Published:Updated:

தி.மலை: `யார் கெத்து...’ ஸ்டேட்டஸ் வைத்ததால் நடந்த விபரீதம்! - வைரல் வீடியோவின் பின்னணி

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பென்னாத்தூர் அரசுப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை முட்டிப்போடவைத்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பள்ளி மாணவர் ஒருவரை, மற்றொரு மாணவர் தாக்கும் வீடியோ பரவி மக்களைப் பதறச்செய்தது. பெரும் விவாத்தை ஏற்படுத்திய அந்தச் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம். கீழ்பென்னாத்தூரிலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது தெரியவந்திருக்கிறது. என்ன நடந்தது என்று உண்மைநிலையை அறிய, அந்தப் பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரித்தோம்.

பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்களுக்கிடையே யார் கெத்து என்று நடந்த போட்டியே மோதலுக்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சீனு (12-ம் வகுப்பு), சீனுவின் தம்பி சத்யா (10-ம் வகுப்பு), பரணி (12-ம் வகுப்பு) ஆகியோரே இந்த மோதலில் தொடர்புடையவர்கள். இதுபோக, பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களான பாரதி, மனோஜ், சரவணன் மூவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் (அனைத்து மாணவர்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).

அரசுப்பள்ளி, கீழ்பென்னாத்தூர்
அரசுப்பள்ளி, கீழ்பென்னாத்தூர்

பாரதி, சீனு, சத்யா ஆகியோர் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோஜ், சரவணன், பரணி ஆகியோர் மற்றொரு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதற்கு முன்பாக அவர்களுக்குள்ளாக சின்னச் சின்ன மோதல்கள் இருந்துவந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பாக, பரணியை சீனுவின் நண்பர்கள் சேர்ந்து பேருந்து நிலையம் அருகே வைத்து தாக்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சி அங்குள்ள ஒரு கடையின் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அந்த வீடியோவை சீனு `ஸ்டேட்டஸ்' வைத்து, தன் கெத்தைக் காட்டியிருக்கிறார். இது தெரிந்து ஆத்திரமடைந்த பரணி, பள்ளி நேரத்தில் சீனுவை அடிக்கச் சென்றபோது, யதேச்சையாக சீனுவின் தம்பி சத்யா அவரிடம் பிடிபட்டிருக்கிறார். சத்யாவைப் பிடித்து இழுத்துச் சென்ற பரணி, பள்ளியின் பின்புறமுள்ள ஒரு பகுதியில் முட்டிபோடவைத்துத் தாக்கியிருக்கிறார். இந்தச் சம்பவத்தை சரவணன் என்பவர் வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது அங்கு வந்த முன்னாள் மாணவர் மனோஜ் என்பவரும் சேர்ந்துகொண்டு சத்யாவைத் தாக்கியிருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.

தி.மலை: `முட்டி போடு... மன்னிப்புக் கேளு!’ அரசுப் பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்

இந்தச் சம்பவம் கடந்த 17-ம் தேதியன்று நடந்திருக்கிறது. தன் தம்பி தாக்கப்பட்டதை அறிந்த சீனு, 18-ம் தேதி பள்ளி வளாகத்திலேயே பரணியை அடிக்க முற்பட்டிருக்கிறார். அவர்களைத் தடுத்து மோதலை விலக்கிவிட்டு, ஆசிரியர்கள் பிரச்னை குறித்து விசாரித்தபோதுதான் நடந்த சம்பவங்கள் அனைத்தும் தெரியவந்தன.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தியிருக்கிறது பள்ளி நிர்வாகம். மீண்டும் பிரச்னை வரலாம் என்பதால் பத்து நாள்கள் தற்காலிகமாக மாணவர்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அப்போது, வழக்கு ஏதும் பதியப்படவில்லை. எடுத்த வீடியோ பற்றி சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் கேட்டபோது, `அவற்றை டெலிட் செய்துவிட்டதாக'க் கூறியுள்ளனர். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை (19.02.2021) அன்று இணையத்தில் அந்த வீடியோ கசிந்தது.

கவுன்சலிங் கொடுக்கும் காவல் ஆய்வாளர்
கவுன்சலிங் கொடுக்கும் காவல் ஆய்வாளர்

பின், அது பலராலும் பகிரப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தலைமை ஆசிரியர், கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் வீடியோ பகிரப்பட்டது குறித்துப் புகாரளித்தார். அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் மகாலட்சுமி பள்ளிக்கு வந்து, அனைத்து மாணவர்களிடமும் இது போன்ற பிரச்னைகளால் ஏற்படும் விளைவு குறித்து விளக்கிக் கூறி கவுன்சலிங் அளித்துச் சென்றிருக்கிறார்.

கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமியிடம் பேசினோம். ``இந்த பிரச்சனை கடந்த 17-ம் தேதி நடந்திருக்கிறது. அதை விசாரித்ததில்,`யாரு கெத்து, யார் பெரியாளு' என்ற பாணியிலேயே பிரச்னை நடந்திருக்கிறது. காதல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாக முழுமையாகத் தெரியவில்லை. தலைமையாசிரியர் கொடுத்த புகாரின் பேரில் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகிறோம். வீடியோ பகிரப்படாமல் இருப்பதற்கு சைபர் க்ரைம் துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறோம். அதற்கான நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு