கடந்த வருடம், டிசம்பர் மாதம் 15-ம் தேதி விழுப்புரம் நகரில் நடந்த சம்பவம் ஒன்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சுமார் 5 வயது சிறுவன் ஒருவன், இஸ்திரி வண்டியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட உருக்கமான சம்பவம்தான் அது. விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக, நிறுத்திவைக்கப்பட்டிருந்த இஸ்திரி வண்டியில் துணியால் போர்த்தப்பட்டபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் அந்தச் சிறுவன். அவனுடைய உடலை, பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த விழுப்புரம் மேற்கு காவல்துறையினர், `குழந்தை படுகொலை செய்யப்பட்டு தள்ளுவண்டியில் போடப்பட்டனா?’ எனப் பல சந்தேகக் கோணங்களில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், அந்தச் சமயத்தில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. அந்தச் சிறுவன் தமிழக அங்கன்வாடி குழந்தைகள் அணியும் சீருடையை அணிந்திருந்ததால், அவருடைய புகைப்படத்தை விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் அனுப்பிவைத்து அடையாளம் காணும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போதும் சிறுவன் குறித்த விவரங்கள் அறியப்படாமல் இருந்தது.
இந்நிலையில்தான், `சிறுவனின் குடலில் இரண்டு நாள்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் பசியால் உயிரிழந்திருக்கலாம்' என்ற பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி அனைவரையும் மனம் கனக்கவைத்தது. "உணவு, தண்ணீர் இன்றி இளம் குழந்தை உயிரிழக்கும் அவலநிலைக்கு இந்தச் சமூகம் சென்றுவிட்டதா?" எனும் ஆதங்க குரல்களும் அந்தச் சமயத்தில் ஒலித்தன. அதுவரை சிறுவனை யாரும் உரிமை கோராததால், `சிறுவன் யார்?' எனத் தெரியாமலும், தொடர் விசாரணை மேற்கொண்டும் சிறுவனின் மரணம் குறித்த காரணம் அறியப்படாததாலும் திணறிப்போனது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.

இதற்கிடையில், அந்தச் சிறுவனை இருவர் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
சிறுவனின் உடல் மீட்கப்பட்ட தினத்துக்கு முன்தினம் (14.12.2021) இரவு, விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்துவரும் இருவர், அவனைத் தோள்மீது தூக்கி வரும்படியான அந்த சிசிடிவி காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அதுவே இந்த விசாரணையில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அந்தக் காட்சிகளில், சிறுவனைத் தூக்கிச் செல்லும் நபர்கள் யார்? என காவல்துறையால் அடையாளம் காண முடியாதபடி இருந்தது இன்னும் சிக்கலாகிப்போனது.
குழந்தையின் மரணத்துக்கான காரணம் அறியப்படுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விசாரித்தபோது, ``இந்த வழக்கில் உள்ள சிக்கலுக்கு மாவட்ட காவல்துறையினரின் கவனக்குறைவே முதன்மையான காரணம். இப்போது வெளியான சிசிடிவி காட்சிகளும் அந்த வழியிலுள்ள தனியார் கடை போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டவையே. ஜெயக்குமார் எஸ்.பி-யாக இருந்தபோது பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் சரியாகப் பராமரிக்கப்படாததால் பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் விழுப்புரத்தில் இயங்கவில்லை. நெடுஞ்சாலையின் மையப் பகுதியிலும், சிக்னல் பகுதியிலும் உள்ள அரசு சிசிடிவி-க்கள் முறையாக இயங்கியிருந்தாலே காவல்துறை தற்போது சந்தேகப்படும் இருவரை ஓரிரு தினங்களில் எளிதில் பிடித்திருக்கலாம்" எனும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர் விவரம் அறிந்தவர்களும், சில சமூக ஆர்வலர்களும்.

அதையடுத்து, ``சிசிடிவி கேமராக்கள் நம்மிடம் இருக்கின்றன. சில சிசிடிவி-க்கள் பழுதாகிவிட்டன. அவற்றைச் சரிசெய்தபோதும், கொஞ்ச நாள்களிலேயே மீண்டும் பழுது ஏற்படுகிறது. எனவே, அவற்றைச் சரிசெய்வதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறோம்" என்று அந்த குற்றச்சாட்டுக்கு அந்தச் சமயத்தில் விளக்கம் அளித்திருந்தார் மாவட்ட எஸ்.பி.
அதன் தொடர்ச்சியாக, சிறுவனின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுவருவதாகக் கூறப்பட்டது. இருப்பினும் சமீபகாலமாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையிலேயே உள்ளது. தற்போது, அந்தச் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு நேற்றோடு சரியாக 100 நாள்கள் ஆகியுள்ளன. எனவே, இந்த வழக்கு விசாரணை நிலவரம் குறித்து மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் பேசினோம். ``இதுவரை சிறுவன் மரணம் தொடர்பாகச் சரியான துப்பு ஏதும் கிடைக்கவில்லை. விவரம் தெரியவரும்பட்சத்தில் தகவல் தெரிவிக்கிறோம்" என்றார் சுருக்கமாக.

24 மணி நேரமும் பரபரப்பாகக் காணப்படும் விழுப்புரம் நகரத்தில், 5 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியைவிட, 100 நாள்கள் ஆகியும் மரணத்தில் உள்ள மர்மம் விலகாமல் இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
விரைவில் விலகுமா சிறுவன் மரணத்தின் மர்மம்..?