங்களையும் ஆராய்ந்தால், இந்தக் குழப்பங்களுக்கு விடை கிடைக்கலாம்.

இன்னும் ஓயாத சர்ச்சை... அல்லல்படும் அய்யன் வள்ளுவர்!

திருக்குறளின் மூல வடிவம் எது, 133 அதிகாரங்களையும் வரிசையாகத் தொகுத்தளித்தது யார் என்ற கேள்விகளுக்கெல்லாம் இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை. திருவள்ளுவர் தமிழர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘இதுதான் திருவள்ளுவர் உருவப்படம். இதில் மாற்றம் செய்யக் கூடாது’ என்று அரசு ஆணை இருந்திருந்தால், இதுபோல் யாரேனும் மாற்றம் செய்ய முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரைவில் ஆராய்வோம்’’ என்றார்.

இதுவரை குறள்களுக்குத்தான் வெவ்வேறு விளக்கம் கொடுத்து வந்தார்கள். இப்போது வள்ளுவருக்கே வெவ்வேறு வடிவம் கொடுத்து புதிய குறளையும் எழுதுகிறார்கள்!