Published:Updated:

தி.மலை: `பேத்தி வயது பெண்ணுடன் காதல் திருமணம்!’ - சர்ச்சையில் 67 வயது தி.மு.க நிர்வாகி

கவிஞர் சுந்தரேசன்
கவிஞர் சுந்தரேசன்

பேத்தி வயதுடைய இளம்பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்திவரும் தி.மு.க நிர்வாகி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

திருவண்ணாமலையை அடுத்த சாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞர் சுந்தரேசன் (67). தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கத்தில் பயணிக்கிறார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியிடம் உதவியாளராகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சுந்தரேசன், தற்போது தி.மு.க-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாக வலம்வருகிறார்.

மணக்கோலத்தில் சுந்தரேசன்
மணக்கோலத்தில் சுந்தரேசன்

தி.மு.க-வில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக தற்போது பொறுப்பு வகிக்கும் சுந்தரேசன், தொடர்ந்து ஆறு முறை சாவல்பூண்டி ஊராட்சித் தலைவராகவும் தேர்வாகியிருக்கிறார். சிறந்த பேச்சாளராகவும், கொள்கை பிடிப்பாளராகவும் இருப்பதால் அறிவாலய வட்டாரத்திலும் இவர் நன்கு பரிச்சயம். இப்படிப்பட்ட நற்பெயர் கொண்ட சுந்தரேசன், திடீரென சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயதுடைய அபிதா என்ற இளம்பெண்ணை சுந்தரேசன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ஏற்கெனவே, மனைவி, மகன், மகள், பேரப்பிள்ளைகள் இருக்கும் நிலையில் பேத்தி வயதுடைய இளம்பெண்ணை மூன்று ஆண்டுகளாகக் காதலித்து, அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டிருப்பது, பொதுத்தளத்தில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கவிஞர் சுந்தரேசன்
கவிஞர் சுந்தரேசன்

அபிதா என்ற அந்த இளம்பெண், திருவண்ணாமலையிலுள்ள கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்ததாகக் கூறப்படுகிறது. சிறந்த பேச்சாளராகவும் அபிதா அறியப்படுகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். இது குறித்து, சுந்தரேசனிடம் கேட்டபோது, ``நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது உண்மைதான். ஏற்கெனவே, பொதுவெளியில் இந்த விவகாரம் பேசப்பட்டுவருகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு