Published:Updated:

`கடல்மீது பாலம் கட்ட எதிர்ப்பு' - சுதந்திர நாளில் கறுப்புக்கொடி ஏற்றிய கிராம மக்கள்

இரா.மோகன்
உ.பாண்டி

மோர்ப்பண்ணை கிராம மக்கள், கடல்மீது பாலம் அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், சுதந்திர தினத்தன்று கூடிய கிராம சபை கூட்டத்திலும் இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு.

மோர்ப்பண்ணை அருகே கடல் மீது கட்டப்பட்டு வரும் பாலம்
மோர்ப்பண்ணை அருகே கடல் மீது கட்டப்பட்டு வரும் பாலம் ( உ.பாண்டி )

ராமநாதபுரம் அருகே உள்ள உப்பூரில் அமைய உள்ள அனல்மின் நிலையத்தின் பயன்பாட்டிற்காக, கடல்மீது பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மோர்ப்பண்ணை கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்தனர். மேலும், தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில், சுதந்திர தினத்தன்று தங்கள் கிராமத்தில் கறுப்புக்கொடியை ஏற்றினர்.

பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்க கூடிய மக்கள்
பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்க கூடிய மக்கள்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில், தமிழக அரசு அனல்மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டு, அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது. தலா 800 மெகாவாட் திறன்கொண்ட 2 அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, அனல் மின் நிலையத்திற்குத் தேவையான கடல் நீரை எடுத்து வரவும், மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் சுடு நீரை கடலில் விடவும் குழாய்கள் கொண்டுசெல்வதற்காக கடல்மீது பாலம் அமைக்கும் பணி நடந்துவருகிறது.

கடற்கரையில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்திற்கு கடல்மீது மணலைக் கொட்டி, அதன்மீது பாலம் கட்டுவதால், தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் எனவும், அனல்மின் நிலையத்திலிருந்து வெளியாகும் சுடு நீரினால் கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தித் களங்களான அலையாத்திக் காடுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும் எனவும் கருதும் மோர்ப்பண்ணை கிராம மக்கள், கடல்மீது பாலம் அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும், சுதந்திர தினத்தன்று கூடிய கிராம சபைக் கூட்டத்திலும் இதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவுசெய்திருந்தனர்.

உப்பூர் அனல் மின்நிலையம்
உப்பூர் அனல் மின்நிலையம்
உ.பாண்டி

அதன்படி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க, மோர்ப்பண்ணை கிராமத்தில் இருந்து உப்பூர் வரை கறுப்புக்கொடி கட்டிய அவர்கள், உப்பூரில் உள்ள பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டத்திற்குத் திரண்டிருந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அனல்மின் நிலையப் பணிக்காக அமைக்கப்படும் பாலத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். அதை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து, அங்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன், மோர்ப்பண்ணை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரது சமாதானத்தை ஏற்க மறுத்த கிராம மக்கள், தங்களின் ஒரே தீர்மானமாக பாலம் அமைப்பதைக் கைவிட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் மாவட்ட ஆட்சியருடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாகவும், அதன் பின்னர் கிராம சபை கூட்டத்தை நடத்துவது எனவும் அதிகாரிகள் முடிவுசெய்தனர். இதனால் சுதந்திர தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

கிராம மக்களை சமாதானம் செய்யும் அதிகாரிகள்
கிராம மக்களை சமாதானம் செய்யும் அதிகாரிகள்
உ.பாண்டி

இதுகுறித்துப் பேசிய மோர்ப்பண்ணை கிராமத் தலைவர் கோவிந்தன், ''சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் வசித்துவரும் எங்கள் கிராமத்தின் ஒரே தொழில் மீன்பிடித் தொழில் மட்டும்தான். நாட்டுப்படகு மூலம் கரையில் இருந்து 3 கி.மீ தொலைவில் சென்று மீன்பிடித்து, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு வாழ்ந்துவருகிறோம். தற்போது, அதைப் பாதிக்கும் வகையில் கரையில் இருந்து 8 கி.மீ தூரத்திற்கு மணல் நிரப்பி, அதன்மீது பாலம் கட்டிவருகின்றனர். இதனால் கரையோர மீன்பிடிப்பில் ஈடுபடும் எங்களது நாட்டுப்படகுகள் அப்பகுதிக்குள் செல்ல முடியாது. மேலும், அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் மாசு கலந்த நீரினால் மீன்வளமும் பாதிக்கப்படும். எனவேதான் இதனை எதிர்க்கிறோம். எங்கள் எதிர்ப்பை பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவேதான், எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க கிராமம் முழுவதும் கறுப்புக்கொடி கட்டியும், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தினோம்'' என்றார்.