Published:Updated:

`தி கேரவன்' பத்திரிகை, சி.பி.எம் உட்பட பல ட்விட்டர் பக்கங்கள் முடக்கம் - விவசாயிகள் பேரணி காரணமா?

ட்விட்டர் பக்கம் முடக்கம்
ட்விட்டர் பக்கம் முடக்கம் ( Twitter ss )

``ட்விட்டர் நிறுவனம் இப்படித் தொடர்ந்து செய்தால், இனி கதைகளும், ஒரு பக்கத்தினரின் கருத்துகளுமே ட்விட்டரில் நிரம்பி வழியும்...''

இந்தியாவில், ட்விட்டர் நிறுவனம் சில ட்விட்டர் பக்கங்களை இன்று (1.2.2021) மதியத்திலிருந்து முடக்கியிருக்கிறது. அவற்றில் `The Caravan' பத்திரிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமும் அடக்கம். சட்டபூர்வமான கோரிக்கைகளுக்குப் பிறகு ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. சட்டபூர்வமான கோரிக்கை யாரால் முன்வைக்கப்பட்டது, முடக்கத்துக்கான காரணம் என்ன என்பதெல்லாம் தெளிவாகச் சொல்லப்படவில்லை.

கிசான் ஏக்தா மோர்ச்சா ட்விட்டர் பக்கம்
கிசான் ஏக்தா மோர்ச்சா ட்விட்டர் பக்கம்
Twitter ss

குடியரசு தினத்தன்று, `விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது, காவல்துறையினரால் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்' எனக் களத்திலிருந்தவர் சொன்னதாக `கேரவன்' பத்திரிகையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதையடுத்து பொய்த் தகவல் பரப்புவதாக கேரவன் பத்திரிகை மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதை அடுத்து கேரவன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் வினோத்.கே.ஜோஸ், ``கேரவன் பத்திரிகையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

டிராக்டர் பேரணி:6 பத்திரிகையாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்! -இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம் கண்டனம்

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை அன்று ட்விட்டரில் பொய்த் தகவல் பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி சசிதரூர், பத்திகையாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், மிருணால் பாண்டே உள்ளிட்ட ஏழு பேர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ``பத்திரிகையாளர்களைக் குறிவைப்பது, நாம் கடைப்பிடிக்கும் ஜனநாயக மாண்புகளை மீறுவதும், மிதிப்பதுமே ஆகும்'' என்று வன்மையாகக் கண்டித்திருந்தது இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சம்மேளனம்.

முடக்கப்பட்ட மற்ற கணக்குகள்!

எழுத்தாளர் சஞ்சுக்தா பாசு (Sanjukta Basu), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் முகமது சலீம், சமூகச் செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா, பொருளாதார நிபுணர் அஜித் ராணடே ( Ajit Ranade), சினிமா, தொலைக்காட்சிகளில் நடித்துவரும் சுஷாந்த் சிங் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கிசான் ஏக்தா மோர்ச்சா, டிராக்டர் டு ட்விட்டர் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.

Twitter| ட்விட்டர்
Twitter| ட்விட்டர்
Pinterest
செங்கோட்டையில் மதக்கொடி; பா.ஜ.க தொடர்பு! - வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் தீப் சித்து யார்?
முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் அனைத்திலிருந்துமே, குடியரசு தினத்தன்று விவசாயகளின் போராட்டம் குறித்த ட்வீட்கள் பதியப்பட்டிருந்தாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ``ட்விட்டர் நிறுவனம் இப்படித் தொடர்ந்து செய்தால், இனி கதைகளும், ஒரு பக்கத்தினரின் கருத்துகளுமே ட்விட்டரில் நிரம்பி வழியும். உடனே முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் அனைத்தையும் செயல்பாட்டுக்குக் கொண் வர வேண்டும்'' என்று நெட்டிசன்கள் ட்விட்டர் நிறுவனத்தின் செயலுக்கு ட்விட்டரிலேயே கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு