Published:Updated:

`35 குழுக்களாக பிரிந்த அதிகாரிகள்... ஒரே நாளில் சிக்கிய 10 பேர்!'- அதிர்ச்சியில் வேலூர் மக்கள்

லோகேஸ்வரன்.கோ

வேலூர் மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய, மேலும் பல போலி மருத்துவர்களை பிடிக்க 35 குழுக்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

போலி மருத்துவம்
போலி மருத்துவம்

வேலூர் மாவட்டம் முழுவதும், போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. மருத்துவர்களிடம் உதவியாளராக இருப்பவர்கள், மருத்துவம் சார்ந்த பணிகளைச் செய்யும் நர்ஸ்கள், மருந்தாளுநர்கள் போன்றோரும் சிகிச்சையளிக்கிறார்கள். 

போலி மருத்துவர்கள்
போலி மருத்துவர்கள்

10-ம் வகுப்புகூட படிக்காத பலர் கிளினிக் வைத்துக்கொண்டு தவறான சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாவதாகப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, விழித்துக்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் மூலை முடுக்கு வரை தீவிரமாக கண்காணித்தனர்.

போலி மருத்துவர்கள் பலரை கண்டறிந்த நிலையில், கலெக்டர் சண்முக சுந்தரம், எஸ்.பி பிரவேஷ்குமார், சுகாதாரத் துறை இணை இயக்குநர் யாஸ்மின் ஆகியோர் தலைமையில் 35-க்கும் மேற்பட்ட குழுவினர் இன்று காலையிலிருந்தே தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

போலி மருத்துவம்
போலி மருத்துவம்

இந்த குழுக்கள் தனித்தனியாகப் பிரிந்து மாவட்டம் முழுவதும் 50-க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தியது. இதில், 10 போலி மருத்துவர்கள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர். தவிர, 10-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் அதிகாரிகள் வருவதையறிந்து தப்பி ஓடிவிட்டனர்.

அவர்களைப் பிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கைதுசெய்யப்பட்ட போலி மருத்துவர்களின் கிளினிக்குகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. அதற்குள் இருந்த மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் யாஸ்மினிடம் பேசினோம்.

போலி மருத்துவர்கள்
போலி மருத்துவர்கள்

‘‘இன்னும் நிறையப் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களும் கைதுசெய்யப்படுவார்கள். தொடர்ந்து கண்காணித்துத்தான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் முழுவதுமாக களையெடுக்கப்படுவார்கள்’’ என்றார்.